“ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவிக்கப்போவது அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும்!“ – பா.ஜ.க எம்.எல்.ஏ.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவிக்கப்போவது அம்பானி மற்றும் அதானி குழுமத்திற்கு முன்பே தெரியும்” என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பவானி சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று வரை சுமார் 9 நாட்களாக மக்கள் தங்களது பணத்தை வங்கியில் மாற்ற அவதிப்பட்டு வருகின்றனர்.
மோடியின் இந்த ரூபாய் நோட்டு நடவடிக்கை, 80 சதவீத ஏழை மக்களுக்குதான் பெரும் சோதனையாக உள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பாஜக உறுப்பினர் பவானி சிங் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “ரூபாய் நோட்டு மாற்று நடவடிக்கை அம்பானி, அதானிக்கு குழுமத்திற்கு முன்பே தெரியும்” என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டார்.
மேலும், புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளின் தரம் “கள்ள நோட்டு” போன்று உள்ளதாக அவர் கூறியது வீடியோப் பதிவில் உள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோ குறித்து எம்.எல்.ஏ பவானி சிங் மறுப்பு தெரிவித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் ஒருபோதும் பேட்டியில் அவ்வாறு கூறவில்லை, அந்த வீடியோ செயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டிக்கு பின் சில பத்திரிக்கையாளருடன் பேசி கொண்டிருந்தததை திரித்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.