“அடிமைப்புத்தி கொண்ட மந்தைக் கூட்டத்துக்கு சர்வாதிகாரி தான் தேவைப்படுவார்!”

அமெரிக்கா ரசாயுன ஆயுதங்களை கண்டுபிடிக்கிறோம் என சொல்லி ஈராக் புகுந்திருந்தது. அமெரிக்க படைகள் ஈராக் ராணுவத்தை சிதறடித்தன. பாத் கட்சி உறுப்பினர்கள் தப்பி ஓடினர். அரண்மனையும் பிடிக்கப்பட்டது. ஆனால் சதாம் இல்லை. தேடுதல் வேட்டை தொடர்ந்தது. உளவுகள் பகிரப்பட்டன. கடைசியில் ஒரு குழிக்குள் பதுங்கியிருந்த சதாம், மயக்க புகை போடப்பட்டு பிடிக்கப்பட்டார்.

ஈராக்கில் அமெரிக்காவின் பொம்மை அரசு நிறுவப்பட்டது. சன்னி, ஷியா மத பிரிவுகளுக்குள் மோதல் வெடித்தது. சிறுசிறு ஆயுதக்குழுக்கள் முளைத்தன. ஈராக் மக்களே நடமாட முடியாத அளவுக்கு வன்முறை தலைவிரித்தாடியது.

பிடிக்கப்பட்ட பின்பு, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் சதாம். அப்போதும் சிங்கமாக கர்ஜித்த சதாம் சொன்ன முக்கியமான வாக்கியம், “Iraq needed me”.

ஆம். ஈராக்குக்கு சதாம் தேவைப்பட்டார். அதை அந்த நேரத்தில் அமெரிக்கா உணர்ந்திருந்தது. சதாமின் ஆட்சியின்போது இருந்த ஒழுங்கு, பொம்மை அரசின் ஆட்சியில் இல்லை.

ஈராக்கியர்களுக்கு இருந்த முரட்டுத்தனத்தையும் குழு மனப்பான்மையையும் சரி செய்ய சதாம் தேவைப்பட்டார். அவர் ஆட்சி நிர்ப்பந்தித்த கட்டுப்பட்ட ஒழுங்கு தேவைப்பட்டது. இல்லையெனில் முதலாளித்துவத்தின் கையில் சிக்கி சீரழிந்த ஆப்பிரிக்க நாடுகள் போல், ஈராக்கும் என்றைக்கோ சீரழிந்திருக்கும்.

அடிமைப்புத்தி கொண்ட மந்தைக்கூட்டத்துக்கு சர்வாதிகாரிதான் தேவைப்படுவார்.

அதனால்தான் அதிமுகவுக்கு ஜெயலலிதா!

ஜெயலலிதா கண்டிப்பாக சதாமுக்கு எள் அளவிலும் நிகர் இல்லை. ஆனால் அதிமுக கூடாரம் அப்படியே ஈராக். அந்த அடிமைகளுக்கு ஜெயலலிதா என்ற சர்வாதிகாரி இருந்திராவிட்டால், என்றைக்கோ அதிமுகவை அழித்து விட்டிருப்பார்கள்.

அதைத்தான் இன்று தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

RAJASANGEETHAN JOHN