மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களையும் சுயமரியாதையையும் காப்பாற்ற களம் இறங்கிய விவசாயிகள் சங்கம்!

அரசியல் பின்புலம் கொண்ட நபர்களால் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை வருகிறது. அதுவும் பாலியல் அச்சுறுத்தல் வடிவில் வருகிறது. உடைந்து போகும் அவர் தனக்கான நியாயத்தை கேட்க விழைகிறார். அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தத் தொடங்குகிறார்.

சிலர் பரிவு கொள்கின்றனர். சிலர் கோபம் கொள்கின்றனர். ஆனால் எதுவும் கிடப்பில் போடப்பட்டால் பழைய விஷயமாகி விடுமல்லவா? முதல் தடவை புகாரை கேட்கும்போது பெண்ணின் மீது பரிவு வரும். அடுத்த முறை கேட்கும்போது செய்தவர்கள் மீது கோபம் வரும். மீண்டும் கேட்கும்போது காரணம் சொல்லப்படும். மறுபடி சொல்லும்போது அலுப்பு வரும். அடுத்ததாக அதிருப்தி ஏற்படும். அடுத்ததாக சொல்பவர் மீது கோபம் வரும். அடுத்ததாக புறக்கணிப்பு நேரும்.

அப்பெண்ணுக்கும் புறக்கணிப்பு நேர்கிறது. அரசியல்வாதிகள் வேறு விஷயங்களில் தீவிரமாக இருக்கின்றனர். கவனம் திசைதிரும்புவது தெரிந்ததும் போராட்டத்தை பெண் தீவிரப்படுத்துகிறார். ஊர்வலம் செல்ல முனைகிறார். ஒடுக்குமுறை கட்டவிழ்க்கப்படுகிறது. காவலர்களால் தடுக்கப்பட்டு குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தப்படுகிறார்.

மக்கள் அவர் மீது பரிவு கொண்டாலும் ஏதும் செய்யும் அதிகாரமற்று இருக்கிறார்கள். நம்பிக்கையின் விளிம்புக்கு விரட்டப்படும் அப்பெண் இறுதிக்கட்டத்தை எட்டுகையில், அவருக்கு உதவ ஒரு கரம் வருகிறது.

எப்படி இருக்கிறது? சினிமாக்கதை போல இருக்கிறதா?

பெண்ணின் இடத்தில் மல்யுத்த வீராங்கனைகள். அரசியல்வாதி இடத்தில் கட்சிகளும் மோடியும். உதவும் கரமாக நரேஷ் திகாயத்.

நாட்டுக்காக ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர்கள் பாஜக அரசியல்வாதியால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளானதை தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தில் அனைவரும் அனுதாபம் தெரிவித்தார்கள். கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மறுபக்கத்தில் மோடி ஆட்டமாக ஆடி செங்கோலுடன் புதிய நாடாளுமன்றத்துக்குள் புகுந்தார். அந்த விழாவில் பாலியல் அச்சுறுத்தல் செய்தவனும் உடன் நிற்கிறான்.

அதே சமயத்தில் போராட்டம் நோக்கி கவனத்தை திருப்ப, வீராங்கனைகள் முன்னெடுத்த ஊர்வலம் கடுமையாக ஒடுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டு காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

மனமொடிந்த வீராங்கனைகள் தங்களின் பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக அறிவித்தனர். அவருக்கு ஆதரவாக மக்கள் திரண்டனர்.

அச்சமயத்தில்தான் உதவும் கரமாக திகாயத் வந்தார். பதக்கங்களை வீசாமல் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டு, வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஐந்து நாட்கள் அரசாங்கத்துக்கு கெடு விதித்திருக்கிறார்.

யார் திகாயத்?

பாஜக அரசின் இறுமாப்பை குலைத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறச்செய்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பாரத் கிசான் யூனியனின் தலைவரின் சகோதரர்.

அவர் நாயகனா என தெரியாது. ஆனால் தனி நபர் போராட்டமாக இருந்த விஷயம் தற்போது அமைப்பின் உதவியுடன் முன்னெடுக்கப்படவிருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.

பாஜகவின் வீழ்ச்சியை, எதிர்க்கட்சிகள் கூட கணித்திராதபோது நிகழ்த்திக் காட்டியவர்கள் பெண்களும் விவசாயிகளும்தான். இப்போது இருதரப்பும் இணைகிறது. அரசியல் காரணங்களாகவே இருந்தாலும் ஒரு முக்கியமான திருப்பமாக இது அமையலாம்.

RAJASANGEETHAN