பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை: பெரியாரை கொல்பவர்கள் யார்?

உடுமலைப்பேட்டையில் ஆதிக்க சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கர், படுகாயமடைந்த கவுசல்யா குறித்து பேசும் பதிவுகளில், “பெரியார் மண்ணிலா இப்படி?” என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரின் பணி குறித்து பெருமிதமும், இப்போது குறைந்து விட்டதோ என்று கவலையில் இருந்தும் இந்தக் கேள்வி எழுகிறது. அதேநேரம் பெரியாரின் மண்ணை சாதி வெறியர்களின் மண்ணாக மாற்றுபவர்களை குறி வைக்காமல், நேர்மறையில் பெரியாரை பற்றி மட்டும் பேசுவது பொருத்தமில்லை.

ஆதிக்க சாதி வெறியர்களோடு கருத்தளவிலும், நடைமுறையிலும் ஒன்றியவர்கள் இந்து மதவெறியர்கள். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவோடு நட்பு பாராட்டி கூட்டணி சேர்ந்து, சாதி வெறியர்களுக்கு பால் வார்த்த கனவான்களுக்கு இந்த கொலையில் பங்கில்லையா?

தமிழகத்தில் தேவர் சாதிவெறிக்கு தூபம் போட்டு, கட்சி அமைத்து களம் அமைத்துக் கொடுத்த ஜெயா – சசி – அ.தி.மு.க கும்பலுக்கும் இந்த கும்பலை வெட்கம்கெட்ட முறையில் ஆதரிக்கும் கட்சிகளுக்கும், பேசும் ஊடகங்களுக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?

திராவிட எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் இனவெறியும், தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் பேசும் பல பத்து தமிழினவாதிகளின் குழுக்களுக்கு இந்தக் கொலையில் பங்கில்லையா?

தலித்துக்களை கொல்லும் ஆதிக்க சாதிவெறியின் பெயரில் கட்சி நடத்தும் சாதிவெறியர்கள் ஈழத்திற்கோ, தமிழனுக்கோ குரல் கொடுத்தால் அவர்களை அரவணைத்து கூட்டணி வைக்கும் தமிழினக் குழுக்களின் தலைவர்களுக்கு இந்தக் கொலையில் பங்கில்லையா?

பெரியாரின் கொள்கையை – நிறுவனங்களை கல்லா கட்டும் தொழிலாக சுருக்கிவிட்டு, பாதுகாப்பாக முற்போக்கு பேசும் தலைவர்களுக்கு இந்தக் கொலையில் பங்கில்லையா?

பெரியாரை தலித்துக்களின் விரோதியாக சித்தரிக்கும் கருத்துப் பணியில் ஈடுபட்ட தலித்தியவாதிகள் சிலருக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?

ஒவ்வொரு சாதிவெறிப் படுகொலையின்போதும் சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதிகளை, அவற்றின் கட்சிகளை அடையாளத்தோடு சொல்ல பயப்படும் கோமகன்களுக்கு இந்தக் கொலையில் பங்கில்லையா?

பெரியாரின் மண் என்ன செய்தது என்று கேள்வி எழுப்புவோர் எவரும் இந்துக்களின் மண் என்ன செய்தது? தமிழனின் மண் என்ன செய்தது? என்று கேட்பதில்லை! ஏனெனில் சாதிவெறியும், மதவெறியும் அங்கே அடிப்படை அம்சம். ஆக சாதி வெறி, மதவெறி மாய்த்து, மனித நேயம் தழைக்க வேண்டுமானால் பெரியாரின் கொள்கையை பேசுவதோடு, அமல்படுத்தவும் வேண்டும்.

பெரியாரின் காலம் போன்றதல்ல தற்காலம். இங்கே பார்ப்பனியம் அரசளவிலும், சமூக அளவிலும் முன்னெப்போதைக் காட்டிலும் வலுவாக மாற்றப்பட்டு வருகிறது. பார்ப்பனிய இந்து மதவெறியையும், ஆதிக்க சாதிவெறியையும் அரசியல் ரீதியில் புரிந்துகொண்டு நடைமுறையில் போராட்டங்களை கட்டியமைக்காமல் “பெரியாரின் மண் என்ன செய்தது?” என்று கேட்பதில் பயனில்லை, பொருளுமில்லை!

                                                                                                ______________________________

பார்ப்பனியத்தின் குற்றப் பத்திரிகை

கொல்லப்பட்ட சங்கர், படுகாயப்படுத்தப்பட்ட கௌசல்யா மீது பார்ப்பனியத்தின் குற்றப் பத்திரிகை:

குற்றவாளிகளின் பெயர்: கௌசல்யா, சங்கர்

குற்றம்: பார்ப்பனியத்தின் மனுதர்மத்தை மீறிய திருமணம்

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நாள்: 13.03.2016

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட இடம்: அடிமை தலித்துக்களை அடக்கி வாழும் ஆண்டை கொங்கு வேளாளக் கவுண்டர்களின் கோட்டையான உடுமலைப்பேட்டை

சங்கரின் குற்றம்: ஒரு தலித்தாக (பள்ளர்) பிறந்து, ஒரு ஆதிக்க சாதி (தேவர்) பெண்ணை மணம் முடித்தது

கௌசல்யாவின் குற்றம் 1: ஆதிக்கம் செய்யும் சாதியின் மானம் பறிபோகுமளவு ஒரு தலித்தை மணம் முடித்தது

கௌசல்யாவின் குற்றம் 2: மணமுடித்த பிறகு பிரிந்து வர மறுத்தது.

கௌசல்யாவின் குற்றம் 3:  வரவில்லை என்றால் சங்கரைக் கொன்றுவிடுவோம் என குடும்பத்தினர் மிரட்டியபோதும் வர மறுத்தது.

சங்கரின் பெற்றோர் செய்த குற்றம்: மகனுக்கு புத்தி சொல்லி கௌசல்யாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பாமல் இருந்தது.

குற்றங்களின் சமீபத்திய வரலாறு: கோகுல்ராஜ், இளவரசன் இருவரும் தண்டிக்கப்பட்டனர்.

குற்றவாளிகளை தண்டிப்பதற்கு உதவியோர்: அரசு, போலீசு, ஆண்டைகளின் கட்சிகள்.

எச்சரிக்கை 1: இந்த தண்டனை நிறைவேற்றத்தால் ஆண்டைகள் தனியாக நடத்தும் கட்சிகளுக்கு வரும் தேர்தலில் வரவேற்பு அதிகம். இதனால் சொந்தங்கள் உரிய முறையில் பேரத்தை அதிகப்படுத்தி பயனடையுமாறு இந்தக் கோர்ட் அறிவிக்கிறது.

எச்சரிக்கை 2: இந்த தண்டனைக்குப் பிறகு தமிழகத்தில் கலவரம் நடத்தத் துணியும் தலித் இளைஞர்களை அரசு முன்னெச்சரிக்கையுடன் கைது செய்து அமைதியை நிலைநாட்டுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி: திருவாரூர் கல்லூரி செய்திகள்