கலையை ரசியுங்கள்! தாஜ்மஹாலை கொண்டாடுங்கள்!

தாஜ்மஹால் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் அகற்றப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருவது நின்று போய்விடப் போவதில்லை.

உத்தரப்பிரதேசம் போன்ற வறுமையில் உழலும் மாநிலத்திற்கு, தாஜ்மஹால் ஒரு அட்சயப் பாத்திரம். அங்கு வரும் உள்ளூர் மற்றும் உலக சுற்றுலாப் பயணிகளால் கிட்டும் வருவாய் அவ்வளவு.

தாஜ்மஹால் சென்றவர்களுக்கு தெரியும், டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வரையிலுமே சாலை அவ்வளவு பரபரப்பாக இருக்கும். பயணம் முழுதும் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்ல முடியும், அவ்வளவு வாகனங்கள்.

2001ஆம் ஆண்டு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலுக்கு வந்து கண்டுகளித்ததை யுனெஸ்கோ நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது.

தற்போது, தாஜ்மஹாலுக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் எனத் தகவல். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் ரூ 40. வெளிநாட்டு பயணிகளுக்கு ரூபாய் 1000.

குறைந்தபட்சம் 10 சதவீதம் வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள் என்றால் அவர்கள் மூலம் கிடைக்கும் நுழைவுக் கட்டணமே 80 கோடி ரூபாயாக இருக்கும். உள்ளூர் பயணிகள் வருவாயும் சேர்ந்து 100 கோடியை தாண்டி விடும். இந்தப் பயணிகள் மூலமாக சர்வசாதாரணமாக இரண்டாயிரத்தில் இருந்து மூவாயிரம் கோடிக்கு ஆக்ரா நகரில் வியாபாரம் இருக்கும். வெளிநாட்டு பயணிகளின் தங்கும் அறை செலவு, வாகன செலவு, உணவு செலவு என கணக்கிட்டால் இந்தியாவிற்கு மிகப் பெரிய வருமானம்.

மற்ற நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்று, தங்கத் தட்டில் வைத்து தாங்குகிறார்கள்.

உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், தானாக வரும் சுற்றுலாப் பயணிகளை விரட்டும் முயற்சியில் இறங்குகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் தான் சிறப்பு.

“தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை, இஸ்லாமியக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.” இருக்கட்டுமே, இஸ்லாமியர்களும் வாழும் நாடு தானே இது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் என எண்ணற்ற மதத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வசிக்கும் நாடு.

ஆனால், ஆதித்யநாத் இந்துக்கள் மாத்திரம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் உத்தரபிரதேச அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்து வருவதையும், தனது அரசின் மற்ற தோல்விகளையும் திசைதிருப்பத் தான் இந்தப் பேச்சுகள். பிஹாரில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பேச்சு இது. இந்து உணர்வைத் தூண்டி அங்கும் ஆட்சியை பிடிக்கும் நோக்கம்.

இன்னும் சில சங்கிகள் அடுத்தக் கட்டத்திற்கு போய் விட்டார்கள், தாஜ்மஹால் என்ன காதலின் சின்னமா என்று. மும்தாஜ், ஷாஜஹானின் மூன்றாவது மனைவி. பதினான்காவது பிள்ளை பிரசவத்தின்போது தான் இறந்துப் போனார். இது எப்படி காதலாகும் என்று சிந்தித்து கேள்வி எழுப்புகிறார்கள். அது நீங்கள் ஷாஜஹான் சமாதியில் போய், ஓ.பி.எஸ் போல் யோகா, தியானம் செய்து ஷாஜஹான் ஆவியோடு பேசி கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது.

ஏன் இவ்வளவு பயணிகள் தாஜ்மஹாலுக்கு வருகிறார்கள் என்பது தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய செய்தி. தாஜ்மஹால், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் “புராதான சின்னங்களில் ஒன்றாக” யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இருபது ஆண்டுகள், 20,000 கலைஞர்கள், பணியாளர்கள் பணியாற்றி எழுப்பிய அதிசயம் அது. அந்த காலக்கட்டத்திலேயே மூன்று கோடியே இருபது லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்றைய மதிப்பு ஆறாயிரம் கோடியை தாண்டி விடும். இனி, இப்படி ஒன்றை எழுப்ப இயலாது.

நானூறு வருடங்களுக்கு முன், யமுனை நதிக்கரையில், மார்பிள் மாளிகையாக எழுப்பப்பட்டுள்ளதை உலக அதிசயத்தை கலைக் கண்ணோட்டத்தோடு பார்வையிட தான் வருகிறார்கள்.

0a1e

வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் காண வேண்டிய பட்டியலில், முதல் இடத்தில் வைத்திருப்பது தாஜ்மஹாலைத் தான். அதை இந்தியாவின் சுற்றுலா அடையாளமாக நினைக்கிறார்கள். யோகி சொல்வதால் யாரும் அதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

அமெரிக்க முன்னாள் அதிபர் ‘காதல் மன்னன்’ கிளிண்டனாக இருந்தாலும், பாகிஸ்தானின் ‘டெரர்’ சர்வாதிகாரி முஷாரஃப் ஆக இருந்தாலும் தாஜ்மஹால் விசிட்டை தவற விடவில்லை. இனி வருபவர்களும் அப்படி தான் கண்டு ரசிப்பார்கள்.

காலையில் ஒரு கிராமத்து பெரியவர் டீக்கடையில் அடித்த கமெண்ட் தான் ஹைலைட். “அறிவிச்ச ஆதித்யநாத்துக்கு கல்யாணம் ஆவல, மோடி பொண்டாட்டியோட வாழல. பொண்டாட்டி, புள்ளையோட வாழ்ந்தா தான் கலா ரசன இருக்கும். இவங்களால தாஜ்மஹால ரசிக்க முடியுமா?”.

கலையை ரசியுங்கள், தாஜ்மஹாலை கொண்டாடுங்கள் !

சிவசங்கர் எஸ்.எஸ்.

Read previous post:
0a1d
அமெரிக்காவில் ‘காவியன்’ படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் நிஜ துப்பாக்கி சூடு: 58 பேர் பலி!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஐஎஸ் தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 58 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Close