நெடுவாசல் பிரச்சனை: “என் கிராம மக்களுக்கு துணை நிற்பேன்!” – ‘டிடி’

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15ஆம் தேதி அனுமதி அளித்தது. விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் இரவு பகலாக கிராம மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இப்போராட்டத்துக்கு விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தடி நீரைக் குறைத்துவிடும். விவசாய நிலங்களை வீணாக்கி, சுற்றியுள்ள பல கிராமத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிடும். அந்தப் பகுதியின் விவசாயிகள், மக்களின் சம்மதம் இன்றி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தக் கூடாது.

விவசாயிகள் இது பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். என் தந்தை பிறந்து வளர்ந்தது பேராவூரணிக்கு அருகில் உள்ள தென்னங்குடி. அங்கிருந்து வந்த நான், என் கிராம மக்களுக்கு துணை நிற்பேன்.

இவ்வாறு டிடி கூறியுள்ளார்.