மோடியின் நோட்டு நடவடிக்கையை புகழ்ந்து ‘2.0’ வசனகர்த்தா ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை!

எழவு வீட்டில் பல்லிளிக்கும் இழிகுணம் கொண்ட நபும்சகர் – இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகன். பல புத்தகங்களும், பாலாவின் ‘நான் கடவுள்’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ள இவர், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்துக்கு இயக்குனர் ஷங்கரோடு சேர்ந்து வசனம் எழுதியிருக்கிறார். “ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது” என்று நரேந்திர மோடி திடீரென அறிவிக்க, கருப்பு பண முதலைகளெல்லாம் “ஹேட்ஸ் ஆஃப் டு மோடிஜி” என்று பாராட்டிக்கொண்டிருக்க, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே பணம் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்க, இந்த ஜெயமோகனோ தனது JEYAMOHAN.IN-ல், மோடியின் நோட்டு நடவடிக்கையை வரவேற்றும், அதை எதிர்ப்பவர்களை கண்டித்தும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது. படியுங்கள். எதிர்வினை ஆற்றுங்கள்.

                                            # # #

ரேந்திர மோடி வென்று வந்தபின்னர் நான் எப்போதும் மெல்லிய ஐயத்துடனேயே அவரை அணுகிவந்தேன். அவரை எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை. அவருடைய அரசியல் எழுச்சியின்போதே அந்த ஐயம் நீடித்தது. அவர் பதவிக்கு வந்தால் அவருக்கு எதிரான மனநிலையை தக்கவைக்க வேண்டும் என்று அப்போதே முடிவுசெய்து அதை அன்றே இந்தத்தளத்தில் எழுதவும் செய்திருந்தேன்.

ஏனென்றால், அமைப்பு என்பதன் எடை என்ன என்று எனக்குத் தெரியும். எளிதில் அதை மாற்ற முடியாது. காரணம், அது மெல்ல மெல்ல காலப்போக்கில் உருவாகிவந்த ஒன்று. பொருளியல், கருத்தியல், சமூக அமைப்புக்கள் அனைத்தும் அப்படித்தான். ஆகவே அமைப்பை மாற்றுவது சார்ந்த அவருடைய ஆவேசக் கூச்சல்களை ஓர் எளிய  அரசியல் உத்தி என்பதற்கு அப்பால் நோக்கத் தோன்றவில்லை

அதேபோல எனக்கு எப்போதுமே வலதுசாரி, மதவாத அடிப்படைவாதிகளைப் பற்றிய ஐயம் உண்டு. அவர்கள் இந்தியாவில் பல்லாயிரமாண்டு காலமாக இருந்துவரும் நிலைச்சக்தியின் இன்றைய வடிவம். ஒரு தொன்மையான பண்பாடு, சமூகம் அப்படித்தான் இருக்க முடியும். அது மாற்றங்களை மறுக்கும் மனநிலை கொண்டிருப்பது இயல்பே

அந்தத்தரப்பினரின் மூர்க்கமான சமத்துவ மறுப்பு, நவீனத்துவ எதிர்ப்பு மேல் எப்போதும் எனக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு. இந்தத் தளத்தில் பத்தாண்டுகளாக அவர்களை எதிர்த்து நான் எழுதிய நூற்றுக்கும் மேலான கட்டுரைகள் உள்ளன. அவர்கள் மோடியின் பின்னால் அணிதிரளக் கூடும் என்ற ஐயம் இருந்தது. ஆகவே பொதுவாக ஒரு விலக்கத்துடன் மட்டுமே மோடியின் அரசியல் எழுச்சியை பார்த்தேன். அதற்கு எதிரான அனைத்து சக்திகளுக்கும் என் அனுதாபமும் இருந்தது

அத்துடன் மோடி எதிர்ப்பாளர்கள் மேல் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்கள் இந்தியாவில் முற்போக்கான மாற்றங்களை உருவாக்கிய ஐரோப்பியமயமாதல் மற்றும் இடதுசாரி கருத்தியல்களின் நீட்சி என்றும் அவர்களுக்கு இந்தியக் கட்டுமானத்தில் முக்கியமான பங்குண்டு என்றும் நம்பினேன். இன்றும் அந்நம்பிக்கை நீடிக்கிறது. அந்த உணர்வுடன் எவர் எழுந்துவந்தாலும் என் ஆதரவு உண்டு.

என் நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டது அவர்கள் முன்னெடுத்த ‘சகிப்பின்மை பிரச்சாரத்தின்’ போது. எவருக்காவது நினைவிருக்கிறதா? அந்தப்பிரச்சாரம் ஊடகங்களில் மூன்று மாதம் நீடித்தது. அரசை எதிர்க்காத அத்தனை கலைஞர்களும் எழுத்தாளர்களும் வசைபாடப்பட்டனர். ஆனால் அந்தப்பிரச்சாரத்தை முன்னெடுத்த அறிவுஜீவிகள் அரசிடமிருந்து பெற்று, பெரும்பாலும் சட்டவிரோதமாக அனுபவிக்கும் சலுகைகளைப் பற்றிய பேச்சு எழுந்ததுமே அப்படியே அந்தப்பிரச்சாரம் நமுத்து மறைந்தது

இது இன்னொரு தருணம். நான் இன்னமும் நம்பும் முற்போக்குச் சக்திகள் மேல் கொண்ட பெரும் ஏமாற்றத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இன்னமும் பெரிய ஏமாற்றம். வரலாற்றின் இத்தருணத்தில் இப்படி நடந்துகொண்ட குறுகிய புத்திக்காக அவர்களில் சிலராவது நாளை வருந்துவார்கள். இன்று என்னை முத்திரை குத்துவார்கள். செய்யட்டும்

இதோ கள்ளப்பணத்தின் ஆற்றலை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். அது ஊடகங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு எடுக்க முடியும் என்றும், அரசியல் கட்சிகள் அதன் சேவகர்கள் மட்டுமே என்றும் உணர்கிறோம். அனைத்தையும் விட மேலாக அறிவுஜீவிகளை சல்லிவிலைக்கு அது வாங்கி அடியாட்களாக வைக்கும் என்றும் சமகாலம் நமக்குக் காட்டுகிறது.

இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள் அதன்பொருட்டு கண்ணீர் மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார மோசடிகளில் ஈடுபடும் ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம்

அதிகம்போனால் ஆறு மாதம், இந்தப்பிரச்சாரம் இன்றைய அனலை இழந்து வரலாறாக ஆகும். அப்போது இவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாகக் குரலெழுப்பினார்கள் என்பதை நாம் நினைவுகூர்ந்து நாணுவோம். நான் இந்தக்கட்டுரையை அன்று மறுபிரசுரம் செய்வேன், இது என்றென்றும் நம் முன் ஒரு கறையாக நின்றுகொண்டிருக்கும்

கருணாநிதி கள்ளப்பணத்தைக் காக்க போராட்டம் அறிவிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அகிலேஷ் யாதவ் அதைப் பாராட்டுவதை புரிந்துகொள்ள முடிகிறது.  சீதாராம் எச்சூரியும் பிரகாஷ் காரத்தும் கொந்தளிப்பதைப் புரிந்துகொள்ள நாம் இதுவரை அறிந்த வரலாற்றுணர்வு நமக்குப் போதாமலாகிவிட்டிருக்கிறது.

 ஏன் இந்த நடவடிக்கை?

