அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள்!

தி.மு.கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நீங்கள், இப்போது அரியலூருக்கு சென்று அனிதாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள போகிறீர்கள், நேரடியாக சென்று துயரத்தின் உச்சத்தில் இருக்கும் அந்த குடும்பத்தின் துக்கத்தில் பங்கு கொள்ள இருக்கிறீர்கள்.

அங்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு உடனே கிளம்பி சென்னை வரப்போகிறீர்களா? அதுதான் நீங்கள் இதுவரை பேசிய சமூக நீதிக்கு செய்யும் நியாயமா? என்ன செய்ய வேண்டும் நீங்கள்?

எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன்.

அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவுடன், அனிதாவின் சொந்த ஊரிலிருந்து பயணத்தை அறிவியுங்கள். நடந்தோ அல்லது இரண்டு சக்கர வாகனத்தில்அல்லது காரில் என எதில் வந்தாலும் சரி, சென்னையை நோக்கியான உங்கள் பயணத்தை அறிவித்து, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் அந்த பயணத்தில் இணைந்துகொள்ள அறிவிப்பு கொடுங்கள். வரும் வழியில் எல்லாம் மக்களை சந்தித்து “நீட்”டின் அவலத்தை பிரச்சாரம் செய்தபடியே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை நோக்கி செல்லுங்கள்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு வரும்வரை, அங்கேயே இருப்பேன் என்று அறிவியுங்கள்.

தமிழக அரசால் அதிக பட்சம் என்ன செய்ய முடியும்? உங்களை கைது செய்யும். கைது ஒன்றும் உங்களுக்கு புதிது அல்ல. மிசா உட்பட பல்வேறு அடக்குமுறைகளை கண்டவர் நீங்கள். இந்த பயணத்தின் மூலம் தமிழகம் முழுவதிற்கும் அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும். அந்த அந்த ஊர்களில் இருந்து மக்களையும், உங்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களையும், மற்ற இயக்கங்களின் தோழர்களையும் வரச் சொல்லுங்கள். தமிழகம் குலுங்கட்டும்.

உங்களால் தான், உங்கள் கட்சியால் தான் இதை செய்ய முடியும்.

வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு உயிர் துறந்து, மக்களுக்கான விசயத்தை செய்வதற்கான வாய்ப்பை, காலம் உங்களுக்கு வழங்கியிருக்கிறது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி தன்னுயிரை கொடுத்து ஈழ பிரச்னையை முன்வைத்து நிகழ்ந்த முத்துக்குமாரின் மரணம் உலகத்தை உலுக்கியது. அன்றைக்கு ஆட்சியில் இருந்த தி.மு.க.வின் சார்பில் நீங்கள் வந்து மலர்வளையம் வைத்து, ஈழ போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், இன்றைக்கு நீங்கள் சுமக்கும் அவமானங்களை சுமந்திருக்க வேண்டியிருக்காது. இன்றைக்கு வரலாறு உங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது,

நீங்கள் இப்போது எடுக்கும் முடிவு தான், தமிழ் மக்களின் பக்கம் முழுமையாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும்.

செய்வீர்களா செயல் தலைவரே…?

SUNDAR RAJAN