அசுரன் – விமர்சனம்

தன் நிலத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிற உழைக்கும் வர்க்கத்தின் நியாயமான கோபமே ‘அசுரன்’.

 தன் மனைவி மஞ்சு வாரியர், மச்சான் பசுபதி மற்றும் 3 பிள்ளைகளுடன் தெக்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார் தனுஷ். தங்களிடம் இருக்கு சிறிய நிலத்தில் பயிரிட்டு வாழ்ந்துவரும் அவர்களுக்கு, வடக்கூரில் உள்ள ஆடுகளம் நரேன் மூலமாகச் சிக்கல் வருகிறது. சிமெண்ட் ஃபேக்டரி கட்டுவதற்காக அந்த ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் வாங்கிக் குவிக்கும் ‘ஆடுகளம்’ நரேனுக்கு, தனுஷிடம் இருந்து மட்டும் நிலத்தை வாங்க முடியவில்லை.

இதனால் ஏற்படும் பிரச்சினையில், ஆடுகளம் நரேன் ஆட்களால் தனுஷின் மூத்த மகன் டீஜே அருணாசலத்தின் தலை தனியாகத் துண்டிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்கு ஆளாகும் தனுஷ் குடும்பம், மகனை இழந்து பரிதவிக்கிறது. தன் மகன் இறக்கவில்லை, என்றாவது ஒருநாள் வந்துவிடுவான் என பித்து பிடித்தவர்போல் ஆகிவிடுகிறார் மஞ்சு வாரியர். தனுஷோ, துக்கம் தாளாமல் எந்நேரமும் குடித்துக்கொண்டே இருக்கிறார்.

16 வயதேயான தனுஷின் இரண்டாவது மகன் கென் கருணாஸ், தாய் – தந்தையை இந்தச் சூழ்நிலையில் இருந்து மீட்க அதிரடி முடிவொன்றை எடுக்கிறார். அந்த முடிவு என்ன? அதனால் தனுஷ் குடும்பம் எந்த மாதிரியான விளைவுகளைச் சந்திக்கிறது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மூலக்கதையாகக் கொண்டு ‘அசுரன்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கதைக்குள் தான் சொல்ல நினைத்த அரசியலையும், தனுஷுக்குத் தேவையான கமர்ஷியல் அம்சங்களையும் உட்செலுத்தியுள்ளார் வெற்றிமாறன். ஆனால், அது கொஞ்சம் கூட உறுத்தாமல், செம்புலப்பெயல் நீர் போல கதையோடு ஒன்றிணைந்து, நாவலைப் படித்து முடித்த திருப்தியைத் தருகிறது.

எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், கடினமாக உழைக்கும் கலைஞன் மட்டுமே காலத்துக்கும் நிலைத்து நிற்பான். அந்தவகையில், காலங்கள் கடந்தாலும் தனுஷின் பெயரைச் சொல்லும் படமாக ‘அசுரன்’ இருக்கும். இளவயது, கல்யாண வயதில் இருக்கும் மூத்த மகன் உள்ளிட்ட மூன்று பிள்ளைகளுக்கு அப்பா என இரண்டுவிதமான தோற்றங்களில் நடித்துள்ளார் தனுஷ். மீசை, தாடியை எடுத்தாலே போதும்… இயல்பாகவே காலேஜ் பையன் லுக் வந்துவிடுவது தனுஷுக்கு ப்ளஸ். அதைத் தாண்டி, அந்த வயதுக்கே உரிய உடல்மொழியையும் தன்னுடைய நடிப்பால் கொண்டு வந்து விடுகிறார். பொறுத்துப் பொறுத்துப் பொங்கியெழும் தனுஷின் அசுரத்தனமான நடிப்பு, அவருக்கு தேசிய விருதை வாங்கித்தரும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

முதல் மகனை இழந்து பரிதவிப்பதாகட்டும், கோபத்தில் வெடிப்பதாகட்டும், இரண்டாவது மகனின் அதிரடி முடிவால் பெருமைப்பட்டாலும் அவனைக் காப்பாற்றப் போராடுவதாகட்டும்… 100 சதவீதம் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் மஞ்சு வாரியர்.

இளம் வயதுக்கான குறும்புத்தனமும், தனுஷ் மகனுக்கே உரிய கோபம் என மிகக் கச்சிதமாக நடித்துள்ளார் கென் கருணாஸ். தனுஷுக்கு அடுத்து நடிப்பால் அதிகம் கவனிக்கப்படுபவர் இவர்தான்.

டீஜே அருணாசலம், குறைந்த நேரமே படத்தில் வந்தாலும், தன்னுடைய பங்களிப்பை அற்புதமாகத் தந்துள்ளார்.

இப்படி படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை சரியாகத் தேர்வு செய்துவிட்டால், படத்தின் பாதி வேலை முடிந்துவிட்டது என்பார்கள். வெற்றிமாறனின் நடிகர்கள் தேர்வு, இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. ஒவ்வொருவரிடமும் இம்மி பிசகாமல் வேலை வாங்கியிருக்கிறார். பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல் இவர்கள் மூவருக்கும் பெரிதாக வேலையில்லை என்பது மட்டுமே சிறிய மனக்குறை.

