‘காட்ஃபாதர் 2’ திரைப்படம் சித்தரிக்கும் முதலாளிகள், அரசு, மக்கள், புரட்சி!

Godfather 2 படத்தில் Hyman Roth என ஒரு கதாபாத்திரம் வரும். யூதன். Michael Corleone-ன் தந்தை Vito Corleone-ன் உதவியுடன் தொழிலுக்கு வந்திருப்பான். பல தொழில்கள் என விரிந்து தன் சாம்ராஜ்யத்தை பரப்பியவன்.

‍‍‍‍‍‍காலங்கள் ஓடி, Vito Corleone இறந்து, மகன் Michael Corleone தலைமை எடுத்திருக்கும் நேரத்தில், மைக்கெலுக்கு தன் சாம்ராஜ்யத்தின் ஒரு பங்கை கொடுப்பதாக உறுதியளிப்பான் Hyman Roth. உண்மையில் மைக்கெலை Hyman Roth பழி தீர்க்க முயற்சிப்பான் என்பதுதான் கதை. Hyman Roth மைக்கெலுக்கு கொடுப்பதாக இருந்த பங்கு, க்யூபா நாட்டில் வணிகம் செய்வதற்கான வாய்ப்பு.

அமெரிக்காவின் முதலாளிகள் க்யூப முதலாளிகளுடன் இணைந்து க்யூபாவில் தொழில் தொடங்க, அந்நாட்டின் அதிபர் பாடிஸ்டா (காஸ்ட்ரோவுக்கு முன் இருந்த அதிபர்) அனுமதி அளித்திருப்பார். அந்த நிறுவனங்களுக்கு க்யூபாவில் எந்த தடைகளும் இல்லை. எத்தனை லாபங்களும் சம்பாதிக்கலாம். மக்களை அளவுக்கு மீறி சுரண்டலாம். முதலாளிகள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் வளைந்து கொடுக்கும் வகையில்தான் க்யூப அரசும் இருக்கும். முதலாளித்துவத்துக்கு பட்டுத்துணி விரித்து வரவேற்கும் அரசு!

மைக்கெல் படித்தவன். விருப்பமின்றி திடுமென அப்பாவின் நிழலுகத்துக்குள் வந்தவன். அரசியல் ரத்தங்களின் களமாக இருந்த சிசிலியை பூர்வமாக கொண்டவன். என்னதான் முதலாளி வர்க்கமாக இருந்தாலும், பிரச்சினைகளை எந்த சாய்வும் இன்றி நேர்கொண்டு அவதானிப்பவன். க்யூபா நகருக்குள் நுழையும்போதே அந்த நாட்டின் நிலையை பார்க்கிறான். கார்களை கண்டாலே சிறு பொருட்களை விற்பதற்கு ஓடி வரும் சிறுவர்கள், பிச்சை கேட்பவர்கள், சாலையோர விபச்சாரிகள் என.

அதிபர் பாடிஸ்டாவை முதலாளிகள் சந்திக்கிறார்கள். க்யூப முதலாளிகளை அமெரிக்க முதலாளிகளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் அதிபர். அந்த அமெரிக்க முதலாளிகளில் Hyman Roth-ம் Michael Corleone-ம் அடக்கம். சந்திப்பு நடப்பது அதிபரின் ஒரு மாளிகையில். க்யூப தெருக்களிலும் மக்களிடத்திலும் காணப்படும் ஏழ்மையில் ஒரு சதவிகித தொடர்பு கூட இல்லாத படாடோபத்துடன் உள்ள மாளிகை!

அமெரிக்க முதலாளிகளை தன் நாட்டில் முதலீடு செய்யும்படி கேட்கிறார் அதிபர் பாடிஸ்டா. அரசின் முழு ஒத்துழைப்பை அவர்கள் எதிர்பார்க்கலாம் என பேசுகிறார். நாட்டின் போராளிகளை பற்றி கேள்வி எழுப்பப்பட, அதையெல்லாம் அரசு பார்த்து கொள்ளும், கவலைப்பட வேண்டாம் என அதிபர் உறுதியளிக்கிறார்.

