“வில்லாதி வில்லன் வீரப்பன்’ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்!” – ராம்கோபால் வர்மா

தமிழக – கர்நாடக போலீசாருக்கு சிம்மசொப்பனமாகவும், மிகப் பெரிய சவாலாகவும் விளங்கியவர் சந்தனமரக் கடத்தல் வீரப்பன். போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அவரது வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை பிரதானமாக  வைத்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள படம் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’.

தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தில் வீரப்பன் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் சந்தீப் பரத்வாஜ் நடித்துள்ளார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக உஷா ஜாதவ் நடித்துள்ளார். முத்துலட்சுமியுடன் தந்திரமாக நெருங்கிப் பழகி, வீரப்பனை காட்டுக்கு வெளியே கொண்டுவரும் போலீசாரின் உளவாளி பிரியாவாக பிரபல மாடல் அழகியும், நடிகையுமான லிசா ரே நடித்துள்ளார். வீரப்பனை ஒழித்துக்கட்டும் போலீஸ் படையின் தலைவராக சச்சின் ஜோஷி நடித்துள்ளார்.

0a3

வரும் 27ஆம் தேதி ஹிந்தியில் ரிலீசாகவிருக்கும் இப்படம் தமிழில் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினர் சகிதம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ராம்கோபால் வர்மா பேசியதாவது:

வீரப்பனை மையமாக வைத்து இதற்கு முன் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்பது எனக்கு தெரியும். வீரப்பன் குறித்து நான் சேகரித்த தகவல்களை வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். எனக்கு கிடைத்த தகவலின் படி வீரப்பன் 97 போலீஸ்காரர்களை கொன்றிருக்கிறான். 900 யானைகளை கொன்று குவித்திருக்கிறான். வீரப்பனை பிடிக்க மட்டும் அரசாங்கம் 734 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

இப்படி அரசாங்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனின் கடைசி இரண்டு ஆண்டு காலத்தில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் இதுவரை வெளிவந்த வீரப்பன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

வீரப்பனின் வாழ்க்கைப் பின்னணியையும், வீரப்பனை வீழ்த்த போலீசார் நடத்திய ‘ஆபரேஷன் குக்கூன்’ பற்றியதுமே இந்த படம். இந்த படத்தின் கதை கண்ணன் என்ற போலீஸ் உயர்அதிகாரியை சுற்றி நகர்கிறது. கண்ணன் துணிச்சலான போலீஸ் அதிகாரி. வீரப்பனை பிடிப்பது ம்ட்டுமே அவரது ஒரே இலக்கு. ‘போரில் எதுவும் தவறில்லை’ என்பது போல், வீரப்பனை பிடிக்க வேண்டும் என்ற இலக்கை அடைய, பல சமரசங்களை செய்துகொள்கிறார் கண்ணன்.

படத்தின் ஆரம்பக் காட்சியே ‘ஆபரேஷன் குக்கூன்’ திட்டம் தீட்டப்படுவதை விவரிக்கிறது. ‘ஆபரேஷன் குக்கூன்’ கமாண்டராக இருந்தவர் விஜயகுமார். அவரது திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்டவரே கண்ணன்.

அடுத்தடுத்த காட்சிகள் வீரப்பனுக்கு விரிக்கப்படும் வலை குறித்தவையே. முதல் திட்டமாக, பிரியா என்ற ஒரு பெண்ணை நியமிக்கிறார் கண்ணன். அவர் வீரப்பனின் நெருங்கிய தோழியாக மாறுகிறார். பிரியா மூலம் வீரப்பனின் மறைவிடத்தை அறிந்து, அவனை நெருங்குவதே போலீசாரின் திட்டம். அத்திட்டத்தில் போலீஸ் அதிகாரி கண்ணன் வெற்றி பெற்றாரா? என்பதே இப்படத்தின் கதை.

இவ்வாறு ராம்கோபால் வர்மா கூறினார்.