24 – விமர்சனம்

பேய் போலவே டைம் மிஷின் எனப்படும் கால எந்திரமும் கற்பனையானது. உலகில் இல்லாதது. எதிர்காலத்தில் சாத்தியம் என உறுதியாகச் சொல்லவும் முடியாதது. எனினும், இல்லாத பேயை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களைப் பார்ப்பதற்கென்று உலகம் முழுவதும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதைப் போல, இல்லாத டைம் மிஷினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களை கண்டு களிப்பதற்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்களுக்காகவும், அவர்களது ரசனையை வளர்த்தெடுப்பதற்காகவும் வெளிவந்திருக்கிறது சூர்யாவின் ‘24’ திரைப்படம்.

படத்தின் ஆரம்பத்தில், டாக்டர் சேதுராமன் என்ற விஞ்ஞானி கதாபாத்திரத்தில் வருகிறார் ஒரு சூர்யா. தனது மனைவி நித்யா மேனன் மற்றும் கைக்குழந்தையுடன் மேகமலை என்ற மலைகிராமத்தில் வாழ்ந்துவரும் அவர், பல வருட ஆராய்ச்சிக்குப்பின், ஒரு டைம் மிஷினை கண்டுபிடித்து, அதை கைக்கடிகார வடிவில் வடிவமைக்கிறார். அந்த டைம் மிஷினை கையில் கட்டிக்கொள்பவரை அது 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் அழைத்துச் சென்று, அவர் விரும்பியவாறு சம்பவங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வழிவகை செய்யும்.

அந்த அதிசய கைக்கடிகாரத்தை கைப்பற்ற பேராசையுடன் துடிக்கிறார், டாக்டர் சேதுராமனின் அண்ணனான ஆத்ரேயா என்ற வில்லன் சூர்யா. இதற்காக, தம்பி என்றும் பாராமல் டாக்டர் சேதுராமனையும், அவரது குடும்பத்தையும் அழிக்கவும் துணிகிறார். அவரது கொடூரத் தாக்குதலில் டாக்டர் சேதுராமனின் மனைவி நித்யாமேனன் பரிதாபமாக உயிரிழக்கிறார். படுகாயங்களுடனும், கைக்குழந்தையுடனும் தப்பிச்செல்லும் டாக்டர் சேதுராமன், கைக்கடிகாரத்தை ஒரு சிறிய அறிவியல் வினோத பெட்டிக்குள் வைத்துப் பூட்டி, அதையும், குழந்தையையும், முன்பின் தெரியாத சக ரயில் பயணியான சரண்யா பொன்வண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகிறார். தனியே செல்லும் டாக்டர் சேதுராமனை அன்ணன் ஆத்ரேயா சுட்டுக் கொன்றுவிடுகிறார். அதன்பின் நடக்கும் ஒரு கோர விபத்தில் சிக்கும் ஆத்ரேயா, உயிருக்கு ஆபத்தான நிலையில், சுயநினைவை இழந்து கோமா நிலைக்குப் போய்விடுகிறார்.

26 வருடங்கள் உருண்டோடுகின்றன.

சரண்யா பொன்வண்ணனின் வளர்ப்பில் டாக்டர் சேதுராமனின் குழந்தை வளர்ந்து இளைஞனாகி, சென்னையில் மணி என்ற பெயரில் மூன்றாவது சூர்யாவாக இருக்கிறார். அவர் சொந்தமாக கடிகாரக்கடை நடத்தி வருகிறார். கடிகாரம் பழுது பார்ப்பவராகவும் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில், தங்கள் வீட்டிலிருக்கும் டைம் மிஷின் அடங்கிய பெட்டியை திறந்துவிடுகிறார் மணி. அப்போதுதான் அதிலுள்ள கைக்கடிகார வடிவ டைம் மிஷினின் அதிசய ஆற்றல் அவருக்கு தெரிய வருகிறது.

இந்நிலையில், கோமாவில் இருந்து மீளும் ஆத்ரேயா, கழுத்துக்குக் கீழே தன் உடல் செயல்படாது என்பதை அறிந்து அதிர்ந்து கோபமும் எரிச்சலும் அடைகிறார். தனது தம்பி டாக்டர் சேதுராமன் கண்டுபிடித்த டைம் மிஷின் மூலமாக 26 வருடங்கள் பின்னோக்கிச் சென்று, அப்போது நடந்த விபத்து உள்ளிட்ட சம்பவங்களை மாற்றியமைப்பதன் மூலம்தான் தன் உடல் நிலையை சரிசெய்ய முடியும் என்று எண்ணுகிறார். இதற்காக, எந்திர நாற்காலியில் அமர்ந்தவாறு இடம் பெயரும் கொடுமையான நிலையில் இருக்கும் ஆத்ரேயா, அந்த டைம் மிஷினை தேட ஆரம்பிக்கிறார்.

