சொத்து குவிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து வழக்கு பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின்போது, தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை நீதிபதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக நீதிபதி அமித்தவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.