மிக எளிமையான இந்தியக் குடிமகனுக்கும் புரியகூடிய ஒன்று இத்தகைய ஒரு கடுமையான நடவடிக்கையை எடுக்க அரசு உத்தேசிக்கிறது என்றால் அதற்குரிய பெரும்பொருளியல் நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது என்பதே. சென்ற பல ஆண்டுகளாகவே கருப்புப்பணப் பொருளியல்தான் மைய ஓட்டப் பொருளியலை விட பெரிதாக வளர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. உலகில் மிக அதிகமாக கறுப்புப்பணம் கொண்ட ஐந்தாவது பொருளியல் இந்தியாவுடையது.

அதற்குக் காரணம் நம் வரிவிதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள். நம் பொருளியலில் வங்கிவழிப் பணப்பரிமாற்றம் மிகமிகக் குறைவு. பெரும்பாலும் காகிதப்பணப் பரிமாற்றம். அதில் ஊழல் நடந்தால் அதிகாரிகள் நேரடியாக அதைப் பிடிக்கவேண்டும், தண்டிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளும் ஊழல் செய்தால் ஒன்றுமே செய்யமுடியாது. நம் சமூக அமைப்பே ஊழலுக்கு ஆதரவான மனநிலைகொண்டது. ஆக, கள்ளப்பணம் அரசின் பிழையால் உருவாகி நீடிப்பது அல்ல. நம் பொருளியல் ஒழுக்கமின்மையின் விளைவு அது

இதை அறியாத அப்பாவிகள் எவரேனும் இந்தியாவில் செய்தித்தாள் படிக்கும் நிலையில் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். எங்கும் ரசீதே இல்லாத வணிகம் நிகழ்வதை நாம் அறிவோம். நாம் பெறும் ரசீதுகளேகூட பொய்யானவை . ஒவ்வொருநாளும் நாம் ஈடுபடும் வாங்கல் விற்கல் அனைத்தும் கள்ளப்பணத்திலேயே. ஆனால் கள்ளப்பணம் ‘அங்கே’ எங்கோ இருக்கிறது என நம்ப ஆசைப்படுவோம். நாமும் நம்மைச் சூழ்ந்தவர்களும் பச்சைக்குழந்தைகள் என வாதிடுவோம்.

இந்தக்கள்ளப்பணப் பொருளியல் நெடுங்காலம் வளர முடியாது. ஏனென்றால் ஆக்கபூர்வமான பொருளியலில் லாபம் என்பது மீண்டும் முதலீடாக ஆகவேண்டும். கள்ளப்பணத்தில் அப்படி ஆவது கடினம். அந்த லாபம் வட்டிக்கு சுற்றிவரும். நிலத்தில் அல்லது பொன்னில் போட்டு வைக்கப்படும். அவை தேங்கும் செல்வம் மட்டுமே. முதலீடு அல்ல.

சென்ற பத்தாண்டுகளாக கள்ளப்பண முதலீட்டிலிருந்து வந்த லாபமே மறைமுக வட்டித் தொழிலாக, ‘ரியல் எஸ்டேட்’ முதலீடாக வீக்கம் கண்டது. இங்கே நகர்ப்புற நிலமும் சொத்தும் சற்றும் பொருத்தமற்ற வளர்ச்சியை அடைந்தமைக்குக் காரணம் கள்ளப்பணம் தான்

ஆனால் வட்டி, நிலம் இரண்டு தளங்களிலும் சென்ற ஐந்தாண்டுகளில் பெரும் நெருக்கடி வந்தது. இன்று மேலே சொன்ன இரு தொழில்களையும் வன்முறை இன்றி, அரசியல் இன்றி செய்ய முடியாது என்பதே உண்மை நிலை. மிகப்பெரிய நிழல் உலகம் ஒன்று அதைச் சார்ந்து உருவாகி வந்துள்ளது. ஆகவே அது அனைவருக்கும் உரியதாக இன்று இல்லை.

பொன், சென்ற பத்தாண்டுகளில் நாணயமாகச் சேமிக்க உகந்தது அல்ல என்றாகிவிட்டிருக்கிறது. தங்கம் கொண்டு போகவும் வரவும் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அதை விற்குமிடத்தில் உள்ள சட்டக் கெடுபிடிகள்  காரணமாக அதை புழங்கும் பணமாக கருத முடியாது.

இந்நிலையில் பெரும்பாலான கள்ளப்பணம் நோட்டுகளாகவே பதுக்கப்படலாயிற்று. அது ஆபத்தற்றது, வெளியே தெரியாதது. எப்போது வேண்டுமென்றாலும் வெளியே எடுத்து புழக்கத்திற்கு விடப்பட வேண்டியது.

நோட்டுக்களில் மிகப் பெரும்பகுதி இப்படித் தேங்கும் சூழல் என்பது பொருளியலுக்கு மிகப் பெரிய அடி. முதலீட்டுத் தேக்கம் உருவாகி தொழில் வளர்ச்சி மூச்சுத் திணறுகிறது. சென்ற இரண்டாண்டுகளாக மிக முக்கியமான தொழிலதிபர்கள் பலர் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்னிடம். நான்கு வெவ்வேறு பொருளியல் நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன்.

இரண்டாவது, அனைவரும் அறிந்தது. கள்ளநோட்டு. ஐ.கே.குஜ்ரால் காலகட்டத்தில் நோட்டுக்கு காகிதம் வாங்குவதில் செய்யப்பட்ட ஒரு பெரும்பிழை பத்தாண்டுக்காலம் நீடித்தது. பாகிஸ்தான், சீனா போன்ற அரசுகளே கள்ளநோட்டுக்களை இந்தியப் பொருளியலில் இறக்கியபோது நம் அமைப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை

மூன்றாவதாக, ஹவாலா. இந்தியாவின் மிகப்பெரும் செல்வம் மானுட உழைப்பு. முதன்மையாக நாம் ஏற்றுமதி செய்வதே கைகளையும் மூளையையும் தான். அந்தப்பணம் எங்கும் பதிவாகாமல் வரிகட்டப்படாமல் இங்கே வரும்போது நம் பொருளியல் பெரும் இழப்பை சந்திக்கிறது.

இம்மூன்றையும் கட்டுப்படுத்தாமல் ஓர் அடிகூட முன்னால் வைக்கமுடியாது என்னும் நிலை வந்து ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் மன்மோகன்சிங்கின் பலவீனமான அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கமுடியவில்லை. நானறிந்து, மூன்றுமுறை நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்தது. அவை கிடப்பில் போடப்பட்டன, அரசியல் கட்டாயம்.

இந்நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்ட ஒன்று என்பதை எவரும் உணரமுடியும். ஜன்தன் போன்ற திட்டங்கள் வழியாக  இந்தியாவில் ஏறத்தாழ அனைவருக்குமே கட்டாயமாக வங்கிக்கணக்கும், ஏடிஎம் அட்டையும் வழங்கப்படத் தொடங்கி ஓராண்டாகிறது. அப்போது ‘சோறில்லாதவர்களுக்கு வங்கிக்கணக்கா?’ என நம் அறிவுஜீவுகள் கிண்டலடித்தனர். அவர்களே இன்று ‘ஏழைக்கு வங்கிக்கணக்கு ஏது?’ என பாட்டுபாடுகிறார்கள்.

