அந்த ஆட்டோக்காரர் ஓர் இஸ்லாமியர்!

”என்னை ஒரு காரில் கடத்தி சென்று மெய்தெய் ஊருக்குள் விட்டனர். மெய்தெய் மக்கள் என்னை அடித்து அரம்பெய் அமைப்பிடம் கொடுத்தனர்.

”அவர்கள் என்னை ஒரு மலைக்கு கொண்டு போய் துப்பாக்கி வைத்து அடித்தனர். நினைவு திரும்பியதும் அவர்கள் மலையிலிருந்து என்னை தள்ளி விட்டார்கள்.”

மூர்ச்சையாகியிருந்தபோது அக்கும்பல் அவரை வல்லுறவு செய்திருந்தது.

”கீழே சாலைக்கு வந்து விழுந்தேன். அவர்கள் விரட்டிக் கொண்டு வந்தார்கள். அருகே ஒரு ஆட்டோ இருந்தது. வேறு வழியில்லை. ஆட்டோ நோக்கி சென்றேன்.

”காய்கறி மூட்டைகளுக்கு நடுவே என்னை மறைத்து வைத்து ஓட்டி சென்றார் ஆட்டோக்காரர். காவல்நிலையத்துக்கு போய் ஆட்டோ நின்றது.”

பின்னாடியே விரட்டி வந்த வாகனத்தை போய் காவலர்கள் பரிசோதிக்கும் முன், வாகனம் தப்பி சென்றது. மேலதிகாரிக்காக பெண்ணை காவலர்கள் காக்க சொல்லி இருக்கின்றனர். ஆனால் பெண்ணுக்கு ஒரு சந்தேகம்.

”மேலதிகாரி மெய்தெய் இனத்தவராக இருந்தால் இன்னும் சிக்கல் என, நான் சார்ந்த குகி மக்களிடம் இறக்கி விடும்படி ஆட்டோக்காரரிடம் சொன்னேன்.

”ஆட்டோவில் ஏற முடியாதளவுக்கு பலவீனமாக இருந்தேன். ஆட்டோக்காரர்தான் உதவினார். பிறகு குகி மக்களிடம் கொண்டு போய் ஆட்டோக்காரர் பத்திரமாக என்னை சேர்த்தார்.

“அந்த ஆட்டோக்காரர் ஓர் இஸ்லாமியர்!”

– மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குகி பெண், Quint தளத்துக்கு பேட்டி.

பதிவு:  RAJASANGEETHAN