”கற்பனைக் கதை” என அறிவித்துக்கொள்ளும் ‘விடுதலை’ திரைப்படத்தில் சில உண்மைச் சம்பவங்கள்!

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தில் 1980களின் மத்தியில் தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்களின் சாயல் தெரிகிறது. இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பாகவே, ”இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை” என அறிவிப்பு ஒன்று காட்டப்படுகிறது. ஆனால், 80களில் தமிழ்நாட்டில் தீவிரமாக இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை, அதை முடக்க காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவையே படமாக விரிந்திருப்பதை புரிந்துகொள்ள முடியும்.

மருதையாற்றுப் பாலம் தகர்ப்பு

 இந்தப் படத்தின் முதல் காட்சியில் குண்டு வைத்து ரயில் தகர்க்கப்படும் காட்சி வருகிறது. இது 1987ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அரியலூருக்கு அருகில் உள்ள மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்வை ஒத்ததாக உள்ளது.

1987 காலகட்டத்தில் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பு அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டது. அந்தத் தருணத்தில் இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க இந்தியப் படை இலங்கைக்குச் செல்லும் எனப் பேச்சுகள் அடிபட்டு வந்தன.

ஆகவே, தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான ரயில் பாலத்தைத் தகர்ப்பதன் மூலம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க இந்தக் குழு முடிவு செய்தது.

அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து சில்லக்குடி செல்லும் வழியில் உள்ளது மருதையாற்றுப் பாலம். இந்தப் பாலம்தான் சென்னையையும் திருச்சியையும் இணைக்கும் முக்கியமான ரயில் பாலம். இந்தப் பாலத்தை ரயில் வராத நேரமாகப் பார்த்து தகர்த்துவிட்டு, பொறுப்பேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. எதற்காகச் செய்தோம் என்பதை சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்குச் சொல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மூன்று குழுக்கள் உருவாக்கப்பட்டன. பாலத்தைத் தகர்க்க ஒரு குழு, சுவரொட்டிகள் மூலம் இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு குழு, குண்டு வெடித்ததும் ரயில் நிலையங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல ஒரு குழு.

அதிகாலை 3.10க்கு ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. அரியலூர் இருப்புப் பாதை உதவி அலுவலர் டேனியலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், டேனியல் அதை நம்பவில்லை. சிறிது நேரத்தில் சில்லக்குடி இருப்புப் பாதை அலுவலரும் தொலைபேசி மூலம் இந்தத் தகவலைச் சொன்னார். அப்போதும் டேனியல் நம்பவில்லை. பிறகு மீண்டும் தொலைபேசி மூலம் அழைத்த இருப்புப் பாதை அலுவலர், திருச்சிராப்பள்ளிக்கு வரும் ரயிலை இடையிலேயே நிறுத்த வேண்டுமெனச் சொன்னார். அதை டேனியல் ஏற்கவில்லை.

சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.35க்கு அரியலூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. 4.37க்கு புறப்பட்டது. எட்டு நிமிடத்தில் சில்லக்குடி நிலையத்தை ரயில் அடைய வேண்டும். ஆனால், 15 நிமிடமாகியும் ரயில் சில்லக்குடிக்கு வரவில்லை. இதையடுத்து ரயிலைத் தேடி புறப்பட்டார் சில்லக்குடி இருப்புப் பாதை அலுவலர். அவர் மருதையாற்றுப் பாலத்திற்குச் சென்று பார்த்தபோது, பாலம் இடிந்து போயிருந்ததால், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாயிருந்தது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தார்கள். 90 பேர் காயமடைந்தனர்.

பாலத்தைத் தகர்த்து கவனத்தை ஈர்ப்பதுதான் விடுதலைப் படையின் நோக்கம் என்றும், ரயிலைக் கவிழ்ப்பது அவர்கள் நோக்கமல்ல என்றும் அந்த அமைப்பிற்கு நெருக்கமானவர்கள் சொன்னார்கள். இந்த வழக்கில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதற்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பொன்பரப்பியில் ஒரு வங்கிக் கொள்ளை முயற்சியின்போது, தமிழரசன் உள்ளிட்ட ஐந்து பேர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

‘விடுதலை’ படத்தைப் பொறுத்தவரை, ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்து விடுதலைப் படையினர் தேடப்படுவது போன்றவற்றை ஒத்திருக்கும் காட்சிகள் மட்டும் இந்த முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.

வாச்சாத்தி கொடூரம்

1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-23ஆம் தேதி வாச்சாத்தியில் காவல்துறை நடத்திய வன்முறைச் சம்பவத்தின் சாயலில் ஒரு நிகழ்வும் இந்தப் படத்தில் காட்டப்படுகிறது.

விடுதலைப் படையின் தலைவரைத் தேடும் காவல்துறை, அந்தத் தலைவருக்கு ஆதரவாக உள்ள ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரையும் அழைத்து வந்து, அடைத்து வைத்து பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் காட்சி படத்தில் வருகிறது.

1992ஆம் ஆண்டு ஜூன் 22-23ஆம் தேதி 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் வாச்சாத்தி என்ற கிராமத்திற்குள் புகுந்து சந்தனக் கட்டைகளைத் தேடுவதாகக் கூறி வன்முறையில் இறங்கினர். இதில் 34 பேர் கொல்லப்பட்டனர். 18 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். மொத்தம் 107 பேர் பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, உயிரோடு இருந்த 215 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. பல ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது மேல் முறையீட்டில் உள்ளது.

தமிழ்நாடு விடுதலைப் படை இயங்கியது, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மத்திய – கடலோர மாவட்டங்கள். விடுதலை திரைப்படத்தில், சம்பவங்கள் நிகழ்வது தர்மபுரி பகுதியை ஒட்டி இது நடப்பதாகக் காட்டப்படுகின்றன.

-முரளிதரன் காசிவிஸ்வநாதன்

நன்றி: பிபிசி தமிழ்