ஜாக்கிரதை: அரசாங்கம் என்பது சாதாரணமானதில்லை!

இன்று ஒரு நண்பரை சந்தித்தபோது மற்றொரு நண்பரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த மற்றொரு நண்பர் எனக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர். மிகச்சில – ஆனால் முக்கியமான சந்தர்ப்பங்களில் நான் கடக்க நேர்ந்தவர். பொதுவான விசாரிப்புதான். ‘இப்போது அவர் என்ன செய்கிறார்?’ என்பது என் கேள்வி. ‘இப்ப அவர் ஒன்னும் செய்யல…!’ என்பது அவர் பதில். ஆனால் பிறகு அவரைப்பற்றி அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியின் உச்சம். இரண்டு தகவல்கள் இங்கே. ஒன்று அந்த நண்பரைப் பற்றியது. மற்றொன்று அந்த நண்பரின் வேறொரு நண்பரைப் பற்றியது.

நண்பர் பற்றிய தகவல்:

அவர் சில ஆண்டுகள் முன்புவரை சென்னைக்கு அருகாமையில் உள்ள அணுமின்நிலையத்தில் விஞ்ஞானிகள் குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தவர். தன் குடும்பத்தின் முதல் தலைமுறை ஊழியர். குடும்பம் தமிழகத்தின் பல இலட்சக்கணக்கான கிராமங்களில் ஒன்றைச் சேர்ந்தது. நண்பர் சென்னைக்கு அருகில் இருக்கும் அணுமின் நிலையத்தில் ஒரு குறிப்பிட்டகாலம் ஆய்வுப்பணிகளில் இருந்திருக்கிறார்.ஆய்வு என்றால் நண்பரை வைத்து நிலையம் அல்லது துறை செய்த ஆய்வுகள்.

குறிப்பிட்ட ஒரு ஆய்வுவகை- கிட்டத்தட்ட நிலவுக்குப் பயணம் செய்வதைப்போல முற்றிலும் கவசம் அணிந்த நிலையில் மேற்கொள்வது. எத்தனைப் பாதுகாப்பான உடைகள் தடுப்பான்கள் இருந்தாலும் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து தப்பமுடியாது. ஆறுமணிநேர கால அளவு. ஆய்வு முடிந்து வெளியில் வந்த அடுத்த நாற்பத்தெட்டு மணிநேரத்துக்கு உடலில் உணர்வு இருக்காது. இமைகள் மூடாவிட்டாலும் தூக்கநிலைதான். அடுத்து மனமும் உடலும் இயல்பு நிலைக்குத் திரும்ப சிலபலவாரங்கள் ஆகலாம். மேற்படி நண்பருக்கு இப்படியான ஆய்வில் தான் எத்தனைமுறை ஈடுபட்டோம் என்றெல்லாம் நினைவில்லை. இந்நிலையில் இப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நிற்க-

நண்பருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்ததும் நிறுவனம் முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை நண்பருடன் செய்துகொண்டிருக்கிறது. அதாவது, அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் வாழ்நாளைக்கும் தேவையான மாதாந்திரப் பொருளுதவியோடு அனைத்து வசதிகளையும் நிறுவனம் செய்துதரும் இனி அவர் வேலைக்கு வரத்தேவையில்லை. ஆனால் ஒரு நிபந்தனை- நண்பர் தனக்கு இவ்வகையான கதிர்வீச்சு சோதனைகளால் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி அவர் இந்த செய்தியை வெளியில் பரப்புவதாக நிறுவனம் அறிந்தால் அவருடைய உயிருக்கு உத்திரவாதமில்லை. அதாவது உயிரைப் பறிப்பதற்கான உரிமை நிறுவனத்துக்கு உண்டு.

இதன் அடிப்படையில் நண்பர் இத்தகவலை தன்னளவில் வைத்தபடி நிறுவனத்தின் பொருளுதுவியை ஏற்றுக்கொண்டு இடைவிடாத பயணங்களில் தன் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு லேபிள் இல்லாத மருந்து மாத்திரைகளை வழங்கி முடிந்தவரை பயணம் செய்யும் நாட்களை அதிகரித்துத்தரும் உதவியை நிறுவனம் செய்துவருகிறது.

