அச்சம் என்பது மடமையடா: “ராசாளி” பாடல் பற்றி தாமரை!

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில், கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். தற்போது ‘ராசாளி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் குறித்து கவிஞர் தாமரை எழுதியிருப்பதாவது:-

26.5.16 மாலை 6 மணிக்கு, அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம் பெறும் ‘பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு’ என்ற பாடல் வெளிடப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் நான்கு இலட்சம் பார்வையாளர்களைப் பெற்று இன்னும் தொடர்கிறது. பலர் மனதையும் கவர்ந்திருப்பதை அறிய முடிகிறது. மகிழ்ச்சி.

இந்தப் பாடலை நான் எழுதிய சூழ்நிலையைப் பற்றி ஏற்கெனவே முகநூலிலும், குமுதம் வார இதழிலும் பகிர்ந்திருந்தேன். நானும் சமரனும் ‘தெருப் போராட்டம்’ நடத்தி வீடு வந்த மறுநாள் இந்தப் பாடலின் சரணத்திற்காக இயக்குநர் கௌதமிடமிருந்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் இருந்தும் அழைப்பு வந்தது.

மனம், உடல் இரண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாகப் பாடல் அமைப்பிலும் வரிகளிலும் பதிவிலும் ஈடுபட்டேன். ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகே வெளிவந்துள்ளது. இதற்குப் பிறகு எழுதிய ‘தள்ளிப் போகாதே’ முன்பே (1.1.2016) வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.

காட்சி: கதாநாயகன், கதாநாயகி இருவரும் இருசக்கர வாகனத்தில் நீண்ட பயணம் மேற்கொள்ளுதல், அதன் ஊடாக எழும் அன்புணர்வு, உற்சாகம், தயக்கம் உள்ளிட்டவை. காட்சியமைப்புக்கான பாடல். முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது.

சரணம் ‘திருப்புகழ் – அத்தித்திரு’ எனத் தொடங்கும் புகழ்பெற்ற பாடலைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அழகான, அதே சமயம் கடினமான சந்தம். வேகமாக ஓடக்கூடியது. எச்சரிக்கையாகக் கையாளவில்லையெனில் ஒன்றும் புரியாமல் போகக்கூடிய அபாயம் உள்ளது. (மற்ற சிறு விவரங்களைப் பின்னொரு சமயம் விவரிக்கிறேன்.)

ராசாளி என்பது ஒரு பறவை. கம்பீரமானது, வேகமாகப் பறக்கக் கூடியது. கழுகு, கருடன், பருந்து என்று சொல்லலாம். ‘ராஜாளி’ என்ற பயன்பாட்டைத் தவிர்த்து ‘ராசாளி’ என்று எழுதியிருக்கிறேன். ஜ, ஹ, ஷ, க்ஷ போன்ற வடமொழி எழுத்துகளைத் தவிர்த்து வருகிறேன்.

https://youtu.be/eTqiH-fxeS8