அதிமுக, திமுக மீது விஜயகாந்த் தாக்கு!

“அதிமுகவை போலவே திமுகவையும் எனக்கு பிடிக்காது. காரணம் இவை இரண்டும் மக்கள் விரோத கட்சிகள்” என்று விஜயகாந்த் கூறினார்.

தேமுதிக 11-வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், மற்றும் கட்சியின் 21 எம்.எல்.ஏக்கள், 52 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 1,550 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ராகுகாலம் முடிந்த பிறகு காலை 10.30 மணிக்கு விஜயகாந்த் அரங்குக்கு வந்தார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், அப்துல்கலாம், சசிபெருமாள், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்டோருக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் அதிமுக அரசைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்க வேண்டும், 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எத்தகைய முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த முழு அதிகாரத்தையும் விஜயகாந்துக்கு வழங்குவது என்பன உட்பட 23 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் அதிமுகவை கடுமையாக தாக்கிப் பேசினார், தொடர்ந்து திமுகவையும் தாக்கிப் பேசினார். பாஜகவை கவனமாக தவிர்த்தார். அவர் பேசியது:

“மழை, வெள்ளம் என்று மக்கள் தத்தளித்த இடத்தில் போய் வாக்காளப் பெருமக்களே என்கிறார் ஜெயலலிதா. விதி எண்-110 அறிவிப்பில் எத்தனையோ திட்டங்களை அறிவித்த ஜெயலலிதா, அதில் கல்விக்கு, மருத்துவத்துக்கு என்று மக்களுக்கு உபயோகமாக எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? சினிமாவில் டூப் போடாமல் சண்டை போட்டவன் நான். சிறையில் அடைக்கப்பட்ட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விடுதலை செய்யாதிருந்தால் இந்த பொதுக்குழு முடிந்த கையோடு நான் ஜெயலலிதா வீட்டின் முன்பாக போய் அமர்ந்திருப்பேன். என்னை கைது செய்வார்கள், அவ்வளவுதானே? என் தொண்டர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன்.

அதிமுக ஆட்சியில் காவல்துறை செயல்பாடு மிக மோசமாக உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி என்பதெல்லாம் நடக்காத காரியம். ஆட்சி மட்டுமல்ல, இந்த 5 ஆண்டுகளோடு அதிமுகவும் முடிந்தது. அதிமுகவை போலவே திமுகவையும் எனக்கு பிடிக்காது. காரணம் இவை மக்கள் விரோதக் கட்சிகள். சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை இங்கே தந்திருக்கிறீர்கள். அதன்படி நல்ல முடிவை இன்னொரு பொதுக்கூட்டத்தில் அறிவிப்பேன்” என்றார் விஜயகாந்த்.