எல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே!

இதே போலொரு தொற்றுநோய் காலத்தில்தான் தொழிலாளர் அரசு சோவியத் ரஷ்யாவில் பதவி ஏறியது.

போர், பஞ்சம், பொருளாதார முடக்கம் என பல முனைகளில் சோவியத்துக்கு சவால்கள் இருந்தன. அம்மை போன்ற கொள்ளை நோய்கள் வேறு மக்களை வாட்டிக் கொண்டிருந்த சூழலில் திடுமென இன்னொரு நோய் பரவத் தொடங்கியது. Spanish flu!

1918ம் ஆண்டிலிருந்து 1920ம் ஆண்டு வரை உலகத்தை ஆட்டிப்படைத்த தொற்றுநோய். கிட்டத்தட்ட ஐந்து கோடி பேரை உலகம் முழுக்க பலியெடுத்தது.

போரில் பல லட்சம் பேரை ரஷ்ய மக்கள் இழந்திருந்தனர். உணவு பற்றாக்குறையாலும் பலர் பலியாகிக் கொண்டிருந்தனர். அம்மை, காலரா என மக்களை வேட்டையாடிக் கொண்டிருந்த நோய்களுடன் புதிதாக ஸ்பானிஷ் தொற்றுநோயும் சேர்ந்து கொண்டது.

முதன்முதலாக பதவியேறிய தொழிலாளர் அரசை கண்டு முதலில் பதறிய முதலாளித்துவ நாடுகளும் அரசுகளும் பிறகு ஆசுவாசம் அடைந்தன. இத்தனை சவால்களுடன் தொற்றுநோயும் சேர்ந்திருப்பதால் ரஷ்யாவில் தொழிலாளர் அரசு நீடிக்காது என நம்பினர். அத்தனை சவால்களையும் கையாள முடியாமல் தொழிலாளர் அரசு தோற்று அதை மக்களே வீழ்த்தியும் விடுவார்கள் என நினைத்தனர்.

கற்பனையிலும் ஊகத்திலும் முதலீடு செய்வது முதலாளிகளுக்குத்தான் பிடித்த விஷயமாயிற்றே! காற்றில் கோட்டை கட்டினார்கள்.

எதுவும் நடக்கவில்லை.

ரஷ்யாவின் தொழிலாளர் அரசை தலைமை தாங்கியவன் ஒரு கம்யூனிஸ்ட். நடக்கக்கூடிய விஷயங்களை முன்யூகித்து அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களையும் முன் கூடியே தயாரித்துக் கொண்டு, காலத்தை அதன் பிடரிமயிர் பிடித்து எதிர்கொள்பவனே கம்யூனிஸ்ட் என்பவன். அவனுக்கு துணை நிற்பது இயக்கவியல் பார்வை. சமூகத்தின் அணுக்கள் இயங்கும் திசையை புரிந்தவன் அவன். அன்றைய சோவியத் ரஷ்யா அவனுக்கு லெனின் என பெயர் சூட்டி அழைத்தது.

“சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும் அல்லது தொற்றுக்கிருமிகள் சோசலிசத்தை வீழ்த்தும்” எனப் பிரகடனம் செய்தான்.

தொழிலாளர் அரசு பதவியேறிய ஐந்து நாட்களிலேயே உத்தரவு வெளியானது. எல்லா ரஷ்ய மக்களுக்கும் இலவச அரசு மருத்துவ காப்பீடு! ‘தொட்டில் முதல் மரணம் வரை’ ஒவ்வொரு ரஷ்யனின் மருத்துவத்தையும் சுகாதாரத்தையும் அரசே முன்நின்று கண்காணித்து கவனித்துக் கொள்ளும் என உத்தரவு விரிந்தது.

மருத்துவம் இலவசமாக கிடைக்கும் என்பதை உலகம் முதன்முதலாக தெரிந்துகொண்டது. சோவியத் யூனியனாக மாறுகையில் சுகாதாரத்துக்கென தனி அமைச்சகத்தை முதன்முதலாக உலகம் கண்டது. Semashko பாணி எனப்படும் சோவியத் யூனியனின் பொது சுகாதார கட்டமைப்பை உலகம் முதலில் பார்த்தது.

கிராமம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களை சோவியத்தில்தான் உலகம் முதலில் பார்த்தது.

Semashko பாணி கட்டமைப்பில், ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் மக்களின் சுகாதாரத்துக்கும் அங்கிருக்கும் அரசு சுகாதார மையங்களே பொறுப்பாக்கப்பட்டன. பிறந்த குழந்தை முதல் ஊரில் இருக்கும் அத்தனை மக்களின் ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கும் சுகாதார மையமே முதற்படி. அடுத்தக்கட்ட சிகிச்சை தேவைப்பட்டால், நகரங்களில் இருக்கும் பல்நோக்கு மருத்துவமனைகளுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள். அதன் பின்னும் அவர்களின் உடல்நிலையை சுகாதார மையம் கண்காணித்து அரசுக்கு அறிக்கைகள் கொடுக்க வேண்டும்.

முதலாளித்துவ நாடுகளின் அரசுகள் திணறத் தொடங்கின. வேறு வழியே இல்லாமல் ‘Welfare state’ என்கிற பாணி அரசுக்கு மாறின. அதாவது ஈயம் பூசியதாகவும் இருக்க வேண்டும். பூசாதது போலும் இருக்க வேண்டும். சோகம் என்னவென்றால் சோவியத் யூனியன் நீடித்த கால அளவை கூட welfare stateகளால் எட்ட முடியவில்லை. Pied Piper கதை போல், வாசித்துக் கொண்டே ஊரின் எலிகளை அழைத்துச் சென்று கடலில் தள்ளுவதே Welfare state-ன் பாணி.

யோசித்து பாருங்கள். இன்றைய welfare stateகளின் சாதனைகள் நூறு வருடங்களுக்கு முன்பே சாத்தியமாகி இருக்கிறது. காரணம் கம்யூனிசம், சோவியத், லெனின்!

இன்று கூட கொரோனாவை கட்டுக்கு கொண்டு வந்த நாடுகளில் லெனின் கூற்றே வெற்றி பெற்றிருக்கிறது.

‘சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும் அல்லது தொற்றுக்கிருமிகள் சோசலிசத்தை வீழ்த்தும்!’

எல்லா காலங்களும் நோய்க்காலங்களே. எல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக்கிருமிகளே.

கம்யூனிசம் மட்டுமே நிரந்தரத் தீர்வு!

கம்யூனிசத்தை செப்பனிட்டு வெற்றிக்கு வழிகாட்டிய லெனினே தலைவன்!

RAJASANGEETHAN

(மாமேதை லெனின் பிறந்தநாள் இன்று)