“சொந்த பணத்தில் படம் எடுக்கும் கலைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்!”

ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கும் படம் ‘வீரையன்’. இப்படத்தில் கதையின் நாயகனாக இனிகோ பிரபாகர், நாயகியாக ஷைனி நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘வீரையன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன், கே.எஸ்.தங்கசாமி மற்றும் ‘கில்டு’ தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

‘வீரையன்’ இசைத்தட்டை  இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட இயக்குநர்கள் சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “முதலில் “வீரையன்” படத்தின் தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். ஏனெனில், இந்த மாதிரியான படங்கள் தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தான் பல திறமையான கலைஞர்களை வழங்குவதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது என்று நான் சொல்வேன். எனவே இந்த மாதிரியான படங்களையும், கலைஞர்களையும் பத்திரிகை நண்பர்கள், மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். விண்ணில் பறக்க நினைக்கிற இந்த கலைஞர்களை உள்ளங்கையில் தாங்கி கைப்பிடித்து நடத்திச் செல்ல வேண்டும்.

“நான் இங்கே வந்தது இனிகோ பிரபாகரன் என்கிற ஒற்றை மனிதனுக்காகத் தான். இனிகோ பிரபாகரன், தமிழ் சினிமாவில் இன்று இருக்கக்கூடிய முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருக்கும் நிகரான ஒரு கதாநாயகன். எனக்கும் இனிகோ பிரபாகரனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கிறது. கண்டிப்பாக அது நடக்கும். காலம் அந்த வாய்ப்பை வழங்கும்” என்றார்.

(இனிகோ பிரபாகரன், சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டிய வாய்ப்பு, அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் தவறிப் போனது. அதோடு, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களிலும் சீனு ராமசாமி அழைத்தும் வேறு காரணங்களால் இனிகோ பிரபாகரன் நடிக்க முடியாமல் போனதை பற்றி, இனிகோ தன் பேச்சில் குறிப்பிட்டார்.)

இயக்குனர் சற்குணம் பேசுகையில், “திறமை இருந்தும் தன்னடக்கத்தோடு பேசிய இந்த படத்தின் இசையமைப்பாளர் அருணகிரிக்கு என் அன்பின் வாழ்த்துகள். “வீரையன்” பாடல்கள் யதார்த்தமாக இருக்கிறது. பாடலாசிரியர்கள் யுகபாரதி, கார்த்திக் நேத்தாவிற்கும் வாழ்த்துகள்.

“இந்த படத்தின் இயக்குநர் பரீத், என் முதல் படம் களவாணி படத்தின் தயாரிப்பாளர் நசீர் சாரின் மச்சானாக எனக்கு அறிமுகமானவர். களவாணி படம் முழுவதும் என்னுடன் நிர்வாக தயாரிப்பளராக பணியாற்றினார். மிகுந்த ரசனைக்காரர். இந்த கதையை என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறார். சொன்னது போலவே எடுத்திருக்கிறார்

“உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிகப் பெரிய கலைஞர்கள் யாரென்றால், சொந்தப் பணத்தில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள், சொந்த பணத்தில் படம் எடுக்கிற கலைஞர்கள் தான். வீரையன் படத்தின் இயக்குநர் பரீத், படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரும் இந்த படமும் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசுகையில், “இனிகோ பிரபாகரன் என் நண்பர். இனிகோ, என்னிடம் பேசும்போது, “சுந்தரபாண்டியன்” படம் எனக்கு மிகப் பெரிய அடையாளம் என்று சொல்வார். ஆனால், இனிமேல் இனிகோ பிரபாகரனுக்கு அடையாளமாக, “வீரையன்” படம் இருக்கும். இடைவிடாமல் தன்னம்பிக்கையோடு போராடுகிற ஒரு இளைஞன் இனிகோ பிரபாகரன்.

“வீரையன் படத்தின் பாடல்கள் எனக்கு களவாணி படத்தின் பாடல்களை நினைவுபடுத்துகின்றன. மிக யதார்த்தமான மெலடிகளாக இருக்கிறது பாடல்கள். இசையமைப்பாளர் அருணகிரிக்கு வாழ்த்துகள். டிரெய்லரில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் மிக சிறப்பாக இருக்கிறது. அதை இயக்குநர் பரீத் எழுதி இருக்கிறார் என்று சொன்னார்கள். அவருக்கு வாழ்த்துகள். 2017 இனிகோ பிரபாகரனின் வருடமாக இருக்க என் அன்பின் வாழ்த்துகள்” என்றார்.

இசை: S.N.அருணகிரி

ஒளிப்பதிவு: P.V.முருகேஷா

படத்தொகுப்பு: ராஜா முகமது

நடனம்: சரவண ராஜா

சண்டைக்காட்சி: ராக் பிரபு

மக்கள் தொடர்பு: இரா. குமரேசன்

v10