மணி வசம் இருக்கும் டைம் மிஷினை ஆத்ரேயா கைப்பற்றினாரா? அதை பயன்படுத்தி 26 வருடங்கள் பின்னோக்கிச் சென்று தன் உடல் நிலையை சரி செய்தாரா? அல்லது மணி தனது பெற்றோரை கொன்ற ஆத்ரேயாவை பழி வாங்கினாரா? அதே டைம் மிஷினை பயன்படுத்தி பின்னோக்கிச் சென்று, தனது அம்மாவும் அப்பாவும் கொல்லப்பட்ட சம்பவங்களை மாற்றியமைத்து அவர்களை உயிருடன் மீட்டாரா? என்பது சுவாரஸ்யமான மீதிக்கதை.

விஞ்ஞானியான டாக்டர் சேதுராமன், அவரது கொடூர அண்ணனான ஆத்ரேயா, விஞ்ஞானியின் மகனான கடிகாரக்கடை மணி ஆகிய மூன்று வேடங்களில் வருகிறார் சூர்யா. இந்த மூன்று கதாபாத்திரங்களிலும் அவர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒன்றுக்கொன்று வித்தியாசம் என்று சொல்லும் அளவு மாறுபட்ட மூன்றுவித நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அதிலும், வில்லன் தோற்றத்தில் அவர் காட்டும் முகபாவனைகள் மிரள வைக்கிறது; சபாஷ் போட வைக்கிறது.

நித்யாமேனன், ஒரு சில காட்சிகளே வந்தாலும், தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். நடிப்பிலும் ரசிகர்கள் மனதில் அழகாக பதிந்துவிடுகிறார்.

சமந்தா வரும் காட்சிகள் எல்லாம் ரொமான்ஸ், காமெடி என களைகட்டுகிறது. ஒருசில காட்சிகளில் மிகவும் வெகுளியாக நடித்து ரசிக்க வைக்கிறார்.

0a2b

கடிகாரக்கடை நடத்தும் சூர்யாவின் நண்பராக வரும் சத்யன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் பாசமுள்ள அம்மாவாக மனதில் பதிகிறார்.

இயக்குனர் விக்ரம் குமார் ஒரு டைம் மிஷின் கதையை ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் மிகவும் தெளிவாக எடுத்திருக்கிறார். எந்தவொரு காட்சியிலும் சினிமாத்தனம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார். திரில்லர் பாணியிலான இவருடைய விறுவிறுப்பான திரைக்கதையை பாராட்டியே ஆகவேண்டும். டைம் மிஷினை வைத்து காலத்தின் பின்னோக்கிச் செல்லும் காட்சிகளை தெளிவாகவும், ரசிகர்களுக்கு புரியும்படியும் எடுத்திருப்பது சிறப்பு.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ‘காலம் என் காதலியோ’ என்ற பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. காட்சிகளும், கதாபாத்திரங்களும் இவரது கேமராவில் அழகாகவும், தெளிவாகவும் படமாகியிருக்கிறது. அதேபோல், காலம் மாறும் காட்சிகள், மழை பாதியிலேயே நிற்கும் காட்சிகள் போன்ற கிராபிக்ஸ் காட்சிகளும் மிகவும் பிரமாண்டமாக இருக்கின்றன.

கால எந்திரம் என்பதை – கைக்கடிகாரத்தில் இருப்பது போல் – ஏதோ பலவித பல்சக்கரங்களின் தொகுப்பு என்பது போல காட்சிப்படுத்தியிருப்பது அமெச்சூர்தனமாக இருந்தாலும், திக் திக் திக் திரைக்கதையில் லவ், ஆக்ஷன், சென்டிமெண்ட் எல்லாம் சுலந்து ‘ 24 ‘ திரைப்படத்தை 2.44 மணி நேர அறுசுவை விருந்தாக படைத்திருக்கிறார்கள்.

‘24’ – புதிய முயற்சி; வரவேற்கலாம்!