தமிழர்களுக்கு: இன அடையாளம் தொலைத்த ஒரு ஓநாய் மனிதனின் கதை!

ஒரு காட்டுக்குள் ஒரு ஓநாய். அந்த ஓநாய்க்கு ஒரு மகன் ஓநாய் இருக்கிறது. காடு முழுக்க தேடி அலைந்து தனக்கு உண்ண இல்லையென்றாலும் மகன் ஓநாய் பசியாற எதையாவது கண்டுபிடித்து கொண்டு வந்து விடும் தாய் ஓநாய். ஆனால் மகன் ஓநாய்க்கு மட்டும் புரியவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக திரிகையில் ஒருநாள் ஒரு விற்பனை பிரதிநிதியை அது பார்த்திருக்கிறது. அவன் எல்லா சந்தோஷங்களுடனுடனும், வசதியுடனும் இருந்தான். அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. நாம் மட்டும் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்?

‍‍‍‍‍‍ ‍‍அந்த காட்டுக்கு ஒரு சக்தி இருக்கிறது. உயிரினங்கள் தம் தலையில் கை வைத்து எதை வேண்டினாலும் அந்த விருப்பம் நிறைவேறும். தான் ஒரு விற்பனை பிரதிநிதி மனிதனாக மாற விரும்புவதாக மகன் சொல்ல, தாய் ஓநாய் மறுக்கிறது. நமக்கு தெரியாத விஷயங்களில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்துகிறது. மகன் அடம் பிடிக்கிறது. விற்பனை பிரதிநிதி மனிதன் ஆகிவிட்டால் எந்த சிரமங்களும் இருக்காது. இரண்டும் பிரச்சினைகள் இன்றி வாழலாம் என மகன் சொல்லுகிறது. மகனின் பிடிவாதத்தால் வேறு வழியின்றி தாய் ஓநாய் ஒப்புக் கொள்கிறது. மகன் ஓநாய் தலையில் கைவைத்து மனிதன் ஆகிறது.

நகரத்துக்குள் வந்து சுற்றுகிறான். ஒரு நிறுவனத்துக்குள் நுழைந்து நேர்காணலுக்கு செல்கிறான். நேர்காண்பவர் பெயர் கேட்கிறார். ஒரு மலையின் பெயரை சொல்கிறான். விற்பனை பிரதிநிதி ஆக வேண்டும் என சொல்கிறான். காட்டு மிருகங்களின் தோல் கொண்டு பொம்மைகள் செய்யும் நிறுவனம் என்பதால், காட்டு மிருகங்களின் பண்புகள் குறித்து கேள்வி கேட்கிறார். ஓநாய் மனிதன் தான் புழங்கியிருந்த மிருகங்கள் வாழ்க்கையை விளக்கமாக எடுத்துரைத்து தேர்வாகிறான்.

முதல் வருடம் முழுக்க கடுமையாக உழைக்கிறான். எல்லா மாத விற்பனைகளிலும் முன்னணியில் இருக்கிறான். நிறுவனம் பாராட்டுகிறது. பெருமையுடன் காட்டுக்குள் சென்று தாயை சந்திக்கிறான். மகனை கண்ட மகிழ்ச்சியில் அள்ளி அரவணைக்கிறது தாய். நாள் முழுவதும் அளவளாவுகிறார்கள். தாயை போல மகனால் ஒன்ற முடியவில்லை. ஒரு வருட காலம், தாயின் மொழி புரிவதை கடினமாக்கி விட்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளை ஒன்றிணைத்துதான் புரிந்து கொள்கிறான்.

