பைக் திருடனான ‘வேந்தர் மூவிஸ்’ மதன் கோடீஸ்வரன் ஆன கதை!

காசியில் கங்கை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி இருக்கிறார் ‘வேந்தர் மூவிஸ்’ எஸ்.மதன். அவரது கிரிமினல் வாழ்க்கைக் கதை இதோ:-

குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர் மதன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மோட்டார் பைக் திருடியதாக இவர் மீது புகார் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதிலிருந்து தப்பிப்பதற்காக போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மும்பைக்கு தப்பிச் சென்று மதன் தலைமறைவானார்.

சில ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் திரும்பினார். அதன்பிறகு சென்னை வந்தார். தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கிக் கொடுக்கும் ஒரு புரோக்கருடன் ஒட்டிக்கொண்டார். ஆரம்பத்தில் மாணவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. புகாரில் சிக்கி கைதானார்.

அதன்பிறகு எஸ்ஆர்எம் குழும நிறுவனரும், கல்விக் கொள்ளையருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தருடன் ஏற்பட்ட பழக்கம், விசுவாசம் எல்லாம், அந்த கல்லூரியின் ஒட்டுமொத்த மருத்துவ சீட்களையும் மதன் மூலமே விற்கும் அளவுக்குப் போனது.

கல்லூரி சீட் வாங்கிக் கொடுப்பதில் மதனுக்கு கோடிகள் கொட்டின. மதன் உள்ளூர் மாணவர்களைக் குறி வைத்ததைக் காட்டிலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநில மாணவர்களை குறி வைத்தார். அதற்காக இங்கு படிக்கும் அந்த மாநில மாணவ்ர்களை தன்னுடைய புரோக்கர்கள் ஆக்கினார். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் கேன்வாஸ் செய்து, அங்கிருந்து ஆள் பிடித்துக் கொடுப்பார்கள். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நடக்கும்போதே புக்கிங் தொடங்கிவிடும். அப்போது சீட் வாங்கினால் 10 லட்சம் குறைவு என்று மதன் அறிவிப்பார். அப்படி வசூலிக்கும் பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்வார்.

அப்படித்தான் சினிமாவிலும் மதன் முதலீடு செய்தார். இதற்காகவே ‘வேந்தர் மூவிஸ்’ என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கினார். ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’, விஜய் நடித்த ‘தலைவா’ உட்பட 20க்கும் மேற்பட்ட படங்க்ளை வாங்கி விற்பனை செய்தார். சொந்தமாகவும் படம் எடுத்தார். ஆனால், அவை அனைத்தும் மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தின.

இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) தொடங்கிய பாரிவேந்தருக்கு பக்கபலமாக மதன் இருந்தார். 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லையில் மதனுக்கு சீட் கொடுத்தார் பாரிவேந்தர். பணத்தை வாரி இறைத்தபோதிலும், வெறும் 2,696 வாக்குகளை  மட்டுமே மதன் பெற்றார்.

இப்படி அரசியலிலும், சினிமாவிலும் மதன் தொலைத்த பணம் எல்லாம், மாணவர்களிடம் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி வாங்கிய பணம் தான். இப்போது மாணவர்களுக்கு கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். ஆனால், சீட் வாங்கித் தர இயலாத நிலை. ஏனெனில், கடந்த 6 மாதங்களாக பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையில் விரிசல் விழுந்துவிட்டது. பச்சமுத்துவின் சொத்துக்களை அபரிக்க மதன் திட்டமிட்டிருப்பதாக சந்தேகித்த அவரது மகன்கள் ரவியும், சத்யநாராயணனும், மதனை கண்டித்ததுடன், மதனுடனான உறவை துண்டித்துக்கொள்ளுமாறு தங்கள் தந்தை பச்சமுத்துவை அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததுதான் இந்த விரிசலுக்கு காரணம்.

பணம் கொடுத்த மாணவர்களுக்கு சீட் வாங்கித் தர இயலாவிட்டால், பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். நஷ்டத்தில் இருக்கும் மதன் பணத்துக்கு எங்கே போவார்?

இந்த நிலையில் தான், காசியில் கங்கை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார் மதன்.