ஆதி – நிக்கி கல்ராணி நடிக்கும் திரில்லர்: ஆக்சஸ் பிலிம் தயாரிக்கிறது!

‘உறுமீன்’ படத்தை தயாரித்த இளம் தயாரிப்பாளர் டில்லி பாபுவின் ஆக்சஸ் பிலிம் நிறுவனம், அடுத்து திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்க, அவருக்கு இணையாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், டேனியேல், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

புதிய இயக்குனர்  ஏ.ஆர்.கே.சரவண் இயக்க, பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்ய,  புதிய இசையமைப்பாளர்  திபு   இசையமைக்க தயாராகும் இந்த படம் விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு கூறுகையில், “என் பள்ளி பருவத்தில் இருந்தே சினிமா மீது எனக்கு எல்லையற்ற மோகம் உண்டு. எனக்கென்று ஒரு நிலையான பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ‘உறுமீன்’ திரைப்படம் மூலம் நிறைவேறியது. அதனை தொடர்ந்து இளம் திறமையாளர்களுக்கு ஏணிப்படியாக இருக்க வேண்டும் என கருதி உருவாக்கப்பட்டது தான் ‘ஆக்சஸ் பிலிம்’ நிறுவனம்.

“பொதுவாக படத்தில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என பலரின் பங்கு இருந்தாலும்  அந்த திரைப்படத்தின் தலையாய பொறுப்புகள்  அனைத்தும் தயாரிப்பாளரையே சாரும். அந்த வகையில் தரம் வாய்ந்த படங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் ஆக்சஸ் பிலிம்ஸின்  முக்கிய குறிக்கோள்.

“எங்கள் நிறுவனத்தின் இந்த இரண்டாவது படைப்பில், தனித்துவமான நடிகர் ஆதி மற்றும் தமிழ் சினிமாவின் தற்போதைய லக்கி ஸ்டாராக திகழும் நிக்கி கல்ராணி ஆகியோருடன் இணைந்து செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிச்சயம் எங்களின் இந்த ஆக்சஸ் பிலிம் நிறுவனம், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் அனைத்து திறமையாளர்களுக்கும் ஒரு  படிக்கல்லாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.