மாபெரும் எரிவாயு அடுப்பின் மேல் வசிக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள்!

கதிராமங்கலம் எனும் பெயர் மனதில் கனத்துக் கிடக்கிறது. இரவில் சரிவர உறக்கமும் வருவதில்லை. இதுவரை மாசுபடுத்தப்பட்ட, மாசால் பாதிக்கப்பட்ட எத்தனையோ இடங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் கதிராமங்கலம் மோசமாக மனசைப் பிசைவதற்குக் காரணம் இருக்கிறது. குத்தாலம் என்கிற ஊருக்கு மேற்கே இரு கல் தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்த ஊர் கதிராமங்கலம். அதற்கு நேர் கீழே தென்கரையில் அமைந்த ஊர் மாதிரிமங்கலம். நான் மாதிரிமங்கலத்தில் பிறந்தவன்.

இப்பகுதி முழுவதும் என் சிறார்ப் பருவ நினைவுத் தடம் பதிந்தவை. இந்த ஊர்களில் என் காலடிப்படாத இடமே இல்லை எனும் அளவுக்கு ஓடியாடித் திரிந்தப் பகுதி இது. இரு பகுதி மக்களுக்கும் காவிரி பொது. காவிரி மாசுப்படாத காலம் அது. ஆற்றில் ஓடும் நீரை அள்ளி அப்படியே குடிக்கலாம். கோடையிலும் பாதியாற்றில் மணல் கிடக்க, மீதியாற்றில் நீரோடிக் கொண்டிருக்கும்.

சிறுவர்களான நாங்கள் காலையில் குளிக்கப் போனால் மாலைவரை கும்மாளமிட்டுக் கொண்டிருப்போம். இடையில் தாகம் எடுக்கையில் நன்னீராக இருந்தாலும்கூட ஆற்றுநீரைக் குடிக்க மாட்டோம். கைகளால் மணலில் ஓரடி ஆழம் தோண்டினாலே குபுகுபுவென நீர் ஊறிவிடும். தொட்டனைத் தூறும் மணல் ஊற்று. அப்படியே வாய்வைத்து உறிஞ்சுவோம். ஆளாளுக்குத் தனித்தனி ஊற்று. அவ்வளவு காவிரித் திமிர் எங்களுக்கு!

நெஞ்சம் எரிகிறது

கதிராமங்கலத்து ஆட்களுக்கு அப்போதெல்லாம் பெருமை பொங்கி வழியும். ‘கல்லிலே கதிர் வேயும் கதிராமங்கலம்’ என்று கூறித் திரிந்த மக்கள், இன்று கூனிக் குறுகித் திரிகிறார்கள். இன்று தெருக்களில் காணப்படும் அடிபம்புகளே இப்பகுதியின் நீர்வளம் சரிந்துவிட்டதற்கான சாட்சி. முப்பது அடியில் இன்னமும் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அதில் வரும் நீரைப் பார்த்தால், பெட்ரோல் எரிவதுபோல் நெஞ்சம் பற்றி எரிகிறது. அவ்வளவும் கச்சா எண்ணெய் ஊடுருவிய காவி நிற நீர்.

முதலில் பிடிக்கும்போது லேசான மஞ்சள் நிறத்திலிருக்கும் நீர், ஓரிரு மணி நேரத்துக்குள் செங்காவி நிறத்துக்கு மாறிவிடுகிறது. நறுவெளித் தெருவில் நிலைமை படுமோசம். தொட்டிக்குள் ஊற்றப்பட்ட நீரில் ஆடை போல எண்ணெய்ப் படலம் மிதக்கிறது. அதில் கதிரொளிப்பட்டு வானவில்லின் ஏழு நிறங்களும் தெரிவது மழைக்காலத்துச் சாலையில் பெட்ரோல் சிதறிக் கிடப்பதை நினைவூட்டுகிறது. கொதிக்க வைத்தால் நீர் திரித்திரியாய் மாறுகிறது. பாத்திரங்கள் அனைத்தும் காவி பிடித்துக் கிடக்க, இந்த நீரில் துவைக்கப்பட்ட துணிகள்கூட நிறம் மாறிவிடுகின்றன.

இந்நீரையே இம்மக்கள் அன்றாடத் தேவைகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். நமக்கோ தாகத்துக்குக்கூட இந்த நீரைக் குடிக்க அச்சமாக இருக்கிறது. அதேநேரம் அவர்களிடம் குடிக்க வேறு நன்னீர் கேட்க வெட்கமாகவும் இருக்கிறது. ஏதோ ஓரிடத்தில் கிடைக்கும் நன்னீரைக்கொண்டே ஊராட்சி தன் பிழைப்பை ஓட்டிவருகிறது. ஆனால், அதன் ஆயுள் இன்னும் எத்தனை காலத்துக்கு எனத் தெரியவில்லை. இதுதான் இன்றைய கதிராமங்கலத்தின் சுருக்கமான கதை. சுருங்கச் சொன்னால், நிலத்தடி நீரான கரப்புநீர் (Subsurface Water Level) நமது அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்போலவே முழுவதும் செத்துவிட்டது.

இரும்பு துருப்பிடிக்காதா?