அதேபோல வரும் ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. இந்தியாவின் தொழில் –வணிகத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும், வரிகட்டும் வழக்கமே இல்லாதவர்கள் நம் வணிகர்கள் மற்றும் சிறுதொழிலதிபர்கள். வரி ஏய்ப்புக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவர்களைத் தூண்டி பங்குபெற்றுவருகிறார்கள். ஜிஎஸ்டி அவர்களுக்கு மிகப்பெரிய கட்டாயத்தை அளிக்கிறது. வரிகுறித்த அனைத்துக் கணக்குகளும் ஓரிடத்தில் குவிகின்றன. ஆகவே நூறுடன் இரும்பு வாங்கி ஆயிரம் கிரைண்டர் செய்ததாக கணக்கு காட்டி விற்பனைவரியை ஏமாற்றமுடியாது

உண்மையில் இன்று தொழிலதிபர்களே ஜிஎஸ்டியை ஆதரிக்கிறார்கள். அவர்கள் வளர்த்துவிட்ட பூதம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். ஆனால் இன்று அவர்கள் வரிகட்டுவதைவிட பலமடங்கு பணத்தை இவர்களுக்குக் கப்பமாகக் கட்டநேர்கிறது. ஜிஎஸ்டி வந்து அரசுவரிவிதிப்பு முறை இயல்பாகவே நடக்குமென்றால் அவர்களுக்கு உண்மையில் லாபம்தான். இழப்பு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான்

இந்த நாணய ஒழிப்பு ஜிஎஸ்டிக்கு முன்னோடியாக வங்கிப்பொருளியலை நோக்கி வணிகத்தைக் கொண்டுசெல்வதற்காகவே முதன்மையாக உத்தேசிக்கப்பட்டது என்பது பொருளியலறிந்த எவருக்கும் தெரியும்.ஆனால் ஒரு நாளிதழிலாவது ஒரு கட்டுரையாவது அதைக்குறிப்பிடுகிறதா என்று பார்த்தேன். ஏமாற்றம்தான். இங்கே கள்ளப்பணத்திற்கு ஆதரவாகவே அனைத்துக்குரல்களும் எழுந்துள்ளன இன்று.

இந்த நடவடிக்கை என்னென்ன செய்யக்கூடும்?

  1. வங்கிசார்ந்த பொருளியலை நோக்கி நம் வணிக உலகை உந்தும். முழுமையாக அது நிகழமுடியாது. ஏனென்றால் இவ்வமைப்பு மிகமிகப்பெரியது. 20 சதவீதம் நிகழ்ந்தாலே அது மிகப்பெரிய லாபம்
  2. நோட்டுக்களாகவே தேங்கிய பணம் எவ்வகையிலேனும் புழக்கத்திற்கு வரக்கூடும். அது பொருளியலுக்கு நல்லது
  3. கள்ளநோட்டுக்களில் கணிசமான பகுதி இல்லாமலாகும். மீண்டும் அவை வர சில ஆண்டுகளாகும். அதுவரை பொருளாதாரம் தாக்குப்பிடிக்கமுடியும்
  4. வரிகொடுக்கப்படாத கள்ளப்பணத்தில் 20 சதவீதமாவது வரிகொடுக்கப்பட்ட பணமாக ஆகலாம். அதுவே இன்றைய சூழலில் மிகப்பெரிய வெற்றி.

ஆகவே மிகமிக முற்போக்கான, மிக இன்றியமையாத ஒரு நடவடிக்கை இது. இடதுசாரி அரசுகளே இத்தகைய நடவடிக்கைகளைச் செய்யத் துணியும். அதை ஓர் வலதுசாரி அரசு செய்திருப்பது ஆச்சரியம். அதை இடதுசாரிகள் தெருவுக்கு வந்து எதிர்ப்பது பேராச்சரியம்.

 வரி கட்டுவோருக்கு ஆதரவான நடவடிக்கை

ஏன் கள்ளப்பணம் ஒழியவேண்டும்? இப்போது சிலர் ‘அது நல்லதுதான் சார், இருந்துட்டுப்போகட்டும்’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றுவரை நம் வரிவிதிப்புமுறை எப்படிப்பட்டது? யார் வரிகட்டுகிறார்களோ அவர்களுக்கே மேலும் வரி என்பதுதானே? மாதச்சம்பளக்காரர்கள், நுகர்வோர் இரு சாராரும் கட்டும் வரியில்தான் நாடே ஓடிக்கொண்டிருக்கிறது. நம் அரசுகள் அவர்கள் மேலேயே மேலும் வரிகளைச் சுமத்திக்கொண்டிருந்தன. அதன் உச்ச எல்லையையும் அடைந்துவிட்டிருக்கிறோம்.

நீங்கள் மாதச்சம்பளக்காரர் என்றால் உங்கள் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள ஓட்டலுக்குச் சென்று அவர் என்ன வரி செலுத்துகிறார் என்று கேட்டுப்பாருங்கள். நீங்கள் ஒருமாதம் வாங்கும் சம்பளம் அவரது ஒரு நாள் வருமானம். அது நிலமாக, நகையாக, ரொக்கப்பதுக்கலாக ஆகிக்கொண்டே இருக்கும். வரி கட்டும் வழக்கமே அவருக்கிருக்காது.

இந்தியாவின் குறுவியாபாரிகள், தொழில் தரகர்கள், சேவைப்பணியாளர்கள், வட்டித்தொழில் செய்ப்பவர்கள் உண்மையில் வரி கட்டும் வழக்கமே இல்லாதவர்கள். யார் சொத்துக்களை வாங்குகிறார்கள் என்று பாருங்கள், பெரும்பாலும் இவர்கள்தான். இவர்களின் வருமானம், சேமிப்பு  இரண்டுமே முழுக்க முழுக்க நோட்டுகளிலேயே நடப்பதனால் அதை கண்காணிப்பதும் பிடிப்பதும் அனேகமாகச் சாத்தியம் இல்லை. . வருமானவரியாவது ஒன்றாவது.

இந்தியாவில் விற்பனைவரி நுகர்வோரிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதை அரசுக்குக் கட்டும் வணிகர்களும் உற்பத்தியாளர்களும் ஐந்து சதவீதம்பேர்கூட இல்லை. அனைத்து ஆவணங்களும் பொய். அனைத்து ரசீதுகளும் பொய். காவலனே கள்வனாகும்போது அரசு ஒன்றுமே செய்யமுடியாது

அவர்கள்தான் இங்கே இந்நடவடிக்கையால் முதன்மையாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள்தான் கூச்சலிட்டு பிரச்சினை செய்கிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். கலவரம் வரவேண்டுமென அறைகூவுகிறார்கள். அதை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார்கள். வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் அவர்களுக்காகவே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் பேசுகிறார்கள்.

ஆனால் ‘எளிய மக்கள்’ ஒருநாளுக்கு 2000 ரூபாய்தானே எடுக்க முடியும் என கண்ணீர்விடுகிறார்கள். சமகால அறிவுலகின் ஆகப்பெரிய கேவலம் என இந்த நீலிக்கண்ணீரைத்தான் நான் காண்கிறேன்.

நடந்துகொண்டிருப்பது என்ன?

என்ன நடந்துகொண்டிருக்கிறது என நீங்கள் இன்று கண்கூடாகவே காணலாம், எத்தனை கோடிரூபாய் நேரடியாகக் கணக்குக்குள் வந்துகொண்டிருக்கிறது என்று எண்ணவே ஆச்சரியமாக இருக்கிறது. கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் பணத்தை தங்கள் ஊழியர்கள், உறவினர்கள் கணக்கில் வரவு வைக்கிறார்கள். 8 சதவீதம் டிடிஎஸ் ஆக வருமானவரிக்குச் செல்லும். 10 சதவீதம் அவர்களுக்கு ஊதியம். மிச்சப்பணத்தை கேட்கும்போது திருப்பித் தர வேண்டும். எங்கும் இதுதான்பேச்சு.

அரசு இந்த மோசடிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தாலும் பேரார்வத்துடன் மக்கள் அதற்கு முண்டியடிக்கிறார்கள். வங்கியில் போட்ட பணத்தில் இருந்து செல்லும் நோட்டாக எடுத்துக் கொடுத்தால் 30 சதவீதம் கமிஷன்  என்கிறார்கள் நாகர்கோயிலில். நாற்பது என்கிறார்கள் கோவையில். எத்தனை பெரிய பொருளியல் அசைவு இது. ஆனால் ஊடகங்கள் ஏடிஎம் வரிசையை மட்டுமே முன்வைக்கின்றன.

