‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை: லீனா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் சுசி கணேசன்!

இந்தியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை, தமிழ்நாட்டில் பிரபல பின்னணிப் பாடகி சின்மயியால் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறியதைத் தொடர்ந்து, இது போன்ற குற்றச்சாட்டை வேறு சிலரும் சில தமிழ் திரைத்துறை பிரபலங்கள் மீது கூறி வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞரும், இயக்குனருமான லீலா மணிமேகலை ‘மீ டூ’ குற்றச்சாட்டை சுமத்தினார். 2005ஆம் ஆண்டு சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து தப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சுசி கணேசன் இக்குற்றச்சாட்டை மறுத்தார். “லீனா மணிமேகலை கூறுவது முற்றிலும் தவறானது. அவர் மீது போலீஸில் ஆன்லைனில் புகார் அளித்துள்ளேன். அடுத்து அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்வதுடன், ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு மான நஷ்ட வழக்கும் தொடர இருக்கிறேன்” என்றார் சுசி கணேசன்.

அதன்படி, கடந்த 17ஆம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் முன் தனது வழக்கறிஞர் மூலம் சுசி கணேசன், லீனா மணிமேகலைக்கு எதிராக சிஆர்பிசி சட்டம் 200-ன் கீழ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சுசி கணேசன் இன்று (22-10- 2018) உரிமையியல் நீதிமன்றத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக ஒரு ரூபாய் இழப்பீடு கோரி மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் லீனா மணிமேகலை தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகப் பதிவு செய்துள்ளதால் லீனா மணிமேகலை ஒரு ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு ஏற்கப்பட்டால் விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ள முதல் ‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை இது தான் என்பது குறிப்பிடத் தக்கது.