பெரியாரும், அம்பேத்கரும் கற்பூரங்கள்; அதன் வாசனை இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..!

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும், “பெரியார்” படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கண்டிப்பாக அன்று இளையராஜா சொல்லிவிட்டதாக செய்திகள் பரபரத்தன.

சரித்திரத்தையே மாற்றிப்போட்ட ஒரு சிங்கக் கிழவனை சிறுமைப்படுத்திய, இந்த அறிவிப்பைக் கண்டு அப்போதே பலரும் திகைத்துதான் போனார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியில் ’தாழ்த்தப்பட்டவர்கள்’ என்று ஓரங்கட்டப்பட்ட பச்சைத் தமிழர் குடும்பத்தில் பிறந்தவர் இளையராஜா. அத்தகைய மக்களின் விடுதலைக்காகவும், சமுதாய விடியலுக்காகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைப்பாடகராக தமிழகம் முழுவதையும் தனது இன்னிசையால் தட்டியெழுப்பிய தோழர் பாவலர் வரதராசனின் உடன்பிறந்த தம்பியும்கூட.

ஸ்ரீரங்கம் கோபுரம் கட்ட 8 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த வள்ளல் இளையராஜா; திருவண்ணாமலை கோயிலிலும் இவரது பங்களிப்பு உள்ளதை மறுக்க முடியாது.

ஆனால், கீழ்வெண்மணியில் வெறும் கூலி உயர்வு கேட்டதால் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டார்களே, அவர்களில் ஒரு குடும்பத்திற்காகிலும் இவர் உதவியதுண்டா? ஒருமுறையாகிலும் அவர்களது நினைவகத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுண்டா?

ஜாதியத்தை – மனிதனை – தரவாரியாகப் பிரித்து இழிவுபடுத்தும் கேவலத்தை எதிர்த்து போராடுவதற்குப் பதிலாக, அதற்கு மூலகாரணமாகத் திகழும் வழிபாட்டுத் தலங்களுக்கு வாரி வாரி வழங்கி வருகிறார்.

இதெல்லாம் இவரது தனிப்பட்ட உரிமை என்றாலும், ஒன்று மட்டும் சொல்ல தோன்றுகிறது.

எந்த மதம் அன்று ஒதுக்கி வைத்ததோ, அந்த மதத்தின் கருவறை வரை இளையராஜா வரவேற்கப்படுகிறார் என்றால், அதற்கு மூல காரணம் தந்தை பெரியார்தான்.

ஏனென்றால், போலீஸ் இலாகாவை உள்ளடக்கிய உள்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று 30 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்த நேர்மையான அரசியல்வாதியான கக்கனாலேயே, காஞ்சி பெரியவாளை தரிசிக்க உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அவர் தங்கியிருந்த தோட்டத்தைச் சுற்றி வேலி அமைத்து, பசுமாட்டை கையில் பிடித்து, வீதிக்கு வெளியே நின்றுதான் வணங்க முடிந்தது.

அந்த அவலத்திற்கு முடிவு கட்டியவரும் என் வெண்தாடி கிழவன் தந்தை பெரியார்தான்.

ஆனானப்பட்ட மன்னர் பரம்பரையைச் சேர்ந்த, இந்திய பிரதமராக இருந்த வி.பி.சிங்கே பெரியாரை பற்றி பேசும்போதெல்லாம் புல்லரித்துப் போவாராம்.

பாவலரையும், இளையராஜாவையும் வளர்த்தெடுத்தது மார்க்சிய இயக்கம் என்பதையும், அடைக்கலம் தந்தது தோழர் மாயாண்டி பாரதி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

தந்தை பெரியாரும் கம்யூனிஸ இயக்கமும் உருவாகாமல் போயிருந்தால், இன்று இந்த அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சியை இளையராஜா அடைந்திருக்கவும் முடியாது.

தாங்கிப் பிடித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தூக்கி வளர்த்த இந்த தமிழக மக்களுக்கும் ஏதாவது பலன் கிட்டியிருக்கிறதா என்று பார்த்தால், ஏமாற்றமே மிச்சமாகிறது.

அன்று ’பெரியார்’ பட விவகாரத்தை யாரும் பெரிதுபடுத்தாத நிலையில், அம்பேத்கருடன் இன்று பிரதமர் மோடியை ஒப்பிட்டுள்ளார் இளையராஜா.

தனக்குப் பிடித்த தலைவர்களை பற்றி கருத்து சொல்வது தனிப்பட்ட உரிமை என்றாலும், 1970களில் விளிம்புநிலை மக்களின் அடிநாதத்தை அறிந்த இளையராஜாவுக்கே, இன்று ஏழை மக்கள் படும் கஷ்டமும், சிறுபான்மையினர் நசுக்கப்படுவதும் தெரியவில்லையா என்ற வேதனையான கேள்வியைத் தான் நமக்கு எழுப்ப தோன்றுகிறது.

எனினும், தான் யார் என்பதை இப்போதாவது வெளிப்படுத்த முடிந்ததே என்பது நமக்கு சற்று ஆறுதலான விஷயம்.

அதேசமயம், திறமை என்பது மனிதனின் ஒரு அங்கம் தானே தவிர, அதுவே ஒருவரது முழு மதிப்பீடும், அளவீடும் இல்லை என்பதை பாமர மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நான் உட்பட இன்றுவரை கோடிக்கணக்கான ரசிகர்கள் உயிருக்கு உயிராக இளையராஜாவின் இசையை நேசிக்கிறோம். அந்த ராகத்தில் சிக்குண்டு கட்டுண்டு கிடக்கிறோம். அதில் கரைந்து போகிறோம்..!

அவ்வளவு ஏன்? 20 வருடங்களுக்கு முன்பு, என் நேசத்துக்குரிய இளையராஜாவின் இசையை பற்றி ஒரு நீண்ட கவிதையை எழுதி, அந்த கவிதையை அவரிடமே காண்பிக்கச் செய்து, அதற்கான பாராட்டையும் நேரடியாக பெற்று பரவசம் அடைந்தவள் நான்..!

ஆனாலும், மதங்கள் – இனங்கள் – சாதிகள் – கலாச்சார பண்பாட்டு பிரிவுகள் பலவாறாக இருந்தாலும், அனைவருக்குமான ஒரே விதி, ஒரே நியதி என்ற கோட்பாட்டை வகுத்தவரை அவமானப்படுத்துவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது..!

பெரியாரும் சரி, அம்பேத்கரும் சரி.. இருவருமே கற்பூரங்கள். அதன் வாசனை, இவர்களை முழுமையாக வாசிக்காதவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை..!

-ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

 

Read previous post:
8
“தமிழ், மலையாள சினிமாக்களை விட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறது”: ‘ஆதார்’ படவிழாவில் பாரதிராஜா!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதார்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குநர்

Close