கண்கூடாகவே கோடிக்கணக்கில் ரூபாய் வெளியே வந்துகொண்டிருக்கிறது. ஆம், இதுவும் ஒரு மோசடி. ஆனால் எப்படியோ வரி என ஒன்று கட்டப்படுகிறது. வங்கிவணிகம் கட்டாயமாக ஆவதனாலேயே அரசுக்கு வரும் வரி இன்னொரு பாதை. நண்பர்களே, இதெல்லாம் நாளை சட்டப்படி வரிகட்டிவரும்  நம் மீது வரியாக ஏற்றப்படவிருந்த தொகை.

வரிகட்டுபவன் வரிகட்டாமல் தன் சுமையை அதிகரிக்க வைப்பவனைப் பார்த்து பரிதாபப்பட வேண்டும் என நம் ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன.  ‘அய்யோ பாவம், ஏடிஎம் வாசலில் நிற்கும் நிலை உனக்கு வந்துவிட்டதே’ என இவர்கள் நம்மிடம் சொல்கிறார்கள். இவர்களுக்கிருக்கும் கருணைதான் என்ன!

இன்று இந்தத் திட்டத்தை வசைபாடுபவர்கள் மூன்று சாரார். கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் வசைபாடுவது இயல்பு. இன்னொருசாரார் வெறும் மோடி எதிர்ப்பாளர்கள். அது ஒரு மனநோயாகவே ஆகிவிட்டிருக்கிறது இன்று. மூன்றாமவர் வரிசையில் இரண்டு நாள் நிற்க நேர்ந்தமையாலேயே சலித்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கக்காரர். ஊடகம் உருவாக்கும் மாயையை நம்பும் அப்பாவிகள்

இந்தக் கடைசிநபரிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி ஒன்றே. ஐம்பதாண்டுகளாக வரிகட்டாமல் இயங்கிவரும் இந்தப்பெருச்சாளி உலகைக் கலைத்து அவர்களில் ஒருசாராரையாவது வரிகட்டக் கட்டாயப்படுத்தும் அரசு செய்வது தவறா? வரிக்குச் சிக்குபவர் என்பதனாலேயே மேலும் மேலும் உங்கள்மேல் வரிபோடவா நீங்கள் சொல்கிறீர்கள்?

இதைச்சொன்னதும்  உடனே எழும் பொதுக்கேள்விகள் சில உண்டு

  1. மோடி வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவருவதாகத் தானே சொன்னார்? அது என்னாயிற்று? இதை ஏன் சொல்லவே இல்லை?

கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவரும் தன் நோக்கத்தை சொல்லி அவர் பதவிக்கு வந்தார். அதைச் செய்கிறார். இங்கிருக்கும் மாபெரும் கருப்புப் பொருளியலை ஒழிப்பேன் என்று சொல்லியிருந்தால் அவர் பதவிக்கே வந்திருக்க முடியாது. இன்று பதவிக்கு வந்தபின்னரேகூட  கருப்புப்பணத்தால் அனைத்து ஊடகங்களையும் விலைக்கு வாங்கி இவ்வளவு பெரிய பொய்யான சித்திரத்தை உருக்க முடிகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவரை அரசியலில் இருந்தே ஒழிக்குமளவுக்கு வெறுப்பு பொங்கிவழிகிறது இங்கே.

வெளிநாட்டுக் கருப்புப்பணம் என்பது உள்ளூர் கருப்புப்பணத்தின் மிகச்சிறுபகுதி என எவருக்கும் தெரியும். மேலும் அது ஹவாலா மூலம் திரும்பி வந்து இங்குள்ள கருப்பு பொருளியலில்தான் கலந்துகொண்டுள்ளது. அது பதுக்கல், இது சமாந்தரப் பொருளியல் . அது குற்றம், இது அழிவு நடவடிக்கை. அவசியமாகச் சீர் செய்தாகவேண்டியது இதுதான்

வெளிநாட்டுக் கள்ளப்பணத்தைப்பற்றி மட்டும் பேச ஏன் விழைகிறோம்? அது ‘அங்கே’ எங்கோ இருக்கிறது. நம்மைச் சுற்றி உள்ள கருப்புப்பணம் பெரிய பிரச்சினை அல்ல என்று நாம் நம்மை சமாதானம் செய்துகொள்ள உதவுகிறது

வெளிநாட்டுக் கருப்புப்பணத்தை மீட்பதென்பது நூற்றுக்கணக்கான சர்வதேசச் சட்டங்களுக்குள் செல்லும் சிக்கலான நடவடிக்கை. அதைச் செய்த பின்னர்தான் இங்கே கையை வைக்க வேண்டும், அதுவரை இதை விட்டுவைக்க வேண்டும் என கூவுகிறீர்கள் என்றால் நீங்கள் யார்? உங்கள் நோக்கம் என்ன?

 2 . போதிய முன்னேற்பாடுகள் எடுக்காமல் அமலாக்கம் செய்யப்பட்ட இந்நடவடிக்கைகளால் பொதுமக்களுக்குப் பாதிப்பு வருகிறதே. இது அரசின் தோல்வி அல்லவா?

போதிய முன்னேற்பாடுகள் என்றால் என்ன? அனைத்து வங்கிகளிலும் நோட்டுக்கட்டுகளை முன்னரே கொண்டுவந்து குவிப்பதா? ஏடிஎம் இயந்திரங்களின் ஐநூறு, ஆயிரம் ரூபாய்களுக்கான தட்டுகளை அகற்றிவிட்டு மாற்றி அமைப்பதா? அவற்றைச் செய்தபின் இந்நடவடிக்கையைச் செய்தால் என்ன பயன்? இதைப் பேசுபவர்களுக்கு மண்டைக்குள் உண்மையில் என்னதான் இருக்கிறது? கொழுப்பா, களிமண்ணா?

முன்னேற்பாடுகள் ஓராண்டுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளன என்பதை அரசு சென்ற ஓராண்டுக்காலத்தில் ஏழை மக்களுக்கு அமைத்துக் கொடுத்த கட்டாய இலவச வங்கிக்கணக்குகளே காட்டும்

இந்தியா போன்ற மிகச்சிக்கலான, மிகமிகப் பிரம்மாண்டமான ஒரு பொருளியலில் மிக அதிரடியான ஒரு நடவடிக்கையை அறிவித்தது அரசு. இந்தியா மாபெரும் நிலப்பரப்பும் மக்கள்தொகையும் கொண்டநாடு. எங்கும் எதிலும் இங்கே வரிசை இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. ஒருநாளில் இரண்டு வரிசையிலாவது நிற்பவர்கள் நாம்.  இங்குள்ள நிர்வாக அமைப்பு மிகப் பழைமையானது. இருந்தும் என்ன நடந்துவிட்டது?

அதிகபட்சம் ஒருவாரம் ஒரு பதற்றமும் குழ்ப்பமும் நிலவியது. இன்று ஊடகங்களை மறந்துவிட்டு உங்கள் சூழலைப் பார்த்தால் எந்தப்பதற்றமும் இருப்பதைப் பார்க்கமாட்டீர்கள். நடவடிக்கை ஆரம்பித்தநாள் நான் மும்பையில் இருந்தேன். மறுநாளே 2000 ரூபாய் ஏடிஎம்மில் எடுத்தேன். 45 நிமிடமாயிற்று. இன்று மீண்டும் 2500 எடுத்தேன். இன்று எட்டுபேர் இருந்தனர் வரிசையில். ஐந்து நிமிடம் ஆகியது. என் செலவு அவ்வளவுதான்.

