“மிக மிக அவசரம்’ படத்தில் நான் நடிக்கவே இல்லை!” – ஸ்ரீபிரியங்கா

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ’மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

’கங்காரு’, ’வந்தா மல’, ’கோடைமழை’ படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கதாநாயகி ஸ்ரீபிரியங்கா, இந்தப் படத்தில் பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  நாயகனாக அரீஷ்குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.  இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். ’வழக்கு எண்’ முத்துராமன், E.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஸ்ரீபிரியங்கா இதுவரையில் நடித்துள்ள கனமான கதாபாத்திரங்களில் அவரது நடிப்பை பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்பதாலேயே ‘மிக மிக அவசரம்’ படத்தில் சாமந்தி என்கிற இந்த போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது என்கிறார் ஸ்ரீபிரியங்கா.

வரும் அக்-11ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார் ஸ்ரீபிரியங்கா..

“போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டுமல்ல, அதன்மூலம் பெண்களுக்கு ஒரு செய்தி செல்லக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும்  இந்த படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன்.

பொதுவாக ஒரு கதாநாயகிக்கு சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்து கிடைக்கும் இது போன்ற கதாபாத்திரம்! எனக்கு இவ்வளவு சீக்கிரமே கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது.. நான் இதுவரை இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எதையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை. நமக்கு வேண்டிய கதாபாத்திரம் எப்ப வரும் எப்படி வரும்னு தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் வந்தே தீரும் என்று மட்டும் நம்பினேன். அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை. பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலேயே நான் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணவே மாட்டேன்.. சொல்லப்போனால் இந்த படத்தில் நான் நடிக்கவேயில்லை..

இயக்குநர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்ததும் அதை முழுவதுமாக படித்து அந்த சாமந்தி கேரக்டராக நான் இருந்தால், எப்படி உணர்ந்து இருப்பேனோ அதையே ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக பிரதிபலித்து இருக்கிறேன்..

என்னை பார்ப்பவர்கள் நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியும் திரையில் பார்க்கும்போது வேறு மாதிரியும் இருப்பதாக சொல்வார்கள்.. அதுவே எனக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். அதனால் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே எளிதில் மாறிவிட முடிகிறது.

அந்தவகையில் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரம் என்றாலும், நான் கஷ்டப்பட்டு எதையுமே பண்ணவில்லை.. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்தே செய்துள்ளேன்.

பெரும்பாலான காட்சிகள் ஒரு பாலத்தின் மேலேயே எடுக்கப்பட்டதால் படப்பிடிப்பு நேரத்தில் கூட யாருடனும் பேச முடியாமல் தனியாகவே ஒதுங்கி நின்றேன். அதே சமயம் இயக்குநர் சுரேஷ் காமாட்சி நடிகர்களைத் தேர்வு செய்வதில் ஆகட்டும், அவர்களிடம் வேலை வாங்கும் விதத்தில் ஆகட்டும் ஒரு தேர்ந்த இயக்குநராகவே தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் என்னுடன் நடித்த சக நடிகர்களில் அரீஷ் குமார், வழக்கு எண் முத்துராமன், E. ராம்தாஸ் ஆகியோர் மிகுந்த ஒத்துழைப்பு தந்தனர்.

அதிலும் குறிப்பாக எனது உயரதிகாரியாக டெரர் போலீசாக நடித்த வழக்கு எண் முத்துராமன் நடிப்பதற்கு எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார்.. படத்தில் அவருக்கும் எனக்குமான காட்சிகளும் உரையாடலும் நிறைய இருக்கின்றன.

இந்த படத்தில் சீமான்  நடித்திருக்கிறார் என்பதே எனக்கு கடைசியில் தான் தெரிய வந்தது. எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆகவும் இருந்தது. அவ்வளவு பெரிய மனிதர் நடிக்கும் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே மிகப்பெரிய மகிழ்ச்சிதான்.

இந்த படத்தை ஒரு விஷயத்துக்காக மட்டும் அல்ல, பல விஷயங்களுக்காக கட்டாயம் பார்க்க வேண்டும்..

மிகமிக அவசரமான இந்த உலகில் நம் அருகில் உள்ளவர்களை, அவர்கள் படும் கஷ்டங்களை கண்டுகொள்ளாமலே பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.. ஒருநிமிடம் நின்று, பிரச்சனையான சமயத்தில் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என நினைத்து அவர்களுக்கு ஆறுதலாக உதவச் சென்றாலே நாட்டில் பல பிரச்சனைகள் தோன்றவே தோன்றாது.

அதேபோல சின்ன சின்ன படங்கள் தானே என்று தயவு செய்து ஒதுக்காதீர்கள்.. அதில்தான் வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும்..

இந்த படமும் அப்படித்தான்.. இந்த படம் வெளியான பின்பு மக்கள் அதற்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து, இனி எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து அதன் பிறகே படங்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்.. அதனாலேயே என்னைத் தேடி வந்த சில வாய்ப்புகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்..

எதிர்காலத்தில் இந்த மாதிரி கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்கிற எந்த ஒரு ஐடியாவும் என் மனதில் இல்லை. இந்த படத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் உருவாக்கும் வலுவான கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியங்காவை நடிக்க வைக்கலாம் என்று என்னை நம்பி வரும் இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்” என்கிறார் ஸ்ரீபிரியங்கா.