விளைவு தெரியாமல் வாளிகளை தூக்கிக் கொண்டு போய் நிற்பது முந்திரிக்கொட்டைத்தனம்!

இரண்டு சரக்கு கப்பல்களாம். ஒவ்வொண்ணும் செம நீட்டமாம். துறைமுகத்திலிருந்து ஒண்ணு கெளம்புச்சாம். இன்னொண்ணு உள்ளுக்க வந்துச்சாம். திடீர்னு பாத்தா ரெண்டும் இட்ச்சிக்கிச்சாம். கன்சைன்மெண்ட் ஓட்டையாகி ஆயில் ஸ்பில்லிங்காம்… ஆயில் ஸ்பில்லிங்காம்….!

‍‍‍‍‍‍ ‍‍இந்த துறைமுகம் என்கிறார்களே அது எது? எண்ணூர் துறைமுகமாம். காமராஜர் துறைமுகம் என்பார்கள். அதான் திருவொற்றியூர் – எண்ணூர் ரோடு ஃபுல்லா சரக்கு லாரியா நிறுத்தி புழுதி கெளப்பிக் கொண்டிருப்பார்களே, தட் துறைமுகம். ஒன் மொமண்ட் வெயிட்டிஸ். திஸ் ஸேம் துறைமுகம் வாஸ் இன் தெ நியூஸ் ஃபார் அனதர் இஷ்யூ? வாட் வாஸ் இட்?

2015-ல் சென்னையை கலக்கியெடுத்த சூரவெள்ளம் ஞாபகம் இருக்கிறதா? அந்த நிகழ்வுக்கான முக்கியமான காரணமாக அவதானிக்கப்பட்டது சென்னையின் ஏரிகள் அழிப்புதான். அதை சொல்லி உயர்நீதிமன்றம் காறி துப்பிய பிறகும், இன்றுவரை ஒரு புல்லை கூட பிடுங்கி போடவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அந்த வெள்ள பிரச்சினையிலும் சிரத்தையாக அமைக்கப்பட்டதுதான் இந்த எண்ணூர் துறைமுகம்.

எண்ணூர் முகத்துவாரத்தையும் அதை சுற்றியிருந்த மாந்தோப்புகளையும் அழித்து, கடலுக்குள் போக வேண்டிய நீரை நகரத்துக்குள் சுற்றவிட்ட முக்கியமான கல்ப்ரிட் இந்த துறைமுகம்தான். அப்போதே நிறைய பேசப்பட்டும், எதுவும் நடக்காமல் போனது. அவ்வளவு அழிவு ஏற்பட்ட போதும், மயிர் நுனியை கூட அசைத்துவிடாமல், செவ்வனே சுற்றுச்சூழலை அழித்து கொண்டிருந்த துறைமுகத்திடமும் அதற்கு அனுமதி கொடுத்த அரசிடமும் சென்று, ‘அய்யய்யோ, ஆயில் ஸ்பில்லிங், ஆயில் ஸ்பில்லிங்’ என்று இப்போது சொன்னால் லூசு அவர்களா நாமா?

ஜனவரி 28-ம் தேதி ஆரம்பித்தது ஸ்பில்லிங். எண்ணூர் துறைமுகம் தன் வாயை திறந்து, “நோ நோ.. நோ ப்ராப்ளம் அட் ஆல்… எவிரிதிங் அண்டர் கண்ட்ரோல்” என்றவர்கள், அடுத்த நாள் கடலில் கறுப்பு கசடுகளை பார்த்து மீனவ தோழர்கள் தாமாக முன்னின்று அவற்றை அகற்ற தொடங்கியதும், அதற்கு பின் தன்னார்வலர்கள் உடன் சேர்ந்ததும், அண்ணா சமாதி அம்மா சமாதி எல்லாம் தாண்டி கலங்கரை விளக்கம் வரை கடலில் கசடு பரவிய பிறகும், ஒன்றும் வாய் திறக்கவில்லையே! இப்போது போய் பார்த்தால் அவர்களுக்கு மூக்குக்கு கீழ் ஸ்ட்ரெயிட்டாக கழுத்து தொடங்கியிருக்கும். வேர் வெண்ட் தெ ஸேம் வாய்? நேற்று கூட நம்ப முதல்வர் அப்பிடிக்காதான் வந்து அண்ணா சமாதியில் மலர் வளையம் வச்சிட்டு போனார்!

இன்னொரு டவுட். ஒரு கப்பல் உள்ள வந்துச்சாம். இன்னொரு கப்பல் வெளியே போச்சாம். அப்பதான் இந்த அனெக்ஸ்பக்டட் ஆக்ஸிடண்டாம். சரி. உடையற அளவுக்கான ஸ்பீட்ல துறைமுகத்துக்குள்ள கப்பல் மொதல்ல வருமா? அதவிட முக்கியமா, கப்பல் ஒண்ணு வெளியேறுற நேரத்துல எப்படி இன்னொரு கப்பல உள்ள நுழையறதுக்கு அனுமதி கொடுப்பாங்க? நம்ப கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்லேயே, உள்ள பஸ் போறதுக்கு ஒரு வழியும் வெளியேறுறதுக்கு இன்னொரு வழியும்தான வச்சிருக்காங்க. அதையெல்லாம் கணக்கு வச்சிதான் கோயம்பேடு டிராபிக் போலீஸ் சிக்னலே விடுறாரு. அவருக்கு இருக்குற காமன்சென்ஸ் கூட இல்லாதவங்கள வச்சித்தான் நம்ம துறைமுகத்த நிர்வகிக்கிறோமா? இல்ல, இங்க வேற எதாவது விஷயம் இருக்கா?

