என்ன நடக்கிறது மணிப்பூரில்…?

சரியாக கையாளப்படாத மணிப்பூர் விவகாரம், வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றிற்கும் பரவுகிறது. ஆயிரக்கணக்கான குக்கிகள் இடம் பெயர்ந்து அஸ்ஸாம், மிஸோரம் போன்ற மாநிலங்களுக்குப் போகிறார்கள். ஏற்கனவே மிஸோரத்தில் பர்மிய அகதிகளும், பங்களாதேஷ் அகதிகளும் குவிந்திருக்கிறார்கள்.

பர்மா கடுமையான உள்நாட்டுப் போரை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பங்களாதேஷில் அந்த அளவுக்கு இல்லை என்றாலும் இனக்குழுவுக்கு நடுவேயான பூசல்கள் இருக்கின்றன. அதனால் இரண்டு நாடுகளில் இருந்தும் மிஸோரமுக்கு அகதிகள் வருகிறார்கள். அவர்கள் யார் என்றால், மிஸோரமிகளான மிஸோ பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அதையொட்டிய பிரிவுகள்.

குக்கிகளும், மிஸோக்களும் மிஸோரமில் குவிவதால் அங்கிருக்கும் மெய்திகளுக்கு அச்சுறுத்தல் வருகிறது. மணிப்பூரில் குக்கிகள் தாக்கப்படுவதால், அதற்கு பழி வாங்கும் விதமாக தாங்கள் தாக்கப்படக்கூடும் என்று மிஸோரமில் இருக்கும் மெய்திகள் அஞ்சுகிறார்கள். அவர்கள் அரசுப் பணியில் இருக்கிறார்கள், தனியார் இடங்களில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள்.

இப்போது அவர்கள் எங்கு போவார்கள்? தாங்கள் மெஜாரிட்டியாக இருக்கும் மணிப்பூரின் இம்பாலுக்குத்த்தான் போகவேண்டும். கிடைத்த வண்டியைப் பிடித்துக் கிளம்புகிறார்கள். நீங்கள் போகாதீர்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று அரசு கோரிக்கை வைக்கிறது. ஆனால் அங்கு இருக்கும் குக்கி அமைப்புகள் வெளிப்படையாக மெய்திகளை எச்சரித்திருக்கின்றன. உங்கள் பாதுகாப்பு உங்களிடமே என்கின்றன.

களத்தில் நிறைய போலிச் செய்திகள் உலவுகின்றன என்கிறார் The Print ல் சேகர் குப்தா. அது எதிர்பார்க்கக் கூடியதே. அந்த ஏரியாவில் கொலை, இந்த ஏரியாவில் பாலியல் வன்முறை என்று நிறைய போலிச் செய்திகள் இனக் குழுக்களை பதட்டத்திலேயே வைத்திருக்கிறது. அரசு, மணிப்பூரில் இணையத்தை தடுத்து வைத்திருக்கிறது. அது ஒரு புறம் வதந்தி பரவாமல் தடுக்கிறது என்றால், இன்னொரு புறம் அன்றாட வேலைகள் நடக்க முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கிறது.

இப்போது மற்ற பிராந்தியங்களிலும் கலவரம் பரவினால், முழு வட கிழக்கு மாநிலமும் கொதிநிலையை அடைவதைத் தடுக்க முடியாது. இப்படியான சூழலில், மத்தியில் ஒரு வலது சாரி அரசு பதவியில் இருப்பது நிகழும் துயரத்தை மேலும் கூட்டுவதாக இருக்கிறது.

உதாரணத்துக்கு, மிஸோரத்தில் வந்து அகதிகள் குவிவதால், எங்களுக்கு நிதி சார்ந்த உதவிகள் வேண்டும் என்று லோக்கல் நிர்வாகம் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறது. இப்போது வரை அதற்கு சரியான பதில் வரவில்லை என்கிறார்கள். எப்படி வரும்? குக்கிகள், மிஸோக்கள் இரண்டு தரப்புமே மத்திய அரசுக்கு இணக்கமான தரப்புகள் இல்லை. அதனால்தான் இந்த பாராமுகம்.

