கொலு என்பது அடிப்படையில் உயர்சாதி சடங்கு; மதம் அதன் மேல்பூச்சு மட்டுமே!

விகடன் செய்தியின் இரண்டாவது வரி இப்படி சொல்கிறது:

“பெரும்பாலான வீடுகளில் கொலு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.”

அடிப்படையில் தவறான தகவல். பெரும்பாலான பிராம்மண, வைசிய செட்டிகள் போன்ற சில உயர்ஜாதிகளின் வீடுகளில் மட்டுமே நடப்பது கொலு. தமக்கு மறுக்கப்பட்ட பூணுலை எப்படியாவது அணிய வேண்டும் என்று தவியாய் தவிக்கும் சூத்திர பணக்கார ஜாதிகளில் சிலர் இப்படியான கொலுவை பிரம்மாண்டமாய் வைத்து மேலோரை அழைத்து “எங்காத்துக்கும் சித்த வாங்கோ” என்று வேண்டி விரும்பி கும்பிட்டு கூப்பிடும் பழக்கம் இருந்தாலும் அதன் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படியே கூப்பிட்டாலும் அவா யாரும் இவாளை பெரிதாக சீந்துவதில்லை. இப்படியானவர்களின் கொலுக்கள் சோபிப்பதும் இல்லை. ஏனென்றால் கொலு என்பது வெறும் பொம்மைகள் மட்டுமல்ல. அது பிராம்மண வாழ்வியலின் ஒரு அங்கம். உதாரணமாக கொலுவில் பாட்டுப் பாட வேண்டுமானால் கர்னாடக சங்கீத பரிச்சயம் வேண்டும். எத்தனை சூத்திரவீடுகளில் சங்கீதம் கற்க ஊக்குவிக்கப்படுகிறது? எனவே சூத்திர புதுப்பணக்காராள் சிலர் தலைகீழாய் நின்று தண்ணி குடித்தாலும் கொலுவை தமதாக்கிக்கொள்ள முடியாது. அது முழுக்க முழுக்க பிராம்மணர், வைசியர் உள்ளிட்ட வெகுசில உயர்ஜாதிகளின் வருடாந்திர சடங்கு மட்டுமே. இது தான் எதார்த்தம். அப்படியான ஜாதிச்சடங்கை ஏதோ ஒட்டுமொத்த இந்துக்களின் சடங்கு என்று சொல்வதும் “பெரும்பாலான வீடுகளில் கொலு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்று எழுதுவதும் பொய்யான தகவல். இந்துக்கள் மரக்கறி மட்டுமே உண்பார்கள், மாமிசம் சாப்பிட மாட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய்யோ அதே அளவு பொய் தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகள் கொலுவைக்க தயாராகி வருவதாக சொல்வதும், எழுதுவதும்.

அடுத்து, இறந்து ஓராண்டு முடிவதற்குள் ஜெயலலிதாவின் பொம்மையை கொலுவில் வைப்பது ஆகமவிதிப்படி சரியா என்கிற கேள்வி. ஆகமவிதிகளை தன் வாழ்நாள் முழுக்க பலமுறை காலில் போட்டு மிதித்தவர் ஜெயலலிதா. திருமணம் ஆகாமலே ஒரு ஆணோடு சேர்ந்து வாழ்ந்தது முதல் இன்னொரு ஆணுக்காக உடன்கட்டை ஏற நினைத்தேன் என அறிவித்தது வரை அவர் இந்து ஆகமம் வகுத்த திருமணம் என்கிற அமைப்பை பகிரங்கமாக மீறியே வாழ்ந்தார். அடுத்து மகாமகத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலையும் கழுத்துமாய் வெள்ளிக்குடத்தில் ஒருவர் தலையில் அடுத்தவர் தண்ணீர் ஊற்றிக்கொண்ட கண்கொள்ளா காட்சிகள் இந்துமத ஆகமங்கள் எவையும் இலக்கணம் வகுக்காத காட்சிகள். பின்னாளில் அதே மாலையும் கழுத்துமாய் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றபோது பூரணகும்ப மரியாதையுடனே வரவேற்கப்பட்டனர். இறுதியாக ஜெயலலிதாவுக்கு இரத்த உறவோ திருமண பந்தமோ இல்லாத சசிகலாவும் இறுதிக்கிரியை செய்ததை ஒட்டுமொத்த நாடே நேரலையில் பார்த்தது. இப்படி தன் வாழ்விலும் இறப்பிலும் இந்துமத ஆகமத்தின் எல்லா விதிகளையும் மீறிக்காட்டியவர் ஜெயலலிதா. அதை ஆஹா பேஷ் பேஷ் என்று ஆமோதித்து அனுமதித்தன ஆகமங்கள். ஊக்குவித்து ஒத்து ஊதினார்கள் ஆகம பாதுகாவலர்கள், ஏன்? ஏனென்றால் ஆகமங்கள் அக்ரஹாரத்தால் உருவாக்கப்பட்டவை. அக்ரஹாரத்தில் பிறக்க நேர்ந்தவர்களின் பாதுகாப்புக்கவசங்கள் அவை. எனவே அக்ரஹாரத்தில் பிறக்க நேர்ந்த ஜெயலலிதா என்ன செய்தாலும் ஆகமங்கள் அதை ஏற்றுக்கொள்ளும், நெகிழ்ச்சிகாட்டும். விட்டுக்கொடுக்கும். இது ஏதோ ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல. ஜெயேந்திரர் விஷயத்திலும் இதுவே நடந்தது. கொலைக்குற்றத்தில் கைதாகி சிறைக்குப்போனபின்னும் அவர் சங்கராச்சாரியாராக தொடரவும், லோக குருவாக பரிபாலனம் செய்யவும், பூஜை அறையில் கடவுளர் படங்களோடு சமமாக வைத்து வழிபடவும், ஆனப்பெரிய ஆகமவிதிப்படியான கோவில்களுக்கு உள்ளே கருவறைக்குள் நேரில் சென்று கடவுளை தொட்டு பூஜிக்கவும் இடம் கொடுப்பவையே இந்து ஆகமங்கள். எனவே ஜெயலலிதாவை ஜெயலலிதாம்பிகை ஆக்கவும் ஆகமங்கள் அனுமதிக்கும்.

மூன்றாவதாக, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவை கொலுவில் வைத்து புனிதப்படுத்தலாமா என்கிற கேள்விக்கு பதிலாக சீசனுக்கு சீசன் இப்படியான பிரபல மனிதர்களின் பொம்மைகள் கொலுவில் சேர்க்கப்படுவது வாடிக்கையே. இதில் கொலு வைப்பவர்களின் ஜாதிப்பாசம் எல்லாம் கிடையாது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. புத்திசாலித்தனமான வாதம். ஆனால் உண்மையல்ல. அப்படி கொலுவில் சேர்க்கப்பட்ட பிரபல மனிதர்களின் பட்டியல் போட்டால் அது பெரும்பாலும் ஒரே ஜாதியைச்சேர்ந்தவர்கள் அல்லது அந்த ஜாதியின் நலன்களுக்கு தொண்டாற்றியவர்கள் என்பதாகவே அது இருக்கும். என்ன காரணம்? தமிழ்நாட்டில் கொலு என்பது அடிப்படையில் ஜாதிய சடங்கு. மதம் அதன் மேல்பூச்சு மட்டுமே.

LR JAGADHEESAN

(Thanks LR Jagadheesan)