மைக்கெல் ஹோட்டலுக்கு செல்லும் வழியில், போலீஸ் சோதனை நடந்து கொண்டிருப்பதால் கார் நிறுத்தப்படுகிறது. போராளிகளை பிடிப்பதற்கான சோதனை என சொல்லப்படுகிறது. தெருவில் சில போராளிகளை நிற்க வைத்து, போலீஸார் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில், ஒருவன் மட்டும் திடீரென இறங்கி ஓடி, அருகில் இருக்கும் கார் ஒன்றில் புகுந்துவிட, விரட்டி வரும் போலீஸும் காருக்குள் பாய்கிறார். கார் வெடிக்கிறது. காருக்குள் புகுந்த போராளி குண்டை வெடிக்க செய்து தன்னுடன் அந்த போலீஸையும் கொல்கிறான். மைக்கெல் அனைத்தையும் பார்க்கிறான்.

மாலையில் Hyman Roth-க்கான பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறான் மைக்கெல். சக முதலாளிகள் எனப்படும் நிழலுக டான்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர். அப்போது Hyman Roth பேசுகையில்:

ROTH: These are wonderful things that we’ve achieved in Havana — and there’s no limit to where we can go from here. This kind of Government knows how to help business…to encourage it — the hotels here are bigger and swankier than any of the rug joints we’ve put in Vegas — and we can thank our friends in the Cuban government — which has put up half of the cash with the Teamsters on a dollar for dollar basis — has relaxed restrictions on imports. What I am saying now is we have what we have always needed — real partnership with the government
‍‍‍‍‍‍என்கிறான்.

கேக்கெல்லாம் வழங்கப்பட்டபின், மைக்கெலுக்கும் Roth-க்கும் ஒரு உரையாடல் நடைபெறுகிறது:

MICHAEL: I saw an interesting thing happen today. A rebel was being arrested by the military police, and rather than be taken alive, he exploded a grenade he had hidden in his jacket. He killed himself, and took a captain of the command with him.

MICHAEL: — but it occurred to me. The soldiers are paid to fight — the rebels aren’t.

ROTH: What does that tell you?

MICHAEL: They can win.

ஒரு முதலாளியின் உண்மையான கவலையை மைக்கெல் தெரிவித்திருப்பான். அந்த உரையாடலை அப்படியே நீர்த்து போக செய்துவிட்டு, மைக்கேலை தனியே கூப்பிட்டு, அவன் கருத்தை பிற முதலாளிகளின் முன்னிலையில் தெரிவிக்காமல், தன்னிடம் தனியாக தெரிவித்திருக்க வேண்டும் என கண்டிக்கிறான் Hyman Roth.

தனக்கு வர வேண்டிய இரண்டு மில்லியன் டாலர்கள் இன்னும் வரவில்லை என கூறுகிறான் Hyman Roth. போராளிகள் தங்கள் தொழிலுக்கு பாதகம் ஏற்படுத்துவார்களோ என்ற தயக்கம்தான் மைக்கெல் பணத்தை தராமல் இருக்க வைக்கிறது என சொல்லும் Roth தொடர்ந்து,

ROTH: Here we are protected — free to make our profits without key follow with the goddamn Justice Department and the FBI. Ninety miles away, partnership with a friendly government — ninety miles. It’s nothing. Just one small step, looking for a man that wants to be President of the United States — and having the cash to make it possible. Michael, we’re bigger than U.S. Steel
‍‍‍‍‍‍என்கிறான்.

