‘விசாரணை’: அந்த காட்சியில் நீங்கள் கலங்கவில்லை எனில்…

ஃப்ரன்ஸ் காஃப்கா நாவலின் தலைப்பை சூட்டியதிலிருந்து தொடங்குகிறது வெற்றிமாறனின் தர நுகர்ச்சி. விசாரணை என்கிற வார்த்தையே அதன் அர்த்தத்தை இழந்து பல நாட்களாகிவிட்டன.

யார் யாரை விசாரிப்பது?

மக்களின் வளத்தை கொள்ளையடிக்கும் அரசுகள் வீடு புகுந்து கொள்ளையடிப்பவனை விசாரிப்பதா? தூக்கு தண்டனைகள் வழங்கும் நீதிமன்றங்கள் கொலைக்குற்றங்களை விசாரிப்பதா? கற்பழிப்புகளை, கொலைகளை, மனித உரிமை மீறல்களை தன் job description-ஆக கொண்டிருக்கும் போலீஸ், குற்றங்களை விசாரிப்பதா?

இப்படியான விசாரணைகள், அவற்றின் மேல் எழுதப்படும் தீர்ப்புகள், அந்த தீர்ப்புகள் வழங்கும் தண்டனைகள், அந்த தண்டனைகள் கற்பிக்கும் நீதிகள், இறுதியாக இந்த நீதிகளை சொல்லி கட்டியெழுப்பப்பட்டிருக்கும் மொத்த அமைப்பு! இவ்வமைப்புக்குள் நியாயமும் மனிதமும் எத்தனைமுறை கொல்லப்பட்டிருக்கும்? அந்த அத்தனையையும் ஒரு படத்துக்குள் கோர்த்திருக்கிறார் வெற்றிமாறன்.

Nelson Xavier-தான் என்று நினைக்கிறேன். காவல்துறை அதிகாரி ஒருவருடன் நடந்த உரையாடலை ஒருமுறை பதிவிட்டிருந்தார். மக்களை காக்கத்தானே போலீஸ் என கேட்டதற்கு ‘அப்படியான எண்ணம்தான் பொதுவாக இருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. மக்களிடமிருந்து அரசை காக்கத்தான் போலீஸ்’ என்றாராம் அந்த அதிகாரி. காவல்துறையினரை அலெக்ஸ் பாண்டியன்களாகவும் அன்புச்செல்வன்களாகவும் ராகவன்களாகவும் போற்றியதன் விளைவு, பதவி கிடைத்ததும் ரஜினிகாந்த்துகளாகவும், சூர்யாக்களாகவும், கமலஹாசன்களாகவும் தங்களை பாவிக்க தொடங்கிவிடுகின்றனர்.

சமீபத்தில் ஸ்டேஷன் செல்லும் ஓர் அருமையான வாய்ப்பு எனக்கும் கிட்டியது. உங்களை குற்றவாளி ஆக்குவதற்கு உங்கள் மேல் புகார் கொடுப்பதே போதுமானது. புகாரின் நிமித்தம் அழைக்கப்பட்டு ஸ்டேஷனுக்கு சென்றால் போதும். நீங்கள் என்ன, ஏது என்ற அடிப்படை விசாரணையெல்லாம் இருக்காது. எனக்கும் அப்படித்தான் நேர்ந்தது. அடிபணிய மறுத்தால் அடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்ற நிகழ்ச்சி நிரல்தான் முதலில் வாசிக்கப்பட்டது. ஸ்டேஷனை விட்டு நான் வெளியே வந்தபோது, என்மீது புகார் கொடுத்தவர் எல்லா போலீசுக்கும் டீ, காபி, ஸ்நாக்ஸ் ஸ்பான்ஸர் பண்ணிக் கொண்டிருந்தார். Good Cop Bad Cop routine எல்லாம் இருந்த அந்த அனுபவத்தை பிறிதொரு தருணத்தில் பதிகிறேன்.

படத்தின் முதல் பாதி முடியும்போது உண்மையில் எனக்கு பெரிய நிறைவு இருக்கவில்லை. அம்மாவிடம்கூட அப்படித்தான் சொன்னேன். ஆட்டோ சந்திரன் தன் நாவலில் இன்னும் அதிக கனத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், இரண்டாம் பாதி ஓடுகையில்தான் வெற்றிமாறன் is a different animal altogether எனப் புரியத்தொடங்கியது.

தினேஷ் பாத்திரம் போன்ற அட்ரஸ் அற்றவர்கள் மாத்திரம் அல்ல, ஆடிட்டர் கிஷோர் போன்ற உயரத்தில் இருப்பவர்கள்கூட ஸ்டேஷனுக்குள் வந்தால் கதை கந்தல் என காட்டப்பட்டிருப்பது சிறப்பு. சொல்லப்போனால், வேட்டைக்கறியை கொண்டுவந்து வைத்துவிட்டு யாருக்கென்ன வேண்டுமென கேட்கும் கசாப்பு சந்தைதான் போலீஸ் ஸ்டேஷன். விளிம்புநிலையோ உயர்நிலையோ தனியனோ குழுவோ எது, எவன் கிட்டினாலும் பிடித்து வைத்துக்கொண்டு அமைப்புக்கும் அதிகாரத்துக்கும் உள்ள தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என ஆராயப்படும் இடம் அது.

