மதுரை: 5ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்கள் மீது பாலியல் வழக்கு!

“போன வெள்ளிக்கிழமை (5-8-2016) நாங்க எங்க ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு காலையில் 8 மணிக்குப் போனோம். சீக்கிரமே போனதால் புத்தகப் பைகளை வகுப்பில் வச்சுச்சுட்டு, விளையாட ஆரம்பிச்சோம். அப்போது அந்த வழியே  மூணு பொண்ணுங்க, ஒரு பையன் வந்தாங்க.  அவங்க இந்து ஆரம்பப் பள்ளியில் படிக்கிறவங்க. எங்களைப் பார்த்து,  ‘குண்டா… குண்டா…’ என்று கேலி செஞ்சாங்க. பதிலுக்கு நாங்களும் அவங்களை கிண்டல் பண்ணினோம். ஒரு கட்டத்தில், அவங்க கல்லை எடுத்து எங்க மேல எறிய  ஆரம்பிச்சாங்க. நாங்க பயந்து போனோம். பதிலுக்கு ஒருத்தன் மட்டும்  அவங்க மேல கல்லைக் கொண்டு எறிஞ்சான். அதுக்குள்ள அவங்க ஊருக்காரங்க வந்துட்டாங்க. வந்து, எங்களை கண்டபடி மிரட்டி அடிக்க வந்தாங்க. அப்புறம் எங்க சாதியைச் சொல்லி கேவலமாக பேசினாங்க. அப்புறம் அப்படியே சண்டையாகி,  விசாரிக்கணும்னு போலீஸ் ஸ்டேசனுக்கு  சொல்லிட்டாங்க. இப்போ எங்களை ஜெயில்ல பிடிச்சுப் போடப் போறதா சொல்லுறாங்க. எங்களுக்கு பயமா இருக்கு சார்…” என்று மிரட்சியுடன் கூறினாகள், 5ஆம் வகுப்பு படிக்கும் அந்த 5 தலித் மாணவர்கள்.

இவர்கள் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம்,  சூலப்புரம் அருகில் உள்ள உலைப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், தொடக்க கல்வி பயிலும் மாணவ – மாணவியரிடையே ஏற்பட்ட இந்த சாதாரண பிரச்சனைக்காக, பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், பிளேடால் வெட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் அந்த 5 தலித் மாணவர்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது!

இந்த சிறுவர்களின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் இது பற்றி கூறுகையில், “மோசமான  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு சிறுமியின் மீதும் அதே பிரிவின்கீழ் வழக்கு பதிந்துள்ளது மதுரை மாவட்ட காவல்துறை. இந்த சட்டப் பிரிவுகளுக்கான தண்டனை குறைந்தது 7 ஆண்டு சிறை முதல் ஆயுள்தண்டனை வரை ஆகும். அதேபோல் POCSO சட்டத்துக்கான சரியான தகவல்கள் இல்லாத பட்சத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய சட்டங்களின் விதிகளை பயன்படுத்த வேண்டுமென்று  POCSO  சட்டப்பிரிவு 2(II) கூறுகிறது.

”அந்த வகையில் 7 – 12 வயது வரையுள்ள குழந்தைகள், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத பருவம் என்பதால், அவர்களை  குற்றவாளிகளாக கருத முடியாது என்று  இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 83 கூறுகிறது. ஒட்டுமொத்தத்தில் இது சாதி ரீதியான வழக்கு. காவல்துறை, குறிப்பிட்ட ஒரு சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக, அந்த சமூகத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இந்த குழந்தைகள் மீது கொடூர வன்மத்தை பாய்ச்சி இருக்கிறார்கள்.

”இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றாலும்  காவல்துறை தான் சிக்கலில் சிக்கும். அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.

”பள்ளிகளில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை விசாரிக்க முதலில் காவல்துறைக்கு அனுமதி இல்லை. மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும், கல்வித்துறையும் தான் விசாரிக்க வேண்டும். ‘பிளேடால் கிழித்தார்கள்; சாணியை கரைத்து ஊற்றினார்கள்’ என பொய்யாக குழந்தைகள் மீது அவதூறான செய்தியைப் பரப்பி வருகிறது மதுரை காவல்துறை. இது மோசமான சூழல். இந்தப்பிரச்னையின் அடிப்படையே சாதிதான்.

“அப்படியே காவல்துறையின் பார்வைக்கு  இந்த சம்பவம் முதலில் வந்திருந்தாலும், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, குழந்தைகள் நல அலுவலர்கள் மூலம் பிரச்னையை சரி செய்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று சட்டம் சொல்லுகிறது.

”இல்லையென்றால் இரு சமூகத்தினரையும் அழைத்து, குழந்தைகளின் சண்டை குறித்து விசாரித்து, சமரசம் செய்து அனுப்பியிருக்க வேண்டும். உசிலம்பட்டி தாலுகா இன்னமும் மாறவே இல்லை. அங்கு சாதியப் பாகுபாடு இன்னமும் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி. இதற்கு மாவட்ட நிர்வாகமும், இந்த அரசும் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.

”சட்டவிரோதமாக பொய்வழக்கு போட்ட உசிலம்பட்டி டி.எஸ்.பி., ஏழுமலை, காவல் ஆய்வாளர், எம்.கல்லுப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது SC/ST வன்கொடுமை திருத்தச் சட்டம்,  POCSO Act ஆகிய சட்டங்களின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்வழக்கு போடப்பட்ட பட்டியலின இளஞ்சிறார்களுக்கு SC/ST வன்கொடுமை திருத்தச் சட்டத்தின்படி உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்” என்றார்.

புகார் கொடுத்தவர்கள் தரப்பு வழக்கறிஞர் ரெட் காசி மாயன் கூறுகையில், “எங்க குழந்தைகள் அவங்க ஊரின் வழியாக பள்ளிக்கு செல்லும்பொழுது அவங்க தரப்பில் இருந்து, அந்தப் பசங்க எங்க குழந்தைகளை பிளேடால் கீறி, ‘உன் ரத்தமும்,என் ரத்தமும் ஒண்ணுதான்’னு சொல்லி எல்லை மீறியிருக்கிறார்கள். காயங்கள் இருக்கிறது. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நாங்க இதை சாதி ரீதியாக பார்க்கவில்லை. குழந்தைகள் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம். போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை அதிகாரி விஜயேந்திர பிதாரி, “புகார் கொடுத்தவுடன் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் இதுதான் முதல் வழக்கு இல்லை. இது போன்று வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. சண்டை நடந்திருக்கிறது. அதனால் வழக்குப் போட்டு, சிறுவர்கள் என்பதால் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். சட்டப்படிதான் எல்லாமே நடந்திருகிறது”  என்றார்.

சட்டப்படி தான் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, மிஸ்டர் விஜயேந்திர பிதாரி…?