வெற்றிமாறன் என்றால் மட்டும் ஜி.வி.பிரகாஷுக்குத் தனி உற்சாகம் வந்து விடுகிறது போல… பின்னணி இசையில் வெறித்தனம். படத்தின் தீம் மியூஸிக், தனுஷின் அசுரத்தனத்துக்கு அழகு சேர்க்கிறது. காட்டை, கரடுமுரடான மலையை, நடிகர்களின் முகபாவங்களை இயல்பாக உள்வாங்கியிருக்கிறது வேல்ராஜின் கேமரா.

உழைக்கும் வர்க்கத்திடம் இருந்த நிலங்கள், முதலாளி வர்க்கத்தின் கைகளுக்கு எப்படிப் போனது, செருப்பு கூட அணிய விடாமல் அடிமையாக வைத்திருந்த விதம், உழைப்புச் சுரண்டல், என்னதான் அன்பு காட்டுவது போல் நடித்தாலும், உழைக்கும் வர்க்கத்தை முதலாளி வர்க்கம் எப்படி பாரபட்சத்தோடு நடத்தியது, போராட்டத்தின் மூலமே உரிமைகளைப் பெற முடியும், கல்வியைப் பிடுங்க முடியாது, ஆண்ட பரம்பரை என பல்வேறு அரசியல்களை அப்பட்டமாகப் பேசுகிறது இந்தப் படம். அடித்தட்டு மக்களின் குரல்களை ஆழமாகப் பேசிய தமிழ்ப் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது ‘அசுரன்’.

அதேசமயம், முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த அனைவருமே கெட்டவர்கள் எனக் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த பொதுக் கருத்தியலை உடைத்தெறிந்து, அதிலும் சில நல்லவர்கள் இருக்கின்றனர் என்பதைப் பஞ்சாயத்தார் மூலம் காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.

உழைக்கும் வர்க்கம் பொருளாதார ரீதியாக உயர்ந்துவிட்டால், மற்ற அனைத்திலுமே உயர்ந்துவிடுவார்கள். எனவே, அவர்களைப் பொருளாதார ரீதியாக உயரவிடாமல் செய்துவிட்டால், காலம் காலமாக அவர்களை அடிமையாகவே வைத்திருக்கலாம் என்பதுதான் முதலாளி வர்க்கத்தின் திட்டம். அதனால்தான், ஏதோவொரு காரணம் சொல்லி, குறைந்த விலைக்கு அவர்களிடம் இருந்த நிலங்களைப் பிடுங்கிக் கொண்டது முதலாளி வர்க்கம். இந்த 21-ம் நூற்றாண்டிலும் இதுதான் தொடர்கிறது. சமீபத்தில் ஒரு கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளைக் குறிப்பிட்ட சமூகத்தினர் அடித்து நொறுக்கியது நினைவிருக்கலாம். எனவேதான், தனுஷின் இளம்வயதிலும் சரி, முதிர் வயதிலும் சரி… உழைக்கும் வர்க்கத்தின் நிலம் பிடுங்கப்படுவதை அடிப்படையாக வைத்து சமூகத்தின் அடிநிலைப் பிரச்சினையைத் தெளிவாகக் காட்டியுள்ளார் வெற்றிமாறன்.

வெற்றிமாறனோடு இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை மணிமாறனும், வசனங்களை சுகாவும் எழுதியுள்ளனர். ஒரு படம் பார்க்கும்போது, ‘நமக்கும் இப்படி நடந்துருக்குல்ல’ என்று கடந்த காலத்துக்கோ அல்லது ‘நமக்கும் இதுமாதிரி நடந்தா நல்லாருக்கும்ல’ என புனைவுலகத்துக்கோ அழைத்துச் செல்வது பொதுவான இயல்பு. ஆனால், திரைக்கதையைத் தாண்டி இம்மியளவு கூட நம்மை யோசிக்க விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது திரைக்கதை.

‘நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்குவானுங்க… ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க… படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது’ என்ற வசனம், உழைக்கும் வர்க்கம் படிப்பால் மட்டுமே இன்று உயர்ந்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அடித்தட்டு மக்களில் பலர் வக்கீலுக்குப் படித்தவர்களாக இருப்பார்கள். வக்கீலான பிரகாஷ் ராஜ் தனுஷுக்கு உதவி செய்வது எனக் குறியீடுகளாலும் அரசியல் பேசியிருக்கிறது படம்.

கெட்ட வார்த்தைகள் என சில இடங்களில் ம்யூட் செய்யப்பட்டுள்ளன. மேலும், யு/ஏ தணிக்கைச் சான்றிதழுக்காக சில இடங்களில் வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. புத்தகங்கள் அச்சாகும்போது தவறுதலாக சில இடங்களில் அச்சு அழிந்து போயிருக்குமே… அப்படி அந்த இடங்களில் என்ன வசனம் இருந்திருக்கும் என்ற ஆவல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பழிக்குப் பழிவாங்கும் கதைதானே என இந்தப் படத்தைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. காரணம், உழைக்கும் வர்க்கத்தின் வலியும் அரசியலும் இந்தப் படத்தில் அழுத்தமாகப் பேசப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இந்த விமர்சனத்தின் முதல் வரியைப் படித்துப் பாருங்கள்.

Read previous post:
v5
“இனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்”: அப்புக்குட்டி கலகல பேச்சு!

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ

Close