“முதல்வர் ஜெயலலிதாவை வார்டுக்கே சென்று பார்த்தேன்”: ஆளுநர் அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அவர் பாதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அப்போது தெரிவித்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்கள் ஆகியும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படாததாலும், அவரது தோழி சசிகலாவைத் தவிர வெளியார் யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படாததாலும், அவரது உடல் நிலை பற்றி ஒன்றுக்கொன்று முரணான பல்வேறு யூகத் தகவல்கள் உலா வரத் தொடங்கின.

0a1h

இந்நிலையில், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று  மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து இறங்கினார். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேராக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மாலை 6.45 மணிக்கு வந்தார். மருத்துவமனைக்குள் சுமார் அரை மணி நேரம் இருந்த வித்யாசாகர் ராவ், பின்னர் வெளியே வந்து காரில் ஏறி சென்றுவிட்டார்.

அதன்பின் சென்னை ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று அவரை பார்த்தேன். அவர் நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலை தேறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் விளக்கினார்கள். சிறப்பாக சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களுக்கு நன்றி” என்று அதில் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை:

0a1k