புத்தக கண்காட்சியில் அப்பளம் அதிகம் விற்காமல் வேறென்ன நடக்கும்?!

பல வருடங்களுக்கு முன்பு காயிதே மில்லத் கல்லூரியில் புத்தக கண்காட்சி நடந்தது. பல்வேறு பள்ளிகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி அடைந்த மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு கண்காட்சியில் அமைத்திருந்த மேடையில் பேச வந்திருந்தார்கள். அப்படி ஒரு மாணவர் பேசிய பேச்சை இரண்டு நாட்கள் முன்பு வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம். 15 வருடங்களுக்குப் பிறகு அந்த பேச்சு எனக்கும் ஞாபகம் இருந்தது. என் தம்பிக்கும் ஞாபகம் இருந்து அவன் quoteகூட செய்தான்.

“…சுட்டெரிக்கும் மதிய வெயிலில், சாலையோரம் பழைய புத்தகங்களை விற்பனை செய்துகொண்டிருக்கும் அந்த முதியவரின் வயிற்றுச் சுருக்கங்களில் முத்தமிட்டு எனது உரையை துவங்குகிறேன்…”

தீப்பொறி போல் சிதறிய பேச்சு. தமிழுக்கும் தமிழ்மொழியின் ஆயுளுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவல நிலவரத்தைப் பற்றி எரிமலையாய் கொதித்தெழுந்தார். பேசி முடித்து சடாரென அவ்விடத்தை விட்டு கிளம்பினார். அறிவிக்கப்பட்ட முதல் பரிசை வாங்குவதற்குக் கூட வரவில்லை. அங்கிருந்த அனைவர் மனதிலும் தீரா தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இன்றோ… மேடைக்கு அருகே நடிகர்களின் போஸ்டர்கள். மேடையில் நடனம்! பள்ளிகளோடும் மாணவர்களோடும் இருந்த தொடர்பை அறுத்தபின் புத்தக கண்காட்சியில் அப்பளம் அதிகம் விற்காமல் வேறென்ன நடக்கும்?!

Kavitha Gajendran