“அமலா பால் அடுத்த வருடம் விருது வாங்குவார்”: தனுஷ் கணிப்பு!

அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அம்மா கணக்கு’. இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் பணிகள் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது.

‘அம்மா கணக்கு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதுவரை தான் தயாரித்த படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாத தனுஷ், முதன் முறையாக ‘அம்மா கணக்கு’ சந்திப்பில் கலந்து கொண்டார்.

அச்சந்திப்பில் தனுஷ் பேசும்போது, “நான் ‘அம்மா கணக்கு’ சந்திப்புக்கு வருவேன் என்று வந்தேன். இதற்கு முந்தைய படங்களில் எல்லாம் அந்த நடிகரின் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் கலந்து கொள்ளவில்லை. வேறு எந்த காரணமும் கிடையாது.

‘அம்மா கணக்கு’ படத்தை என்னுடைய படமாகக் கருதுகிறேன். அதனால் தான் நான் வருகிறேன் என்று வந்தேன். ஆனந்த் எல்.ராயை வேறு ஒரு விஷயமாக சந்திக்கும் போது, ‘நில் பேட்டே சனாட்டா’ ட்ரெய்லர் மட்டும் காட்டினார். அதைப் பார்த்தவுடனே தமிழ் ரீமேக் உரிமையை என்னிடம் கொடுங்கள், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு தான் முழு படமும் பார்த்தேன்.

இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இப்படத்தில் இருக்கிறது. படிக்கிற குழந்தைகள் எந்த மாதிரியான அழுத்தத்துடன் இருக்கிறார்கள், அதை பெற்றோர்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை படித்து பெரிய ஆளாக்க அவர்களது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் வலி என்ன என்பதை சொல்லியிருக்கிறோம். குழந்தைகளும் பெற்றோர்கள் நமக்கு ஏன் இதெல்லாம் செய்கிறார்கள் என்கிற வலியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறோம்.

இந்த மாதிரி ஒரு முக்கியமான படத்தை கொடுத்ததற்கு அஸ்வினி ஐயருக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் இந்த படத்தை தயாரித்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.

அமலா பாலின் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு சிறந்த படமாக இருக்கும். அவருடைய சிறந்த நடிப்பை நீங்கள் இப்படத்தில் காணலாம். இதைத் தாண்டி அவர் பண்ணுவாரா என்பது எனக்கு தெரியவில்லை. இதுவரைக்கும் அவர் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை. அடுத்த வருடம் அனைத்து விருதுகளையும் அவர் வாங்குவார். இந்தப் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் இளையராஜா சாரின் இசை” என்று தெரிவித்தார்.