மெய்தியின் “பெண்கள் பாதுகாப்புக் குழு” ஒரு குக்கி பெண்ணைப் பிடித்து மெய்தியின் கருப்பு டி ஷர்ட் அணிந்த ஆயுதப் போராளிகளிடம் கொடுத்து, “இவளைக் கொன்றுவிடுங்கள்” என்கிறார்கள். அவளைக் கொல்வதற்கு சரியான இடம் தேடி அலையும் அவர்கள், தோதான இடம் கிடைக்காமல், அவளைக் கடுமையாகத் தாக்கி, வன்புணர்ந்து விட்டு, “போலீஸ் ஸ்டேஷன் போனால் கொன்று விடுவோம்” என்று மிரட்டிவிட்டு விடுக்கிறார்கள்.

உடலெங்கும் காயம். துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கப்பட்டதால் முகத்தில் கடுமையான காயம். அவர்கள் என்னை வன்புணர்ந்தபோது, முகத்திலிருந்து காதுவரை ரத்தம் வடிந்துகொண்டே இருந்தது என்கிறாள் அப்பெண். கிடைத்த ஒரு காய்கறி வண்டியில் ஏறி, காய்கறிகளின் நடுவே பதுங்கிக் கொண்டு மருத்துவமனை போகிறாள். போலீஸ் ஸ்டேஷன் வேண்டாம், அங்கு மெய்தி போலீஸ்காரர்கள்தான் இருப்பார்கள், அவர்கள் என்னை மீண்டும் மெய்திகளிடமே கொடுத்துவிடுவார்கள் என்கிறள். இதுதான் யதார்த்தம்.

மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் சமவெளியில் இருக்கிறது. அது மெய்திகளின் பிராந்தியம். மலைப்பகுதியின் விளிம்பில், அதாவது மெய்தியின் சமவெளியை ஒட்டி இருக்கும் குக்கிகள்தான் இதில் கடுமையாக சிக்கியிருக்கிறார்கள். உட்பகுதியில் இருக்கும் குக்கிகள் ஓரளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள். விளிம்பில் தனித்து இருக்கும் மெய்திகளும் குக்கிகளால் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அது சொற்பமே என்கின்றன சில சுயேட்சையான அமைப்புகள்.

எப்படிப் பார்த்தாலும் சூறையாடப்படும் சொத்துக்களில் கொல்லப்படும் மக்களில் பெரும்பான்மை குக்கிகள்தான் என்கிறார்கள். இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ஆட்டோமேட்டிக் ரைஃபிள்கள், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வெடி பொருட்கள் அரசு வெடி மருந்து கிடங்குகளில் இருந்து சூறையாடப் பட்டிருக்கின்றன என்கிறார்கள். இதை அரசு வேண்டுமென்றே அனுமதித்திருக்கிறது என்கின்றன குக்கி அமைப்புகள். அதை மெய்ப்பிக்கின்றன அங்கு நடக்கும் கொலைகள்.

குக்கி தரப்பிலும் இந்த சூறையாடல் நடந்திருக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு.

தனித்தனியான இனக்குழுக்களின் கையில் இருக்கும் இந்த ஆயுதங்கள் ராணுவத்துக்கு பெரிய சவாலாக இருக்கிறது. ரோந்து செல்லும் ராணுவ வாகனங்களை மெய்தியின் “பெண்கள் பாதுகாப்புக் குழு” மறிக்கிறது. அவர்களுக்குப் பின்புலத்தில் ஆயுதம் தாங்கிய மெய்திகள் இருக்கிறார்கள். அவர்கள் குக்கிகளை வேட்டையாடுகிறார்கள்.

சென்சிட்டிவான இடங்களில் மெய்தி ராணுவ அதிகாரிகளாகப் பார்த்து நியமித்திருக்கிறார்கள் என்று குற்றம் சொல்கிறார் டெல்லியில் பணிபுரியும் ஒரு குக்கி இன அரசியல் பேராசிரியர். நிர்வாகம் முழுக்கவும் தாக்குபவர்களின் கைகளில் இருக்கிறது. மெய்திகளுக்கு ஆதரவாக இருக்கிறார், மணிப்பூர் முதலமைச்சர்.

அவரை மாற்றவேண்டும், பாரபட்சமான அந்த ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோருகின்றன. “அவர்களது ஆத்திரம் அடங்குவதற்கு நாம் வாய்ப்பளிப்போம், கொஞ்சம் அமைதியாக இருப்போம்” என்று குஜராத் கலவரத்தின் போது சொன்னவர்களின் கைகளில் மத்திய அரசின் முழு அதிகாரமும் இருக்கிறது. அதை நாம் மறந்துவிடக்கூடாது.

