கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி இதழின் முன்னாள் ஆசிரியருமானமான ஐராவதம் மகாதேவன் ஐ.ஏ.எஸ். (வயது 88), சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார்.

நீண்ட நாள்களாக உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு, சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

1930ல் திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்த ஐராவதம் மகாதேவன், திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954 முதல் 1981 வரை 27 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணிக் காலத்தில் நேர்மைக்காகவும் கடின உழைப்புக்காகவும் திறமைக்காகவும் அவர் அறியப்பட்டிருந்தார். 1987 முதல் 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதன் மகாதேவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்துவெளி எழுத்துகள், பிராமி எழுத்துகள் (குறிப்பாக தமிழ்ப் பிராமி எழுத்துகள்) மீதான ஆர்வம் அவரை கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. 1970 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு செய்தார்.

முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியவர், பின்னர் கல்வெட்டு எழுத்துகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின், சிந்துவெளி நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பது அவரது கருத்து.

சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார்.

1966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார்; கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்ததை அடுத்து அவர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றையும் வெளியிட்டார்.

1977-ல் அவர் வெளியிட்ட ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’என்ற நூல் சிந்து சமவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல் கல். அந்த நூலில்தான் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

2009-ல் மத்திய அரசு வழங்கிய பத்ம விருது, அதே ஆண்டில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய டி.லிட் பட்டம், 2009-2010 ஆண்டுகளுக்கான ‘தொல்காப்பியர் விருது’, 2010-12-ல் ஆசியாட்டிக் சொஸைட்டி ஆஃப் மும்பை வழங்கிய ‘கேம்பெல் பதக்கம்’, 2015-ல் திராவிடப் பல்கலைக்கழகம் (குப்பம்) வழங்கிய டி..லிட் பட்டம் பெற்றுள்ளார்.‘தினமணி’ இதழின் ஆசிரியராக 1987 முதல் 1991 வரை பணியாற்றியுள்ளார்.