முதல் பார்வை: ஆண்டவன் கட்டளை – நல்ல சினிமா!

முதலில் இயக்குனர் எம்.மணிகண்டனுக்கு ஒரு பெரிய பூந்தோட்டம்.

இது போன்ற படங்களில் நடித்து, தன்னை ஒரு மேம்பட்ட நடிகனாய் நிறுத்திவரும் விஜய்சேதுபதிக்கு அடிமனதிலிருந்து வாழ்த்துகள்.

ஒரே ஒரு படத்தின் மூலம், வெளிநாடு செல்வதற்காக எதையும் செய்யத் துணியும் கிராமத்து இளைஞர்கள், அவர்களின் வெள்ளந்தியான குடும்பம் மற்றும் உறவு சிக்கல்கள், சென்னை வீடு வாடகை குறித்த அவலங்கள், இலங்கை தமிழ் பிரச்சினையின் ஒரு கோர மற்றும் சோக முகம், விவாகரத்து மலிவாய் போன ஒரு சமூகம் – இவை அனைத்தையும், சிரிக்கச் சிரிக்க மட்டுமல்லாமல்…. தொண்டை அடைக்க சில சமயங்களில் சொன்ன விதத்திற்கும் எழுதியவர்களுக்கும், இயக்கியவருக்கும் பாராட்டுகள்.

நாசர் சாரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்து எவ்வளவு நாளாயிற்று? ஒரு பாந்தமான மனிதனை, கலைஞனை….’காசைப் பற்றி அலட்டிக் கொள்ளாத மற்றுமொரு இளிச்சவாய அதே சமயம் மரியாதைக்குரிய’ கலைஞனை….நாசர் சாரைத் தவிர யாரால் செய்ய முடியும்?

யோகிபாபு – தேவர் மகன் இசக்கி வடிவேலுவுக்கு என்றால், ஆண்டவன் கட்டளை பாண்டி யோகி பாபுவுக்கு!

நேசனாய் நடித்த அந்த இலங்கைத் தமிழர் – கண்ணீர் வரவழைத்து விட்டார். நேசன் போராளி தான்… வாழ்க்கை எனும் போரை அச்சத்தோடும், கண்ணீரோடும் சந்திக்கும் போராளி!

வக்கீல்கள் இருவரும் (வினோதினி, வைத்தியநாதன்) சூப்பர். அந்த மிரட்டும் ஜட்ஜ் கூட அசத்தியிருக்கிறார்.

சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட, வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, கலரிஸ்ட் (பாலாஜி), நிர்வாகத் தயாரிப்பு (ஹரி) மற்றும் இவ்வளவு ஒரு சிறந்த படத்தைத் தயாரித்த கோபுரம் பிலிம்ஸ் அன்பு அவர்கள் என்று அனைவரும் பாராட்டுகளுக்கும், விருதுகளுக்கும் உரியவர்கள்.

வணிக சினிமாவிற்கும், தரத்திற்கும் ஒரு பூப்பாதை போடப்பட்டுள்ளது. கெட்டியாய் இந்த பாதையைப் பிடித்து பயணிப்பது நம் எல்லோரின் கையிலும் உள்ளது.

மணிகண்டன் – தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள். நிறைய ஆயுளும், அனைத்துக் கொண்டாட்டங்களும் உங்கள் வாழ்வில் அமைய, நல்ல திரைப்படங்கள் கொடுக்க வாழ்த்துகள்!

பி.கு:- யார் சொல்றதையும், எழுதறதையும் கேக்காதீங்க, படிக்காதீங்க….நான் உட்பட! போய் பாருங்க!

– அருண் வைத்தியநாதன்

திரைப்பட இயக்குனர்

                                             # # #

ஆண்டவன் கட்டளை’ எனக்கு ரொம்ப புடிச்சுருந்துச்சு. எளிமையான கதை, யதார்த்தமான பாத்திரங்கள், இயல்பான சிக்கல்கள் என மிக மென்மையான சினிமா.

ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு களத்தில் அமைத்து மெருகேறிக்கொண்டே செல்கிறார் இயக்குனர் எம்.மணிகண்டன். வன்முறை, கசக்கிப் பிழியும் சோகம் மட்டுமே மாற்று சினிமா என்பதை மாற்றி, மிக எளிமையான சுவாரசியமான படங்களும் நல்ல சினிமா என்று தொடர்ச்சியாக நிரூபித்தும் வருகிறார். தமிழ் சினிமாவை ஃப்ரெஷ்ஷான ஒரு புதிய பாதைக்கு திருப்புவதில் மணிகண்டனின் பங்கு மிக முக்கியமானதாய் இருக்கும்.

ஃபீல் குட் படம் என்று சொல்வார்கள். I felt very very good. எந்தவித மசாலா காம்ப்ரமைஸ்களும் இல்லாத கதைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கவும் அதில் இத்தனை இயல்பாய் நடிக்கவும் விஜய் சேதுபதி போல் மற்ற நடிகர்களும் முன்வந்தால் தமிழ் சினிமா ஆஸ்கருக்கு வருடம் ஒரு படத்தை அனுப்பும்!

– ஜெயச்சந்திர ஹஷ்மி

திரைப்பட இணை இயக்குனர்

                                      # # #

ஆண்டவன் கட்டளை –

ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஏற்படும் மனநிறைவை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணரத்தான் முடியும்.

அற்புதம், அபாரம், ஆனந்தம்.

செம எண்டர்டெயினர். Week end-ற்கு கச்சிதமானதொரு தேர்வு.

மணிகண்டன் மற்றும் குழு வெற்றிகரமான ஹாட்ரிக் அடித்திருக்கிறார்கள். திரையரங்கில் போய் கொண்டாடுங்கள்.

விஜய் சேதுபதியை விடுங்கள், அவன் மெல்ல மெல்ல நடிப்பு ராட்சசனாகிக் கொண்டிருக்கிறான்.

இந்தப் பொண்ணு ரித்திகா சிங், முதல் படத்தின் அற்புதம், தற்செயலாக இருக்குமோ என்று பார்த்தால் இரண்டாவது படத்திலும் மாயாஜாலம் புரிந்திருக்கிறார்.

விசாரணை அதிகாரியாக வரும் ஒரு நபர் என்ன கலக்குகிறார்!

பேச வேண்டியது நிறைய இருக்கிறது.

  • சுரேஷ் கண்ணன்

திரைப்பட விமர்சகர்