எப்படிப் பார்த்தாலும், இந்த இரண்டுமாத காலம் ஒவ்வொரு இனக்குழுவையும் கடுமையாக பிளவுபடுத்தியிருக்கிறது. அதன் காயங்கள் ஆற பல வருடங்கள் ஆகும்.

இப்போது நடந்தது குறைவுதான், big blow இனிமேல்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் களத்தில் இருக்கும் மெய்தி ஆதரவு அமைப்பின் தலைவர் ஒருவர். நான் ABVP யின் சித்தாந்தங்களால் கவரப்பட்டவன், மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கைத் தொழுகிறேன் என்று சொல்கிறார்.

மணிப்பூர் கோர்ட்டின் அறிவிப்புக்கு எதிராக குக்கி, நாகா உள்ளிட்ட இனக்குழுக்களின் ஊர்வலத்துக்கு முந்தைய நாள், வாருங்கள் “நமது முக்கிய எதிரியான குக்கிகளை முற்றிலுமாக அழித்தொழிப்போம்” என்று டிவிட்டரில் சூளுரைத்திருந்தவர் அவர். இப்போதும் களத்தில்தான் சுதந்திரமாக இருக்கிறார். கரண் தப்பாருடைய நேர்காணலில், நான் off the record ஆக சொல்கிறேன், மெய்திகள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வலுவாகத் திரண்டு வருவதற்குள் அரசு எங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்கிறார். (ஆனால், கரண் தாப்பர், இல்லை இன்னும் நேர்காணல் முடியவில்லை, அது ஒளிபரப்பாகும் என்று சொல்லிவிட்டார்.)

அது என்ன கோரிக்கை?

குக்கிகள் வந்தேறிகள். இந்த நாட்டின் பூர்வ குடிகள் அல்ல, அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பது அவரது நிலைப்பாடு. அப்படியானால் அவர்களது கோரிக்கை என்னவாக இருக்கும் என்பது புரிகிறதா? சமவெளியை ஆண்ட எங்களது வம்சம், மலைகளுக்கான உரிமையை எங்களுக்குத் தந்திருந்தது. அங்கு நிகழந்த வெளியாட்களின் குடியேற்றம் (அதாவது குக்கி, நாகாக்களின் குடியேற்றம்) எங்களது உரிமையைப் பறித்துவிட்டது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றி எங்களது உரிமையை மீட்பதே எங்களது போராட்டம் என்கிறார் அவர். நீண்ட காலமாக மெய்திகளின் போராட்டமே அதுதான். (மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா மெய்தி இனக்குழுவைச் சேர்ந்தவர். அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.)

மெய்திகள் இந்து வைணவர்கள் மற்றும் பட்டியல் சாதியினர். குக்கி பழங்குடியினர் பெரும்பான்மை கிருஸ்தவர்கள். அதனால் இதற்கு ஒரு மத சாயமும் இருக்கிறது. ஆனால் இந்த மத ரீதியான வண்ணம் வருவதற்கு முன்பே, அவை தங்களுக்குள் கடுமையாக பூசலிடும் அமைப்புகளாகவே இருந்தன. அதனால், அவர்களுக்கு நடுவே மதம் ஒரு அலகாக புகுத்தப்பட்ட பிறகுதான் முரண்பாடுகள் வந்தன என்று சொல்லப்படும் கூற்றில் உண்மையில்லை.

குக்கிகளுக்கும் நாகாக்களுக்கும் இருந்த பூசல் பிரசித்தி பெற்றது. இப்போது மெய்தியின் குறி குக்கிகள் மீது மட்டுமே. நாகாக்கள் நடுநிலை வகிக்கிறார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக தனி நாடு கேட்டுக்கொண்டிருக்கும் அமைப்பினர். வலுவான ஆயுதம் தாங்கிய குழுக்கள் கொண்டவர்கள். இந்த விவகாரம் எந்த திசையில் செல்லும் என்பதைக் கணித்தபடி அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அமைதியை எட்ட அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஆனால் தமது அடிப்படைவாத சிந்தனையைக் கைவிடாமல், ஆளும் மத்திய அரசால் அவர்களை அமைதி நோக்கி வழி நடத்த முடியாது என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

Karl Max Ganapathy