அதற்கு பின், Hyman Roth-ன் சாம்ராஜ்யத்தில் பங்கு பெறுவதற்கான விலையான இரண்டு மில்லியன் டாலர் பணத்தை சகோதரனை வைத்து க்யூபாவுக்கு கொண்டு வர வைக்கிறான் மைக்கெல். அடுத்த நாள் அதிபர் மாளிகையில் நடக்கும் புத்தாண்டு விழாவில் தான் கொல்லப்படவிருப்பதாக சகோதரனிடம் சொல்லுகிறான். அமெரிக்காவில் தன்னை கொல்ல நடந்த முயற்சிக்கு பின்னால் இருப்பது யாரென கண்டறியத்தான் க்யூபாவுக்கு வந்திருப்பதாகவும் மைக்கெல் சொல்கிறான்.

பணம் வந்த தகவல் தெரிந்து மைக்கெலை சந்திக்க அழைக்கிறான் Hyman Roth. தன்னை கொல்ல நடந்த முயற்சிக்கு பின்னால் இருப்பது யாரென கேட்கிறான் மைக்கெல். ஒரு கட்டத்தில் மைக்கெலை கொல்லவிருந்தது தான்தான் என ஒப்புக்கொள்கிறான் Hyman Roth. மைக்கெல் தன் நண்பனை கொன்றதை பழி தீர்க்கவே அப்படி முடிவு எடுத்ததாக சொல்கிறான். ஆனால் வியாபாரத்துக்காக அந்த பழியுணர்ச்சியையும் விட்டு கொடுத்ததாக கூறுகிறான்.

கொல்ல முயல்வது Hyman Roth என்பதும் தன் வீட்டு காம்பவுண்ட்டுக்குள்ளேயே தன்னை கொல்ல முயன்றது யாரென அறிய விரும்பிய மைக்கெலுக்கு, அந்த உண்மையும் கடைசியில் தெரிந்துவிடுகிறது. Hyman Roth-ன் ஆணையில் மைக்கெலை கொல்ல முயன்றது அவன் சகோதரன்!

அதிபர் மாளிகையில் புத்தாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ராணுவ அதிகாரிகள் வருகின்றனர். அதிபர் பாடிஸ்டாவிடம் தனியே பேசுகின்றனர். பின், பாடிஸ்டா வெளியே வந்து அறிவிக்கிறான்:

PRESIDENT: Due to serious setbacks to our troops in Guantanemo and Santiago — my position in Cuba is untenable. I am resigning from office to avoid further bloodshed. And I shall leave the city immediately. I wish you all good luck.

அனைவரும் மாளிகையை விட்டு அவசர அவசரமாக வெளியேறுகின்றனர். தன் சகோதரனை தேடி பிடித்து, கிளம்ப சொல்லுகிறான் மைக்கெல். அப்போது, பொறுக்க மாட்டாமல் தன்னை கொல்ல முயன்றது அவன்தான் என்பது தனக்கு தெரியும் என்பதையும் கூறுகிறான். மைக்கெலை எதிர்கொள்ள முடியாமல் சகோதரன் ஓடி வெளியேறுகிறான்.

வெளியே மக்கள், புரட்சி குதூகலத்தில் இருக்கிறார்கள். போராளிகள் வாகனங்களிலும் ஜீப்களிலும் வெற்றி பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், முதலாளிகள் வேக வேகமாக நாட்டைவிட்டு வெளியேற ஓடிக் கொண்டிருக்கின்றனர். கிடைக்கும் கார்களில் ஏறி தப்புகின்றனர். தங்கள் அடையாள அட்டைகளை காட்டி விமானங்களில் ஏற முயல்கின்றனர்.

தெருக்களில் போராளிகளை வரவேற்று மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மாளிகைகளில் இருக்கும் பொருட்களை சூறையாடி தெருக்களில் போட்டு உடைக்கின்றனர். போராளிகளின் வாகனங்களை சுற்றி வெற்றி கோஷங்களை எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

இவர்கள்தான் முதலாளிகள். இதுதான் அரசு. இதுதான் மக்கள். இதுதான் புரட்சி.

முதல் மூன்றுதான் நம் நாட்டில் நடந்துகொண்டிருப்பது. கடைசியில் இருப்பது கண்ணுக்கு எட்டியவரை காணவே இல்லை…

RAJASANGEETHAN JOHN