“நீட்’ தேர்வால் விளையும் நாசம்: புரிகிற மாதிரி சொல்கிறேன்…”

புரிகிற மாதிரி சொல்றேன்.

இதுவரையில் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க, தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள், தமிழ்நாடு பாடத்திட்டத்திலும், மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலும் படித்த மாணவர்கள் எவரும் எழுதலாம் என்ற நிலையில் பொதுவாக இருந்தது. இதனால் இந்த இரண்டு பாடத்திட்டத்திலும் படித்த மாணவர்கள் அந்த நுழைவுத் தேர்வை எழுதி, மதிப்பெண்கள் பெற்று, எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர்.

இந்த முறை தற்போது மாற்றப்பட்டு, மருத்துவப் படிப்புகளுக்காக இந்தியா முழுமைக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வாக நீட்-NEET தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த நுழைவுத் தேர்வுகளின் கேள்வித்தாள் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருந்தது.

தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் என பெருன்பான்மையான பள்ளிகள் தமிழக அரசு பாடத்திட்டதில் தான் நடக்கின்றன. அதில் தான் 75% தமிழக மாணவர்கள் படிக்கிறார்கள்.

எனவே தன் பள்ளிக்காலத்தின் பனிரெண்டு ஆண்டுகளை தமிழக பாடத்திட்டமான ஸ்டேட் போர்டு சிலபசில் படித்த தமிழக மாணவர்களால், மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் இருக்கும் நீட் நுழைவுத் தேர்வை எழுதுவது கடினம் என்று கருதிய தமிழக அரசு, தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு அளித்து அதை ஒரு சட்டமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அந்த சட்டத்தை எதிர்த்து, சிபிஎஸ்சியில் படித்த மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் தமிழக அரசின் 85% இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்து விட்டது.

அதனால் இந்த வருடம் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்து ப்ளஸ் டூ-வில் 1200 க்கு 1190 எடுத்தாலும், சிபிஎஸ்சி சிலபசில் நடந்த நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தால், மருத்துவம் படிப்பது கடினமான விசயம்.

இதனால என்னாகும்ன்னு கேக்குறீங்களா?

இரண்டு விளைவுகள் நடக்கும்.

1.இனி தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதாவது, அரசு பள்ளிகளில், தமிழக அரசு பாடத்திட்டத்தில் நடக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேருவோர் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

2.நீட் கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் நடக்கப் போகும் கல்வி வியாபாரம், டாஸ்மாக் வருமானத்தை தாண்டும்.

அப்ப அதைத் தவிர்க்க தமிழக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த, சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாற்றலாம்லன்னு கேக்குறீங்களா?

தாரளமாக மாற்றலாம். மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் மாற்றப்படலாம். அவ்வாறு மாற்றப்படும்போது அவர்களின் குழந்தைகளின் படிப்பு கெடக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டதே சிபிஎஸ்சி பாடத்திட்டம். அதோடு சிபிஎஸ்சி என்பது இந்தியா முழுமைக்குமான பொதுவான பாடத்திட்டம். இந்த சிபிஎஸ்சிக்கு தமிழக அரசு பள்ளிகள் மாறினால், அது மத்திய அரசின் பாடத்திட்டமாகவே மட்டும் தான் இருக்கும்.

சிபிஎஸ்சிக்கு மாறுவதால் வேற என்னதான் குறை?

இயற்பியல்-வேதியியல்-உயிரியல்-கணிதம்-வணிகவியல் போன்ற அறிவியல் சார்ந்த படிப்புகளில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் வரலாறு பாடத்தில் மாற்றங்கள் இருக்கும். தமிழக வரலாறு சுருங்கி, இந்திய வரலாறு என மாறும்.

இந்தி கட்டாயமாக்கப்படும். தமிழ் விருப்ப பாடமாக மாற்றப்படும்….

இப்போதாவது இந்த விவகாரத்தை தமிழக ஊடகங்களும், தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் கவனிப்பார்களா?

G DURAI MOHANARAJU

Read previous post:
0
மருத்துவ படிப்பில் 85% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில்

Close