கதிராமங்கலத்து மக்கள் மாபெரும் எரிவாயு அடுப்பின் மேல் தற்போது வசிக்கிறார்கள். எந்நேரமும் விபத்து நிகழலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் நடந்த பெருவிபத்து, இங்கு நடக்காது என்பதற்கு எந்த உறுதியுமில்லை. ஈராண்டுகளுக்கு முன்னரே ஜெயலட்சுமி என்பவர் குழாய் வெடித்துத் தீக்காயம் அடைந்திருக்கிறார். செய்தி வெளியே கசியாதவாறு ஓ.என்.ஜி.சி. நிறுவனமே மருத்துவம் பார்த்துள்ளது. என்ன நடந்ததோ தெரியவில்லை. இன்று அவர் யாரையும் சந்திக்க மறுத்து ஒளிந்து வாழ்கிறார்.

ஐக்கிய அமெரிக்காவில் கடந்த 2014 – 2017 வரை 104 வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அங்கு 50% குழாய்கள் 15 ஆண்டுகளில் துருப்பிடித்து விடுகின்றன. அமெரிக்காவில் துருப்பிடிக்கும் குழாய்கள், தமிழ்நாட்டில் துருப்பிடிக்காதா எனக் கேள்வி எழுப்பிய குற்றத்துக்காகப் பேராசிரியர் த. செயராமனும் கதிராமங்கலம் மக்களும் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். ஆனால், 20 ஆண்டுகள் உழைத்திருக்க வேண்டிய குழாய், கதிராமங்கலத்தில் 9 ஆண்டுகளிலேயே ஓட்டை விழுந்தது ஏன் என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை.

எரிபொருள் இல்லையா?

இந்த நிலையிலும்கூட வளர்ச்சி மந்திரம்தான் இன்னும் ஓதப்படுகிறது. எண்ணெய் பயன்பாட்டில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. எல்.பி.ஜி. இறக்குமதியில் நான்காவது இடம். எனவே, எரிபொருள் அவசியம் எனப்படுகிறது. ஆனால், புவிவெப்பமாகி வரும் இந்த ஆபத்தான காலகட்டத்தில், மாற்று எரியாற்றல் குறித்த சிந்தனை அதைவிட அவசியமாயிற்றே!

குப்பையில் இருந்து எரிவாயு தயாரிக்கக் குப்பைகளை இறக்குமதி செய்கிறது ஸ்பெயின். இந்தியாவில் கிடைக்கும் குப்பைகளைக்கொண்டு நாளொன்றுக்கு 150 கோடி கிலோ எரிவாயு தயாரிக்கலாம் என்கிற செய்திகள் இப்போதும் புறக்கணிக்கப்படுகின்றன. இதில் 2030-க்குள் புதைப்படிவமல்லாத எரிபொருள் (non fossil fuel) உற்பத்தியை 40 விழுக்காடாக அதிகரிப்போம் என்று பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது நம் நாடு.

காவிரிப் படுகை தப்பிக்குமா?

பாரிஸ் ஒப்பந்தத்தைப் புறக்கணித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதையில் நாம் போக முடியாது. அந்நாட்டில் ஆளற்ற அல்லது குறைந்த அளவு மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் பெரும்பாலும் எரிவாயு எடுக்கப்படுகிறது. அந்நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 34 பேர்தான் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்குப்படி சதுர கிலோமீட்டர் ஒன்றுக்கு 555 பேர் வசிக்கிறோம். காவிரிப்படுகை என்பது தமிழகத்தின் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளுள் ஒன்று. ஏறத்தாழ 55 லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.

எனவே, நார்வே நாட்டைப் போல் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க நம் அரசு முன்வந்திருக்க வேண்டும். சதுர கிலோமீட்டருக்கு 125 பேர் வசிக்கும் நாடு நார்வே. மொத்த நிலப்பரப்பில் வெறும் 5% அளவுக்கே மக்களைக் கொண்டிருந்தும், தன் நிலப் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அந்நாடு தடை விதித்திருக்கிறது.

மாறாக காவிரிப்படுகை முழுக்க எண்ணெய் எடுக்கும் திட்டத்தை விரிவுப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். இதனால் கதிராமங்கலம் மட்டுமன்றி ஒட்டுமொத்த காவிரிப்படுகையிலும் எரிவாயு எடுக்கவே காவிரியில் தண்ணீர் மறுக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதன் சிறுசிறு பொறிகளே நெடுவாசலும் கதிராமங்கலமும்.

சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை, அரசு உணர வேண்டிய காலம் இது. காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பது அல்லது கேரளத்தில் செய்ததுபோல் விளைநிலப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவருவது ஆகிய இரண்டில் ஒன்றே இப்பகுதிக்கு நிரந்தரத் தீர்வைத் தரும்.

மிஞ்சிப் போனால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்? கச்சா எண்ணெய் கலந்த நீரை ஊடகங்களில் காட்டி பேட்டி கொடுப்பார்கள், அவ்வளவுதானே என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம்.

எண்ணெய் என்பது தீப்பிடிக்கும் பொருள்!

நக்கீரன்

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

(Tamil.thehindu.com)

Read previous post:
0
“நீட்’ தேர்வால் விளையும் நாசம்: புரிகிற மாதிரி சொல்கிறேன்…”

புரிகிற மாதிரி சொல்றேன். இதுவரையில் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க, தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த நுழைவுத் தேர்வின் கேள்வித்தாள், தமிழ்நாடு

Close