திருவனந்தபுரம், சென்னை என தொடர்ந்து ஏடிஎம்களை பார்க்கிறேன். எங்கும் அதிகபட்சம் ஒருமணிநேரத்திற்குள் பணம் எடுக்க முடிந்தது சென்றவாரம். இன்று சற்றுமுன் சென்னை சூளைமேட்டில் என் மகன் பணம் எடுத்தான். எவ்வளவு நேரமாகியது என்றேன். நான்குபேர் இருந்தோம் என்றான்.

ஆம், இது ஒரு நிலைகுலைவை உருவாக்கவே செய்யும். அதை எண்ணித்தான் இதை ஆரம்பித்திருப்பார்கள். உங்கள் நகரில் ஒரு சந்தையை இடமாற்றம் செய்தாலே சிலநாட்கள் குழப்பம் நிலவுகிறது. சில அழிவுகள் உருவாகின்றன. இந்த மாபெரும் பொருளியல் நடவடிக்கை எளிதாக முடிந்துவிடாது.

அதற்கு எதிர்ச்சக்திகள் மிகப் பெரியவை. அவர்கள் சமாந்தர அரசு போல. அவர்களில் தானைத்தலைவர்கள் முதல் சாதித்தலைவர்கள் வரை உண்டு. ஆகவே எளிதில் முடிவது அல்ல இது. அப்படிப் பார்த்தால் உருவாகியிருக்கும் நெருக்கடி மிகமிகச்சிறியது. இத்தனை எளிதாக இது முடியுமென்றுதான் அரசினரே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்படியென்றால் வதந்திகளை எவர் உருவாக்குகிறார்கள்? ஏன் அவற்றை இவ்வளவு வெறியுடன் பரப்புகிறார்க்கள்? ஊடகங்களின் உண்மையான நோக்கம் என்ன? ஸ்க்ரோல் என்னும் இணைய மஞ்சள்பத்திரிகையில் ஒரு கட்டுரை. மக்கள் கூட்டம்கூட்டமாக ஏடிஎம் முன்னால் சாகிறார்கள், மாபெரும் கலவரம் வெடிக்கப்போகிறது என்று. என்னதான் உத்தேசிக்கிறார்கள்?

ஒரு பொருளியல் நடவடிக்கையை அரசு எடுக்கிறது. அது தவறானது என்று சொல்பவர்கள் எவருமில்லை – வெளிப்படையாகக் கள்ளப்பணத்தை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஆதரிக்க ஆரம்பித்தது கொஞ்சம் பிந்தித்தான். ஆனால் மொத்த ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக இணைந்து முழுப்பலத்தையும் பயன்படுத்தி அந்நடவடிக்கையை தோற்கடிக்க முயல்வது ஏன்?

இணையமும் சமூகவலைத்தளங்களும் ஊடகங்களும் வதந்திகள் மூலம் பீதிகளைப் பரப்பியமையால்தான் இங்கே நடந்த சிறிய குளறுபடிகள்கூட நிகழ்ந்தன. இல்லையேல் மிகச் சுமுகமாக முடிந்திருக்கும் அனைத்தும்.

 3 ஊடகங்கள் மக்களின் கஷ்டங்களைச் சொல்லக்கூடாதா? மக்கள் அவதிப்பட்டது பொய்யா?

இதுவரை வந்த ‘அழிவுகள்’ என்ன? வரிசையில் சிலர் மயங்கி விழுந்தார்களாம். நாற்பதுபேர் செத்துப்போனார்கள் என்று கணக்கு. அவர்களின் உடல்நிலை என்ன, அவர்கள் எங்கே, ஏன் இறந்தார்கள் எதுவும் தெரியாது. இந்தக்காலகட்டத்தில் இந்தியாவில் தெருவில் எவர் இறந்தாலும் அது மோடி செய்த கொலை. தேசம் முழுக்க கிட்டத்தட்ட ஒருகோடிபேராவது ஏடிஎம்மில் நின்றிருப்பார்கள். அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு வந்தால்கூட அது அரசுப்படுகொலை!

உத்தரப்பிரதேசத்தில் ஓர் ரேஷன்கடை ஊழியர் நான்குமாதமாக கடை திறக்கவில்லை. மக்கள் கடையைச் சூறையாடினர். அது ஏடிஎம்மில் பணமில்லாததனால் நடந்தது என நூறு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இருபது டிவிக்கள் எரியும்செய்தியாக அதை வெளியிட்டன. உண்மைச்செய்தி வெளியானபின்னரும் அவை அபப்டியே தொடர்ந்தன.

ஓர் ஆஸ்பத்திரியில் பழையநோட்டை எடுக்க முடியாமல் குழந்தை இறந்ததாம். மோடி கொலைகாரா என கண்ணீர்க்குரல். முதலில் அந்த ஆஸ்பத்திரிமேல் அல்லவா நடவடிக்கை எடுக்க வேண்டும்? அங்கே அக்குழந்தைக்கு உதவாதவர்கள் அல்லவா பழிசுமக்கவேண்டும்?

இதையெல்லாம் பேசுபவர்கள் யார்? அறிவிக்கப்படாத வேலைநிறுத்தங்களை தொடங்கி நாட்டை பலமுறை ஸ்தம்பிக்க வைத்தவர்கள். ஒரு மாநாடு என்றாலே நகரங்களை உறைய வைப்பவர்கள். இவர்களின் ஒரு மாநில மாநாட்டில்கூட இதைவிட அதிகமாக மக்களுக்கு இன்னல் நிகழ்ந்திருக்கும்

ஆம், மக்கள் ஓரளவு அவதிப்பட்டனர். இத்தகைய நடவடிக்கை முதலில் ஒரு அச்சத்தை உருவாக்கும். அதன் விளைவாக ஏடிஎம்களில், வங்கிகளில் குவிந்தனர். அது இந்தியா போன்ற மக்கள்தொகைமிக்க நாட்டில் தவிர்க்கவே முடியாதது. ஒரு சேலை வினியோகம் நடந்தால் மிதிபட்டு மக்கள் சாகும் நாடு இது.

அத்துடன் மக்களை தங்கள் கருவிகளாகப் பயன்படுத்தி கருப்புப்பணத்தை நோட்டுகளாக ஆக்க களமிறங்கினர் வணிகர்கள். அதன் விளைவே நெரிசல் நீடித்தது. மக்களின் அவதியை பற்றிப் பேசிய எந்த ஊடகமும் இந்த உண்மையைச் சொல்லவில்லை.

மக்கள்மேல் அக்கறை இருந்தால் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். எங்குமே பணமில்லை என்னும் பீதியைக் கிளப்பியிருக்கக் கூடாது. மேலும் பல வாரங்களுக்குப் பணமில்லாமலாகும் என்னும் ஊகத்தைக்கூட பொய்யாகப் பரப்பின நம் செய்தியூடகங்கள்.

ஒரு வயதான பாட்டி இரு ஐநூறு ரூபாய்களை வைத்துக்கொண்டு அவை செல்லாமலாகிவிட்டன என அழுகிறாள். அதை படம் பிடித்து ‘ஏழைகள் மேல் மோடியின் போர்’ என ஒரு இணையப் பிரச்சாரம் நடந்தது. ஒரு தபால் நிலையத்திற்குச் சென்று ஒருமணி நேரத்தில் அதை நூறு ரூபாயாக ஆக்கியிருக்கலாம், ஒருவாரம் பொறுத்தால் பத்துநிமிடம்தான் ஆகும் அதற்கு என அந்தப்பாட்டிக்குச் சொல்லவில்லை எவரும். மாறாக அதை கிட்டத்தட்ட முப்பது லட்சம் பேர் பகிர்ந்துகொண்டனர்.