எப்படி இப்படியெல்லாம் செய்தும் இரவில் நிம்மதியாக அவர்களால் தூங்க முடிகிறது என்று படம் முடிந்தபின்னும் கேட்டுக்கொண்டிருந்தார் என் அம்மா. எப்படி தெரியுமா? இந்த அக்கிரமங்கள்தான் போலீஸுக்கு பிழைப்பே. வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸில் கை நடுங்கினால் ஆப்பரேஷன் பண்ண முடியாதென்பாரே பிரகாஷ்ராஜ், அப்படித்தான். மனசாட்சி இருப்பவனுக்குத்தான் கைநடுங்கும். மனசாட்சி இல்லையென்றான பிறகுதான் போலீஸாக நீடிக்க முடியும். இல்லையென்றால் விஷ்ணுபிரியாதான்.

அங்கு வேலை பார்ப்பவர்களும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. எல்லாம் நமக்குள் இருந்து போகிறவர்கள்தான். கவனித்து பாருங்கள். மரணத்துக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என வேதாந்தம் பேசும் அந்த போலீஸ் நபரை நீங்கள் நடைமுறை வாழ்க்கையில் பல இடங்களில் சந்தித்திருப்பீர்கள். மிக இயல்பானவர்தான். மிக இயல்பாக கொலை செய்கிறார். அந்த கொலைக்கு மிக இயல்பாக காரணமும் கற்பித்துக்கொள்கிறார். இவ்வளவுதான் நம் தார்மீகம் எல்லாம். மொத்த சிஸ்டத்தின் ஏதோவொரு சக்கரத்தின் பல்லாகத்தான் நாம் எல்லாம் இயங்குகிறோம். யாரையோ ஒருவரை எப்போதும் அழித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி அழிப்பதற்கு வாழ்க்கைப்பாடு, குடும்பம், பணத்தேவை என ஏதோவொரு காரணத்தை கற்பித்துக்கொள்கிறோம். மெய்யான moral society என்பதையெல்லாம் அமைப்பதற்கு நமக்கு விருப்பமில்லை. அப்படி ஏதேனும் சொல்லப்பட்டாலும் அதை எள்ளி நகையாடும் முதல் நபரும் நாம்தான். Simply, a system of such sort, cannot survive without our consent.

லாக்கப் நாவலின், முகவரியற்ற சாமானியனில் தொடங்கி கிஷோர் போன்ற பலம் வாய்ந்த மனிதனையும் காவு வாங்கும் உருவற்ற கொடூர அமைப்பின் முகம்தான் போலீஸ் என அடித்து சொன்னதுதான் வெற்றிமாறனின் வெற்றி. அதிலும் 12 angry men போல், அனைவரும் உட்கார்ந்து அடுத்து என்ன செய்வதென விவாதித்துமுடித்ததும், all that said and done are part of the system என ஷரவண சுப்பையாவை literally சொல்ல வைத்ததெல்லாம் seriously genius . கீஸ்லோவ்ஸ்கி படம் பார்க்கும் உணர்வு கிட்டியது.

எனக்கு படத்தில் பெர்சனலாக பிடித்த கதாபாத்திரம், “நம்மள காப்பாத்திட்டு வந்தவரு… அதெல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டாரு. நான் போய் கேட்டு வர்றேன்” என துள்ளி ஓடி குண்டேந்தி விழும் இஸ்லாமிய கதாபாத்திரம் அஃப்சல்தான். அந்த காட்சியில் நீங்கள் கலங்கவில்லையெனில், நீங்கள் போலீஸ் ஆகலாம். அல்லது ஜெயமோகனுக்கு சொம்பு தூக்கலாம்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக அரச வன்முறையை, மனித உரிமை மீறல்களை படமாக்கியதற்காக, நம் அரசியலை பேசியதற்காக, வணிக சட்டகத்துக்குள்கூட தான் சொல்ல விரும்பும் சேதியை சொல்ல முடியும் என காட்டிய நேர்த்திக்காக, கவுதம் டேஷ் மேனன்கள் கொண்டாடும் என்கவுண்ட்டர்களை கிழித்து தொங்கவிட்டதற்காக, வெற்றிமாறனுக்கு பெருமைமிகு வாழ்த்துக்கள்.

பாலுமகேந்திரா கொண்டு வந்த இயக்குநர்களிலேயே சிறந்தவர் என்ற நம்பிக்கையை நாசமாக்கிய பாலாவை போலில்லாமல், குருவின் பெயரை காப்பாற்றும் சிஷ்யனாக இருப்பதற்கும் வாழ்த்துக்கள்.

தயவுசெய்து ‘விசாரணை’ படத்தை குடும்பத்துடன் சென்று பாருங்கள்.

ராஜசங்கீதன்

Read previous post:
31a
ஜாக்கிரதை: அரசாங்கம் என்பது சாதாரணமானதில்லை!

இன்று ஒரு நண்பரை சந்தித்தபோது மற்றொரு நண்பரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த மற்றொரு நண்பர் எனக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர். மிகச்சில – ஆனால் முக்கியமான சந்தர்ப்பங்களில்

Close