நகைச்சுவை நடிகர் தவக்களை மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்

இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அனைவரையும் சிரிக்க வைத்த சிட்டிபாபு என்ற தவக்களை இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42.

அவருக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது. தவக்களையின் சொந்த ஊர் நெல்லூர். அங்கு அம்மா மற்றும் தங்கை ஆகியோர் இருக்கிறார்கள்.

இதுவரை 67 படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வந்தார். நேற்று முன்தினம் கேரளாவில் ஒரு மலையாள படத்தில் நடித்துவிட்டு, சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டிற்க்கு வந்து தூங்கியவர், இன்று காலை எழுந்தவுடன் வாந்தி எடுத்துள்ளார். அவரது மனைவி தண்ணீர் கொடுக்க, குடித்த பின் அவர் உயிர் பிரிந்தது என்று அவரது நண்பர்கள் கூறினார்கள்.

நாளை காலை 10 மணிக்கு ஏ.வி.எம் சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

நடிகர் தவக்களை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி:

இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காமெடி நடிகராக பிரபலமானவர் சிட்டிபாபு என்ற தவக்களை. அவருக்கு வயது 42. அவர் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

நாடகத்துறையில் இருந்து கே.பாக்யராஜ் மூலமாக சினமாவில் அறிமுகமாகி, தனது இயல்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனி முத்திரை பதித்தவர் சிட்டிபாபு என்ற தவக்களை. அவர் எதிர்பாராதவிதமாக காலமானதை அறிந்து மிகவும் வேதனையடைகிறோம் அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும், நடிகர் சமூகத்துக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம்.

இவ்வாறு நடிகர் சங்கம் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

Read previous post:
0
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னையில் போராட்டம்!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே17 இயக்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய

Close