“காதலிலும் கலப்படம் வந்துவிட்டது!” – காஜல் அகர்வால்

இன்ன்றைய காதல், கல்யாணம், விவாகரத்து குறித்து நடிகை காஜல் அகர்வால் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

காதல் விஷயத்தில் இன்றைய இளைஞர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். பால், பருப்பு, தண்ணீரில் கலப்படம் இருப்பதை பார்த்து இருக்கிறோம். இப்போது காதலிலும் கலப்படம் வந்துவிட்டது. சுயநல காதல்கள் பெருகிவிட்டன. அந்த சுயநல காதல்கள் ரொம்ப காலம் நீடிப்பது இல்லை. காதல் என்பது அபூர்வமான விஷயம்.

ஒரு தடவை காதலித்தால் அந்த காதலில் உண்மையாக இருக்க வேண்டும். அந்த உறவை அனுபவிக்க வேண்டும். அது நிஜமான காதலாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய காதலர்களை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. காதலில் அவர்கள் உண்மையாக இல்லை. ஏதோ பெயரளவுக்கு காதலிக்கிறார்கள். அந்த காதலை சிறிய விஷயமாக பார்க்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் ஆழமாக காதலிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே காதல் சரிபட்டு வரவில்லை, அதனால் பிரிந்து விட்டோம் என்கிறார்கள்.

எங்கே தவறு நடந்தது என்று கண்டுபிடித்து அந்த காதல் உறவை சரிப்படுத்தி நீட்டிக்க வேண்டும் என்று யாருக்கும் இங்கு பொறுமையும் இல்லை. காதலின் மதிப்பு தெரியாதவர்கள்தான் காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் காதலில் விழுந்தால் அப்படி செய்ய மாட்டேன். கடைசி வரை காதலுக்கு உண்மையாக இருப்பேன்.

என்னை சந்திப்பவர்களெல்லாம் எப்போது உங்கள் திருமணம் என்று கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசைதான். ஆனால் மனதுக்கு பிடித்தவரை இதுவரை சந்திக்கவில்லை. பிடித்தவரை பார்க்கும்போது காதலிப்பேன். அவருக்காக அதிக நேரத்தையும் செலவிடுவேன்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.