இத்தனையையும் மீறி வெறும் ஒருவாரத்தில் எங்கும் நிலைமை சீரடைகிறது. ஆனால் ஊடகங்களுக்கு போதவில்லை. நிலைமை கட்டுமீறுகிறது என ஓலமிடுகின்றன. சமஸ்  தி ஹிந்து நாளிதழில் ‘மாபெரும் பொருளியல் அழிவை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது’ என்கிறார். அதாவது கறுப்புப்பணம்தான் பொருளியலாம்

ஆறுமாதம் கழித்து இக்கட்டுரையைப்பற்றி அவரிடம் ஒரு விளக்கம் கோர இங்கு எவருமிருக்கப் போவதில்லை. அக்கட்டுரையின் நோக்கமே ஆறுவாரமாவது  அது பொருள்படவேண்டும் என்பது அல்ல. இன்றைய சூட்டில் முடிந்தவரை பீதியைக் கிளப்பவேண்டும் என்பதே. அது அந்நாளிதழின் அரசியல், அவ்வளவுதான்.

 4 இதனால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடுமா?

முற்றிலும் ஒழியாமல் போகவும் கூடும். அதனால் நடவடிக்கையே தேவையில்லை என்று வாதிடுகிறீர்களா? கருப்புப் பொருளியலை நிலைநிறுத்துபவர்கள் இந்திய மக்களில் ஒரு பெரிய அளவினர். அவர்களுக்கு எதிரானது இந்த நடவடிக்கை.

அவர்களுக்கும் ஆற்றல் உண்டு. அவர்களுக்காகப் பேச எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை ஊடகங்கள், எவ்வளவு அறிவுஜீவிகள் என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் இதைக் கடந்துசெல்லும் வழிகளைக் கண்டடையலாம். நம் மக்கள் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பார்கள், கொஞ்சம் லாபம் வந்தால்.

ஆனால் ஒரு பத்து சதவீத அளவுக்கு கருப்புப்பணம் ஒழிந்தால், தேங்கிய நோட்டுகளில் இருபது சதவீதம் புழக்கத்துக்கு வந்தால், கள்ளநோட்டு முக்கால் பங்காவது ஒழிந்தால் நாம் பொருளாதாரத்தில் ஒரு படி முன்னெடுத்து வைப்போம்

அது நடக்கக்கூடாதென விரும்புபவர்களின் கூச்சல்களே இன்று ஓங்கி ஒலிக்கின்றன.

 5 .பெருமுதலைகளை விட்டுவிட்டு சிறுவணிகர்களைப் பிடிக்கிறதே அரசு, இது பிழை அல்லவா?

இது எப்போதும் நிகழும் ஒரு பெரிய மோசடிவாதம். கோடானுகோடிக் கணக்கில் வரிஏய்ப்பு செய்யும் கோடிக்கணக்கானவர்கள் மேல் ஒரு சிறுநடவடிக்கை வருகிறது. அதற்கும் மேலே சிலரைச் சுட்டிக்காட்டி முதலில் அவர்களைப் பிடி எனச் சொல்லி வாதிட்டு இவர்களை நியாயப்படுத்துகிறார்கள். இந்த வாதத்தின் நோக்கம் கள்ளப்பணத்தை ஆதரிப்பது மட்டுமே, வேறேதுமல்ல

இது முதலாளித்துவப் பொருளியல். இங்கே இடதுசாரிகள், பெருமுதலாளிகள் மற்றும் தனியார் உற்பத்தித்துறைக்கு எதிராகப் பேசுவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் பிற அனைத்திலும் முதலாளித்துவத்தை ஆதரித்து, அதன் வசதிகளில் திளைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு ஒரு கட்டாயம் வரும்போது இடதுசாரிகள் போல பெருமுதலாளிகளை வசைபாடுவது மோசடித்தனம்.

முதலாளித்துவப் பொருளியல் அமைப்பில் உற்பத்தி, சேவைத்துறைகளில் பெருமுதலாளிகளின் முதலீடும் பங்களிப்பும் மிகமிக முக்கியமானவை. அவற்றை காப்பாற்றவே எந்த ஒரு முதலாளித்துவ அரசும் முயலும். ஏனென்றால் அவை பெருமுதலாளிகளால் நிர்வகிக்கப்பட்டாலும் தேசத்தின் கூட்டான செல்வம். அவர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல

வங்கிகள் வீழ்ச்சி அடைந்தபோது அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்காக தனியார் வங்கிகளுக்கு சும்மா அளித்து அவற்றை காப்பாற்றியது. ஏனென்றால் வங்கிகளே அமெரிக்கப் பொருளியலின் அடிப்படை. அவை நலியவிட முடியாது.

அடிப்படை உற்பத்தித் துறைகளில் உள்ள பெருமுதலாளிகளை அரசு ஏதோ ஒருவகையில் காப்பாற்றித்தான் ஆக வேண்டும். இல்லையேல் தேசப்பொருளியல் அழியும். சில பிராண்டுகள் நவீன தேசிய முதலாளித்துவப் பொருளியலின் அடிப்படைகள். ஃபோர்டை அமெரிக்காவோ டொயோட்டாவை ஜப்பானோ அழியவிடாது. டாட்டாவையோ அசோக் லேலண்டையோ மகிந்திராவையோ அழியவிட்டால் இந்தியா அழியும்.

சில துறைகளில் அரசு சில முன்னெடுப்புகளை நடத்தும். இந்தியா நவீனப்பொருளியலுக்குள் வருவதற்கு போக்குவரத்து, செய்தித்தொடர்பு ஆகிய இரண்டு தளங்களிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்னும் நிலை ஏற்பட்டது. அதை இந்திய அரசு திட்டமிட்டு உருவாக்கியது..

1989ல் என் மாதச்சம்பளம் 1700 ரூபாய். திருவனந்தபுரம் முதல் சென்னை வரை விமானப் பயணக் கட்டணம் 14000 ரூபாய். கிட்டத்த எட்டு மடங்கு அதிகம். இன்று என் பதவியில் இருப்பவர் வாங்கும் சம்பளம் 60000. இன்று அதே விமானக்கட்டணம் சாதாரணமாக 4000 ரூபாய். பன்னிரண்டு மடங்கு குறைவு.

1988ல் நாகர்கோயிலில் இருந்து டெல்லிக்கு போன் பேச மூன்று நிமிடத்துக்கு 45 ரூபாய். இன்றைய கணக்கில் 1500 ரூபாய் இருக்க வேண்டும். இன்று 3 ரூபாய். ஐநூறு மடங்கு மலிவு.

இந்த வசதிகளின் விளைவாகவே இந்தியப் பொருளியலில் மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவுகளையே நாம் அனுபவிக்கிறோம். எண்பதுகளில் ஒவ்வொரு இளைஞனும் வாழ்க்கையில் குறைந்தது ஐந்தாண்டுக் காலத்தை வேலையில்லாமல் கழித்திருப்பான். அந்நிலை மாறியது. இன்று அடித்தள மக்களின் வாழ்க்கையில்கூட உணவுப் பஞ்சம் இல்லை. எண்பதுகளில் மூன்றுவேளை உணவென்பதே ஒரு பெரும் சொகுசு.

