ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு கமல் முழு ஆதரவு!

நடிகர் கமல்ஹாசன் சமீப நாட்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக பிரச்சனைகள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து தனது ஆணித்தரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது கருத்துகளுக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இந்திய ஒன்றிய அரசின் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்ட களத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் இப்போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து, கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும்.

இயற்கையை அழித்து, ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து பெறும் எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வெற்றியும் மோசமானது. தமிழக மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள்.

இயற்கையானது குறிப்பிட்ட ஒரு மனிதனுக்காக எந்த வளங்களையும் வழங்கவில்லை. அது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான வளங்களை மட்டுமே வழங்குகிறது.

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் அமைதியை கடைப்பிடியுங்கள். அதேநேரத்தில் விவசாயிகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் எழுப்புங்கள். உங்களைவிட பெரியவர்கள் உங்களை சமமாக மதிப்பதை உணருங்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Read previous post:
0
நகைச்சுவை நடிகர் தவக்களை மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்

இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அனைவரையும் சிரிக்க வைத்த சிட்டிபாபு என்ற தவக்களை இன்று காலை மரணம்

Close