உலக நாடுகள் குப்பை போட இடம் இல்லாமல் தவிக்கின்றன. மின்னணு, உயிரியல், மருத்துவ கழிவு என பலதரப்பட்ட கழிவுகள் டன் டன்னாய வைத்துக் கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றன. நுகர்வு பெருக்கத்துக்கு அலையும் நாடுகள் கழிவு அகற்றலை பற்றி கவலைப்படுவதே இல்லை. பெரும்பாலும் மூன்றாம் உலகநாடுகளைத்தான் முன்னேற்ற திட்டங்கள் என்ற பெயரில் தங்களின் குப்பை மேடுகளாக மாற்றி கொள்கின்றன. அப்படி ரஷியாவின் அணுக்குப்பை மேடுதான் கூடங்குளம். முதல் உலக நாடுகள் அளவுக்கு மிரட்டும் சாமர்த்தியம் இல்லாத இரண்டாம் உலக நாடுகள் அவ்வப்போது சில விபத்துகள் வழி தங்கள் குப்பையை கழித்து விடும்.

மெரினாவில் கலந்திருக்கும் க்ரூட் ஆயில் என சொல்லப்படுவது அரபு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கேள்வி. அது க்ரூட் ஆயில்தானா என்பது அடுத்த கேள்வி. ஏனெனில் அந்த சரக்கை இறக்க வந்து, துறைமுகம் அனுமதி மறுத்து அந்த சச்சரவிலேயே கப்பல் இரண்டு நாட்கள் நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு பின், எண்ணேய் கசிகிறது. அதை காரணம் காட்டி, உள்ளே விட கப்பலில் இருந்து அனுமதி கேட்கிறார்கள். துறைமுகத்தார் சோதனை என நடத்துகிறார்கள். அந்த தாமதத்தில் கசிவு துறைமுகத்தை மிஞ்சி விடுகிறது. இது வெறும் ஈகோ பிரச்சினையா அல்லது தமிழ்நாட்டை குப்பை மேடாகவே பாவிக்கும் மத்திய அரசு திட்டத்தின் மற்றொரு பகுதியா என்பதும் தெரியவில்லை. முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை அரசும் செய்யாது. துறைமுகம் ம்ஹூம். நீதிமன்றங்கள் ஸ்ஸப்பா!

அப்புறம் நம் தன்னார்வலர்கள். நம் பலம் நமக்கு தெரியும். காட்டியும் இருக்கிறோம். ஆனால் அரசை நிர்ப்பந்திக்க வேண்டிய இடங்களிலும் நாம் வாளியை தூக்கிக் கொண்டு இறங்குவது. அரசின் accountability-ஐ சிதைக்கும் வேலை. மட்டுமல்லாமல், பேரிடர் மேலாண்மை குழு எங்கு இருக்கிறது, கடலின் எண்ணெய் கசிவு ஏற்படும்போது செய்ய வேண்டியன என மத்திய அரசு 1993-ம் ஆண்டில் வகுத்து, 2015-ல் சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்தியிருப்பதாகவும் சொன்ன National Oil Spill Disaster Contingency Plan-ன் லட்சணம் என்ன என கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது. என்ன கழிவு என்பதை பற்றியே அரசுகள் வாய் திறக்க மறுக்கும் நிலையில் வாளிகளை தூக்கி சென்று நிற்பது ஆர்வக்கோளாறுத்தனம்.

நிர்வாக பொறுப்பில் இருக்கும் முதல்வர் எதையும் பிடுங்காமல் ‘இளைஞர்களே ஓடி வாருங்கள்’ என்பாராம். நாமெல்லாம் சென்று நிற்க வேண்டுமாம். அப்படி அழைக்க அவர் என்ன பெரிய சாக்ரடீசா, இல்லை நாம்தான் ஏதேன்ஸ் நகரின் அறிவார்ந்த இளைஞர்களா? கழிவை அள்ளி அது உடலை பாதிப்பது மட்டுமல்லாமல், அந்த கேப்பில் இந்த தொப்பிகள் கிளம்பி வந்து லத்தி சுத்தி, நாம் ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது வெட்கமே இல்லாமல் துறைமுகத்தாரும் கேப்டன்ஸ் ஆஃப் தெ ஷிப்ஸ்ஸும் கிளம்பி போய், ‘ஆயில் ஸ்பில்லிங்கை நிறுத்தியதற்கு நன்றி சின்னம்மா’ என போஸ் கொடுப்பான்களே, பரவாயில்லையா!

சோறு கிடைக்காதவனை ஏன் தனக்கு சோறு கிடைக்கவில்லை என யோசிக்க வைப்பவன்தான் சமூக அக்கறை கொண்டவனே தவிர, ரொட்டித்துண்டு கொடுத்து தற்காலிகமாக பசியை போக்குபவன் அல்ல. நாம் உண்மையிலேயே சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்களாக இருந்தோமானால், நமக்கான இப்போதைய வேலை, துறைமுகத்தில் நடந்தது என்ன என்பதையும் கப்பல் கசிவின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும் அரசுகளின் பங்களிப்பு ஏன் இல்லை என்பதையும் வெளிக்கொணர்வதே ஆகும். கசிவினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடை அரசுகள் கொடுக்க வைப்பதும், அழிந்து போன கடலுயிர்களின் எண்ணிக்கையை திரும்ப பெறும் அளவுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட நிர்ப்பந்திப்பதுமே நம் வேலைகளாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து, விளைவு தெரியாமல் வாளிகளை தூக்கிக் கொண்டு போய் நிற்பது பச்சை முந்திரிக்கொட்டைத்தனம்! அரசுகளை இன்னும் சுரணை அற்றதாக மாற்றும் வேலை!

RAJASANGEETHAN JOHN