எண்பதுகளில் தமிழகத்தில்  ஒரு கிராமத்தில் ஒருவீடு மட்டுமே குடிசையல்லாமல் இருக்கும். இன்று தமிழகத்தில் குடிசைகள் அபூர்வமாகிவருகின்றன. ஆம், நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம். ஆனால் நெடுந்தொலைவு வந்துள்ளோம் என்பதே உண்மை

எண்பதுகளில் இந்திய அரசின் ஏர் இந்தியாவும் இண்டியன் ஏர்லைன்ஸும் மட்டும்தான். விமானங்கள் வருமென்பதற்கே உத்தரவாதம் இல்லை. ஆகவே எந்த விமானமும் பாதிப்பங்கு கூட நிறைந்திருக்காது. இந்நிலை மாறவேண்டுமென அரசு எடுத்த முயற்சியின் விளைவே தனியார் விமானத்துறை. ஏனென்றால் விமானத்துறை முன்னேறாமல் நவீனத் தொழில்துறை முன்னேற்றம் இல்லை.

இந்திய அரசு அளித்த சலுகைகள், ஊக்கங்கள், மறைமுகக் கட்டாயங்கள் ஆகியவற்றால் உருவான பல விமான நிறுவனங்களில் ஒன்றுதான் கிங்ஃபிஷர். மதுத்தயாரிப்பாளரான விஜய் மல்லய்யாவின் நிறுவனம் அது. 2003ல் ஆரம்பிக்கப்பட்ட அந்நிறுவனத்திற்கு இந்திய வங்கிகள் பெருமளவு நிதி அளித்தன. கடனாகவும் மறைமுக முதலீட்டாகவும்.

அவ்வாறு நிதியளிப்பது இந்திய அரசின் பொருளியல் வளர்ச்சி சார்ந்த கொள்கை. ஏனென்றால் இந்திய அரசு விமானத்துறை வளரவேண்டுமென்று விரும்பியது. நிதி நிறைய உள்ளே வந்தமையால் சட்டென்று ஒருவளர்ச்சி ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன் விமானக் கட்டணங்கள் முதல்வகுப்பு ரயில்கட்டணங்களைவிடக் குறைவாக ஆயின.

ஆனால் அது ஒரு வீக்கம். விரைவிலேயே பல விமான நிறுவனங்கள் நஷ்டங்களைச் சந்திக்கலாயின. அதற்கான காரணங்களை எளிதில் வரையறுக்க முடியாது. வியாபாரத்தில் எந்த மேதையும் தவறான கணிப்புகளை போட்டுவிடக் கூடும். எல்லா கணிப்புகளும் சரியாக இருந்தும் வியாபாரம் சரியக்கூடும். கிங்ஃபிஷர் வீழ்ச்சியடைந்தமைக்குக் காரணம் பெங்களூரின் வளர்ச்சியை மிகையாக மதிப்பிட்டதுதான், அதை நம்பி அதிகமான விமானங்களை விட்டார்கள் என்று அறிந்தேன். இருக்கலாம்

விஜய் மல்லய்யாவின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளே காரணம் என்றார் ஒரு தொழிலதிபர். அவர் பெங்களூர் பெரிதாக வளரும் என கணக்கிட்டார். ஆனால் உள்கட்டமைப்பு வசதிகளே செய்யாமல் பெங்களூரை தேங்க விட்டனர் அரசியல்வாதிகள். அவர்கள் எல்லாம் யோக்கியர்கள், விஜய் மல்லய்யா திருடன் – இதுதான் நம் மனநிலை.

கிங்ஃபிஷர் நஷ்டம் அடைந்தது. விஜய் மல்லய்யா தலைமை வகித்த பொதுப்பங்கு நிறுவனம் அது. அதன் லாபத்தில் பெரும்பகுதி அவருக்குத்தான் சென்றிருக்கும் என்பதனால் நஷ்டத்துக்கும் அவர் பொறுப்புதான். ஆனால் அவர் இந்திய அரசை ஏமாற்றி மோசடி செய்து தப்பி ஓடிய அயோக்கியன் என ஊடகங்கள் காட்டுவதும், இந்திய அரசு அவருக்கு பணத்தைச் சும்மா அள்ளிக் கொடுத்தது என்று சொல்வதும் மூடத்தனத்தின் உச்சம்

ஒருவகையில் விஜய் மல்லய்யாவுக்கு நிதி அளித்த நம் அரசும் வங்கிகளும் அவரது தொழில்பங்காளிகள். ஆகவே நஷ்டங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வதே முறை. அது அரசு வங்கிப்பணத்தை தனியொருவருக்குச் சும்மா அள்ளிக் கொடுப்பது அல்ல. அது ஒரு பிழையாகிப்போன முதலீடு. உலகம் முழுக்க எந்த வங்கியும் அத்தகைய முதலீடுகளைச் செய்துகொண்டுதான் இருக்கும். பிழையாக ஆவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற அதிநவீன நாடுகளில்கூட இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதை பொருளியல் நோக்கில் விவாதிப்பது வேறு விஷயம். அதில் ஓர் இடதுசாரி நோக்குடன் கருத்துச்சொல்வது வேறு. ஆனால் அதை ஒரு ஊழல் அல்லது திருட்டு என்று முதலாளித்துவ ஆதரவு இதழ்களும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டுவது குறைவாகச் சொன்னால்கூட ஓர் அவதூறு, ஒரு குற்றம்.

இன்று நம் அரசும் வங்கிகளும் ஆற்றல் உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய தனியார்த்துறையை ஊக்குவிக்கின்றன. கடன் அளிக்கின்றன. அதில் பெரிய அளவிலான வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இந்தியப் பொருளியலின் ஆதாரமாக அது மாறி வருகிறது. மோடி அரசின் சாதனையாக அது சொல்லப்படுகிறது

ஆனால் அந்த தொழிலதிபர்களில் ஒருசிலர் தோல்வியடையக் கூடும். வாய்ப்புகளை கணிப்பதில் உள்ள பிழையால். அல்லது கண்ணுக்கே தெரியாத காரணங்களால். அதில் அரசுக்கு இழப்பும் ஏற்படக் கூடும். லாபம் ஏற்பட்டால் பேசமாட்டோம், இழப்பு ஏற்பட்டால் அதை கொள்ளை என்று சொல்வோம் என்பது அல்ல பொருளியல் புரிதல்.

இதையெல்லாம் கொஞ்சம் விளக்கமாக எழுத நம் ஊடகங்கள் முயலலாம். ஆனால் ஆச்சரியமாக எதையுமே அறியாத வெறும் இதழாளர்களே ஊடகங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றனர். வெறும் கிராமத்து மேடைப்பேச்சுத் தரத்திலேயே நம் கட்டுரைகள் அமைந்துள்ளன. நம் சூழலின் துரதிருஷ்டம் இது.

விஜய் மல்லய்யாவை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை. அவரை வங்கிகள் வரவழைக்கலாம். சாத்தியமான அளவுக்கு அவரிடமிருந்து பணத்தை மீட்கலாம். ஆனால் அவர் மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுப்போன தொழில்முனைவர். அவரை மோசடியாளராக வேட்டையாடும் ஓர் அரசு அதற்குப்பின் தொழில் முனைவோரை தன் இலக்குக்கு இழுக்கவே முடியாது.

இந்தியாவின் தனியார்த்துறையில் அரசு முதலீடு பெருமளவுக்கு உள்ளது. முதலாளித்துவப் பொருளியலில் அதுவே இயல்பு. அதில் லாபம் இருப்பதனால்தான் நாம் வாழ்கிறோம். நஷ்டமும் இருக்கும். நஷ்டங்களை அரசு முதலாளிகளுக்கு ஏழைகளின் பணத்தைச் சும்மா கொடுக்கிறது என்று சித்தரிப்பது அப்பட்டமான மோசடி.

அதை ஒர் இடதுசாரி தீவிர இதழ் சொன்னால் புரிந்துகொள்ளலாம், அது அவர்களின் அரசியல். ஆனால் ஒரு பொருளியல் நடவடிக்கையின்போது கருப்புப்பணத்தை ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து வரிகட்டாதவர்களை தப்ப வைக்கும்பொருட்டு மல்லய்யா போன்ற தொழிலதிபர்களை திருடர்களாக ஆக்கி சித்தரிப்பது என்பது ஊடகக் கீழ்மை.

