உடுமலை ஆணவக்கொலை செய்தவன் இந்து மக்கள் கட்சி செயலாளர்!

உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நட்டநடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கரை கொடூரமாக வெட்டிக்கொன்ற கொலைகாரர்களில் ஒருவன் திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி நகர செயலாளர் செல்வகுமார் என்றும், இவனது காவிக்கட்சி அடையாளத்தை போலீசும், ஊடகங்களும் திட்டமிட்டு மறைக்கின்றன என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் கிராமம் சாவடி தெருவில் வசிக்கும தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர் (வயது 22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்த, திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யா (வயது 19) என்ற தேவர் சாதிப்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சங்கரும், கவுசல்யாவும் ஜவுளி எடுக்க உடுமலைப்பேட்டைக்கு சென்றிருந்தபோது, அரிவாள் ஏந்திய ஒரு கும்பல், பட்டப்பகலில், நடுரோட்டில், பொதுமக்கள் கண் முன்னால் அந்த இருவரையும் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டது. இதில் சங்கர் துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படுபாதக கொலைச் சம்பவம், தனது தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை ஆகியோருடைய தூண்டுதலின் பேரில் நடந்துள்ளதாக உடுமலை போலீஸில் கவுசல்யா புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மாமா மகன் மைக்கேல் மதன் காமராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்களில், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, வெளியில் இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில், பாதுகாப்பு கருதி, சம்பவம் நடந்த மறுநாளே நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து, தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கிறார். தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை ஆகிய இருவரும் தலைமறைவாக இருக்கிறார்கள்.

இந்த மூன்று பேர் தவிர மீதமுள்ள 6 பேரில் 5 பேரை போலீசார் பிடித்து, நீதிபதிமுன் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் ஒருவன் கவுசல்யாவின் மாமா மகன் மைக்கேல் மதன காமராஜ்.

ஏனையோர் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ், நிலக்கோட்டை தாலுகா பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார், பழனியைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டன் ஆகியோர் ஆவர். இவர்கள் மீது ஏற்கெனவே கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்களில் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி நகர செயலாளர் என்றும், இவன் ஏற்கெனவே பல கொலைகள் செய்தவன் என்றும், இவனது காவிக்கட்சி அடையாளத்தை போலீசும், ஊடகங்களும் திட்டமிட்டு மறைக்கின்றன என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆறாவது நபரான பொன்மாந்துரையைச் சேர்ந்த தன்ராஜ் இன்னும் போலீசில் சிக்கவில்லை.

0a2n