மேலதிகாரிகளின் அரசியலால் ஓநாய் மனிதனுக்கு அடுத்த வருடத்தில் கஷ்டமான பணி அளிக்கப்படுகிறது. புதுவகை தோல்களை அடையாளம் கண்டு, அடைய வேண்டிய பணி. வேறு வழியின்றி ஏற்கிறான். தோல் உரிக்கும் இடத்திற்கு ஒருநாள் செல்கிறான். தோலுரிக்கப்பட்டு ஓநாய்கள் தொங்குகின்றன. தன் இனம் எல்லாம் நாக்கு தொங்கி, உடலுரிந்து, ரத்தம் சொட்ட தொங்குவதை கண்டு அழுகையும் கோபமும் பீறிடுகிறது. அங்கிருந்து ஓடுகிறான். மேலதிகாரி அவனிடம் அருகிலுள்ள காட்டில் ஓநாய்களின் ரகத்தை கண்டறியுமாறு சொல்லி துப்பாக்கி கொடுக்கிறான். தனக்கு வேலை பிடிக்கவில்லை என்றும் பணியிலிருந்து விலக விரும்புவதாகவும் சொல்கிறான். உயரவிருக்கும் பதவி, சம்பளம் ஆகியவற்றை சொல்லி, அவனை சம்மதிக்க வைத்து காட்டுக்கு அனுப்புகிறான் மேலதிகாரி.

காட்டுக்குள் நுழையும்போதே தான் தொலைத்த நறுமணத்தை மீண்டும் ஆழ சுவாசிக்கிறான். உடன் வந்திருந்தவர்கள் தடங்கள் பார்த்து பின்தொடருகின்றனர். இவனும் இன்னும் சிலரும் காட்டுக்கு முகப்பிலேயே நிற்கிறார்கள். உள்ளே சென்றவர்கள் மிருகங்களை விரட்டி வரும்போது சுடுவதற்கு வசதியாக! தான் காட்டில் கழித்த வாழ்க்கையை நினைவு கூர்கிறான் ஓநாய் மனிதன். அங்கிருந்த மிருகங்கள் எண்ணிக்கை குறைந்ததன் காரணம் புரிகிறது. வனப்புடன் இருந்த காடு எலும்பும் தோலுமாய் ஆகியிருப்பதை உணர்கிறான்.

உயிரின்றி தொங்கி கொண்டிருந்த இனம், அவற்றின் வாழ்க்கை, குடும்பம், கனவு எல்லாம் மனதில் ஆடுகிறது. அப்போது காட்டுக்குள் இருந்து சத்தம் கேட்கிறது. எல்லாம் தயார் ஆகிறார்கள். மூத்த அதிகாரியான அவன்தான் முதல் குண்டு சுட வேண்டும். உள்ளே அழுத்திக் கொண்டிருந்த ரணமும் கோபமும் பொங்க, கண் நிரப்பும் கண்ணீருடன் விசையை அழுத்துகிறான். உள்ளிருந்து வெளிவரும் முதல் ஓநாய் காற்றிலேறி பாய முற்படுகையில், அசைவறுந்து சுருண்டு விழுகிறது.

குண்டு சத்தம் காடு முழுக்க எதிரொலித்து மனமெங்கும் அறைகிறது. அனைவரும் அவனை கொண்டாடுகின்றனர். இதுவரையான வேட்டைகளிலேயே இதுதான் சிறந்த வேட்டை என்கின்றனர். இளைய ஓநாய்கள் தான் ஆர்வக்கோளாறில் வெளியே ஓடி வரும். ஆனால், முதிர்ந்த ஓநாயின் தோலுக்குதான் மதிப்பு அதிகம். அப்படியே முதியவை வந்தாலும் அவற்றை சுட்டு வீழ்த்துவது மிக கடினம். அவ்வளவு எச்சரிக்கையானவை. சுடுபட்ட முதிய ஓநாய் மட்டும் எந்த பாதுகாப்பு உணர்ச்சியும் இன்றி ஓடி வந்தது அனுபவ வேட்டைக்காரர்களுக்கே ஆச்சரியம். அது ஓடிவந்த காரணம் அவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது. குண்டு பாய்ந்து வீழ்த்தியது அவனது தாயை!

இது ஒரு ஜப்பானிய சிறுகதை.

யுவபுரஸ்கார் விருது பெற்ற லஷ்மி சரவணக்குமார், புத்தக இரவில் கலந்து கொண்டு, விருது நிகழ்ச்சியில் தமிழர்களுக்கும் இந்தியல்லாத மற்ற மொழியினருக்கும் எதிரான உணர்வு இருந்ததை பகிர்ந்துகொண்டு, இன அடையாளங்களை தொலைப்பதால் ஏற்படும் இழப்பை குறிப்பிட்டு சொன்ன கதை.

RAJASANGEETHAN JOHN