நண்பரின் நண்பர் பற்றிய தகவல்:

மிகச்சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. நிறுவனப் பணியில் இவரைப்போலவே ஆய்வுகளில் ஈடுபட்டு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் இரவொடிரவாக நிறுவன வளாகத்திலிருந்து தப்பி ஓடியிருக்கிறார். (இப்படிப்பட்டவர்கள் நிறுவனத்தின் முழுமையான கண்காணிப்புப் பிடிக்குள் வந்துவிடுவார்கள் என்பது ஒரு உபரித்தகவல்) பிரச்சனை ஓடியதில் மட்டுமில்லை. அவரிடம் விஸ்வரூபம் கமல்ஹாசனின் கையில் இருந்த வாயல் போல ஒரு யுரேனியம் குப்பி இருந்திருக்கிறது. அதன் அளவுக்கு வெடித்தால் சுற்றிலும் இருபத்தைந்து கிலோமீட்டர் அளவுக்கு ஒரு ஹிரோஷிமா அல்லது நாகசாகி சாத்தியம் என்னும் அளவுக்கு அபாயம் நிறைந்தது.

தப்பி ஓடிய ஆளை சென்னையில் வைத்து மடக்கிப்பிடித்துவிட்டார்கள். ஆனால் அவர் கையில் இருந்த குப்பி கிடைக்கவில்லை. அழுத்தி விசாரித்ததில் குப்பியை நேப்பியர் பாலத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்னால் கூவம் நதிக்குள் தலைவன் விசிறி எறிந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த வாயலை கூவம் நதியிலிருந்து மீட்கவேண்டும். ஆனால் விஷயம் வெளியில் தெரியக்கூடாது. அத்தோடு இவ்வகை ஆய்வுகளுக்கு சென்னையிலேயே சமாதிகட்டிவிடுவார்கள்.

எப்படியாவது கூவம் நதிக்குள் தேடி குப்பியைக் கண்டுபிடித்தே தீர்வது என்று முடிவு செய்து இறங்கியிருக்கிறார்கள். கூவம் நதி கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கு முன்னால் இரு கரைகளையும் அடைத்து ஒரு வடிகட்டியை அமைத்து- இரண்டு அங்குலத்துக்கு அதிகமான எந்த ஒரு பொருளும் கடலுக்குள் கலந்துவிடாதபடி தடுத்து வெறும் நீரை மட்டும் வெளியேற்றி தேடல் நடந்திருக்கிறது. பலநூறுகோடிகள் செலவுகள், பல நூற்றுக்கணக்கான மனிதர்கள், டிடெக்டர்கள், விசாரணைகள் என்று நகர்ந்து- நம்புங்கள்- ஒன்றரை ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு அந்த குப்பியைக் கண்டுபிடித்து எடுத்திருக்கிறார்கள்.

கண்டுபிடிக்கப்பட்ட குப்பியை இந்தியாவின் முதல் குடிமகன் வரை வந்து பார்த்து உறுதிசெய்துவிட்டுப் போயிருக்கிறார். இது எதுவும் தெரியாமல் நம் சென்னை மக்கள் ‘என்னவோ கூவத்தை க்ளீன் பண்றாங்கப்பா’ என்று முகத்தைச் சுளித்தபடி கூவத்தைக் கடந்து போய்வந்திருக்கிறார்கள்.

‘குப்பியைக் கூவத்தில் எறிந்த அந்த நண்பரின் நண்பரை என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். ‘அவர் அப்பறம் என்ன ஆனார்னு தெரியலைபோல. ஆளக் காண்கலயாம்…’ என்றார் நண்பர்.
இப்போதும்கூட சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை வசிக்கும் மக்களிடம் ஒரு நேர்மையான ஆய்வு செய்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை, அவர்களின் வயது, வாழ்முறை பற்றியெல்லாம் உண்மையான கதைகளை நாம் அறியமுடியும் என்றார் அவர்.

கட்சிகள், தேர்தல்கள், கூட்டணிகள் என்றெல்லாம் நாம் வெளியில் வேறொரு தளத்தில் அப்பாவியாக மாய்ந்து மாய்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் மக்களால் தேர்வு செய்யப்பட்டு வருகிற ஒரு அரசு மக்களுக்காக மக்கள் மத்தியில் செய்துகொண்டிருக்கும் அசாதாரணகாரியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இது ஒரு உதாரணம்தான். ‘அரசு என்பது சாதாரணமானதல்ல. அதனிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்’ என்று சும்மாவா சொன்னார் பெரியார்?

– ஜிபி.யோகேஸ்வரன்