உற்பத்தி, உட்கட்டமைப்பு, அடிப்படைச்சேவைத் துறைகளில் பங்களிப்பாற்றும் பெருநிறுவனங்களுக்கும் சிறுவணிகர்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடுண்டு. அப்பெருநிறுவனங்களின் பெரும் முயற்சிகள் தோற்றுப்போகக் கூடும். அந்நஷ்டத்தில் அரசு பங்குசேரக் கூடும். சமீபமாக டாட்டா நிறுவனம் பெரும் கனவுத்திட்டம் ஒன்றின் தோல்வியால் துவண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அரசு உதவக் கூடும். அது வரிப்பணத்தைக் கொடுப்பது அல்ல. டாட்டா நம் பொருளியலின் அடித்தளங்களில் ஒன்று

அதைச் சுட்டிக்காட்டி நாடெங்கும் வரி ஏய்ப்பு செய்து பொருளியலை ஸ்தம்பிக்கச்செய்து வரிகொடுப்பவர்களிடமே மேலும் வரிபோடச் செய்பவர்களை நியாயப்படுத்தும் குரல் எவரால் ஏன் எழுப்பப்படுகிறது?

 நான் பொருளியலைப்பற்றி எழுதக் கூடாது. ஆனால் இந்த மிகமிக ஆதாரமான விஷயங்களையாவது ஒரு மொழியில் எவராவது எழுத வேண்டும் அல்லவா? நான் இதில் சொல்லியிருப்பவை அனைத்துமே தொழிலதிபர்கள், பொருளியலாளர்களுடன் பேசியும் வாசித்தும் அறிந்தவை. ஒருவகையில் பொறுமையிழந்தே நான் இதை எழுதுகிறேன்

இந்த அடிப்படைகள்கூட ஏன் இங்கே பேசப்படவில்லை? ஒன்று நம்மவர்களுக்கு முற்போக்காகக் காட்டிக்கொள்வதில் இருக்கும் சபலம். மனிதாபிமான முற்போக்குவாதியாக நின்று அல்லாமல் கருத்தே சொல்ல மாட்டார்கள். ஆனால் இங்கே எவருக்கும் இடதுசாரிப் பொருளியலில் ஆர்வமில்லை. அவர்கள் முதலாளித்துவப் பொருளியலில்தான் திளைப்பார்கள். நுகர்வார்கள். கருத்துச் சொல்லும்போது மட்டும் பஸ்தர்காடுகளில் துப்பாக்கியுடன் அலையும் மாவோயிஸ்டு மாதிரிப் பேச ஆரம்பிப்பார்கள். கண்ணீர் மல்குவார்கள். கொந்தளிப்பார்கள். அடடா என்ன ஒரு நல்ல மனசு என நாம் நெகிழவேண்டும்.

இந்தப் பாவனை வழியாக தங்கள் பிழைகளை மறைத்துக்கொள்ள முடியும். ஆகவே அதுவே பெரும்பான்மைக்குரலாக ஒலிக்கிறது. இத்தனை இடதுசாரிகள் இருந்தும் ஏன் கம்யூனிஸ்டுகள் இங்கே வைப்புத்தொகை இழக்கிறார்கள் என்பதை சிஐஏ நினைத்தால் ஃபோர்டு பவுண்டேஷன் வழியாக காசுகொடுத்து ஆய்வுசெய்து கண்டுபிடிக்கலாம்

இன்னொன்று மோடிவெறுப்பு. அதற்கு அரசியல்காரணங்கள் உண்டு. இடதுசாரிகளுக்கும் திராவிட இனவாதிகளுக்கும் தமிழ்த்தேசியப் பிரிவினையாளர்களுக்கும் அது ஒரு மனச்சிக்கலாகவே ஆகிவிட்டிருக்கிறது. மோடியை ஒரு லிபரல் அரசியலாளர் எதிர்க்க எல்லா காரணமும் உண்டு. அதை என்னாலும் ஏற்கமுடியும். ஆனால் மோடி இந்தியாவை அழிப்பதற்காக மட்டுமே முயல்கிறார், அவர் செய்வது ஒவ்வொன்றும் குற்றம் என்னும் மனநிலை மிக அசிங்கமானது.

சொல்லப்போனால் அவரை மேலே கொண்டுவந்ததே இந்த மனநிலைதான். லிபரல்கள்  தர்க்கமற்ற வெறுப்பைக் கக்கி அவர்கள் வெறுப்பவர்களை மக்களுக்கு பிடித்தமானவர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக ஒன்று. மோடி இந்தியாவை அழிப்பதற்காக மட்டுமே வந்தவர் என்னும் வகையில் ஏராளமான கட்டுரைகளைக் காணநேர்ந்தது . ஒரு பத்தி வாசித்ததுமே கீழே பார்ப்பேன். எழுதியவர் எவர் என. இஸ்லாமியப் பெயர் இருக்கும். பொருளாதார நிபுணர், அரசியல் ஆய்வாளர், இதழாளர், எழுத்தாளர், வாசகர் என பல அடையாளங்கள். ஆனால் கருத்தும் உணர்ச்சியும் ஒன்றே

மோடியை இஸ்லாமியர் வெறுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது ஒரு பொருளியல் நடவடிக்கை. இதன்மேல் கொள்ளும் கருத்துகூட அந்த வெறுப்பால்தான் தீர்மானிக்கப்பட வேண்டுமா என்ன? ஒரு பொருளியல் விஷயத்தில் ஆயிரம்பேரில் நாலுபேருக்காவது மாற்றுக்கருத்து இருக்காதா என்ன? சரி, நான் மோடியை வெறுக்கிறேன், ஆனால் இந்தப் பொருளியல் நடவடிக்கையில் இன்னின்ன சாதக அம்சங்கள் உள்ளன என்று சொல்லலாமே. ஒருவர்கூடவா இருக்கமாட்டார்? அத்தனை சிந்தனைகளும் அடிப்படையான மதநோக்கில் இருந்துதான் வந்தாக வேண்டுமா?

இறுதியாக மீண்டும் சொல்கிறேன். இது ஓர் வலதுசாரி அரசு. இதற்குச் சில பொருளியல் வழிமுறைகள் உள்ளன. அதனடிப்படையில் அது ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அது பலன் தரலாம், தோல்விகூட அடையலாம். அதை பொருளியல் கொள்கையில் எதிர்தரப்புகொண்டவர்கள் விமர்சிக்கலாம். மாற்றுவழிகளை முன்வைக்கலாம். அது இயல்பு

ஆனால் இங்கு நடந்தது அதுவல்ல. இங்கு நடந்தது அந்த முயற்சி தோற்று அதன் விளைவாக இந்தியப் பொருளியல் அழிந்து அதன் பழியையும் அரசின் மேல் சுமத்த வேண்டும் என எதிர்தரப்பினர் கொண்ட கீழ்மை மிகுந்த வேகம். அதற்காக அவர்கள் செய்துவரும் பொய்ப்பிரச்சாரம், பீதிகிளப்பல். அந்த வெறியில் இந்தியாவை அழிக்கும் கறுப்புப்பணப் பொருளியலுக்கு ஆதரவாகவே  நம் அறிவுஜீவிகள் களமிறங்கிய கீழ்மை

அதில் இடதுசாரிகள் ஈடுபட்டமை மிகமிக வருத்தம் தரக்கூடியது. இடதுசாரிகளின் இந்தச் சரிவு ஒரு பெரும் அறவீழ்ச்சி. அதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

– ஜெயமோகன்