சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சாகித்ய அகாடமி விருது வென்றிருக்கும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு, நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழிக்கான 2016ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களோடு மிகவும் நட்போடு பழகி வருபவர் கமல்ஹாசன். பல எழுத்தாளர்களோடு தினமும் பேசுவது, உரையாடுவது உள்ளிட்டவற்றை வழக்கமாக கொண்டவர்.

தற்போது அமெரிக்காவில் ‘சபாஷ் நாயுடு’ தொடர்பான பணிகளில் கமல் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு சாகித்ய அகாடமி விருதினை வண்ணதாசன் வென்றிருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனே கமல் தன்னுடைய நண்பர் இரா.முருகனுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் “மறக்காமல் என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள். என் பழைய நண்பர்… நன்றி அனந்து சாருக்கு. வண்ணதாசன் எழுத்துக்கு 35 வருடங்கள் முன்பாகவே அனந்து பெரிய ரசிகர். அவரால் நானும்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். இதனை இரா.முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.