நினைவலைகள்: இன்றைக்கும் பொருந்தும் விதமாய் அன்று கல்லூரியில் பேசிய கருணாநிதி

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழாவுக்கு வந்திருந்தார் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி.

அது ஜனநாயகம் முழுமையாக மறுக்கப்பட்டிருந்த காலம். அவசர நிலையைப் பிரகடனம் செய்து, பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, இந்திரா காந்தி பேயாட்சி நடத்திக் கொண்டிருந்த இருண்ட காலம். இக்கொடுமையை ஏற்க மறுத்து, ஓர் ஆட்சியாளராகவும், ஆளுங்கட்சித் தலைவராகவும் கருணாநிதி இந்திய அரசுக்கு எதிராக சம்ரசமற்று சமர்புரிந்து கொண்டிருந்த காலம். அவர் எங்கு பேசினாலும் ஓரெழுத்தும் மாறாமல் உளவுத்துறையினர் ரகசியமாக குறிப்பெடுத்து இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டிருந்த காலம்.

இத்தனை கெடுபிடிகள் இருந்தபோதிலும், அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழாவில் பேசிய கருணாநிதி, “எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய நீங்கள் (மாணவர்கள்) ஜனநாயகத்தை உணர வேண்டும். தமிழகம் ஜனநாயகப் பாதிப்புக்காக கொதித்தெழுந்திருக்கின்றது” என்று போர் முரசறைந்தார்.

இப்படி நேரடியாக மட்டுமல்ல, மறைமுகமாக ‘பொடி’ வைத்துப் பேசுவதிலும் வல்லவர் கருணாநிதி. இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்ப்பதால், கருணாநிதி ஆட்சி கலைக்கப்படலாம், இச்சதியை முறியடிக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. ஆட்சிக்கு, கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும், அப்போது தான் தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் தொடர இயலும் என்பதை நேரடியாகச் சொல்லாமல், ‘மாணவர் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை க்ட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஆதரிக்க வேண்டும்’ என கூறுகிற சாக்கில் மறைமுகமாக வலியுறுத்தினார் கருணாநிதி. “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, கட்சி வேறுபாடுகளை மறந்து பாராட்டுவது சிறந்தது. யாரோ ஒருவருக்கு விளம்பரம் கிடைக்கிறதே – புகழ் சேருகிறதே என்றெண்ணி, நாம் ஒதுங்கிவிட்டால் பொதுநன்மை கிட்டாது போய்விடும்” என்றார் அவர்.

முன்னதாகப் பேசிய மாணவர் பேரவைத் தலைவர், ‘அமெரிக்கன் கல்லூரிக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். இது பற்றி தன் பேச்சில் குறிப்பிட்ட கருணாநிதி, கல்லூரிக்கான சுயாட்சி பற்றி விளக்குகிற சாக்கில், தனது ‘மாநில சுயாட்சிக் கோரிக்கை’ பிரிவினைவாதம் அல்ல’ என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அப்ளாசை அள்ளினார். அவர் பேசினார்: “அமெரிக்கன் கல்லூரிக்கு சுயாட்சி தேவை. சுய ஆட்சி என்ற சொல் விபரீதமான சொல் அல்ல. இன்னும் சொன்னால், சுய ஆட்சி என்ற சொல் வட சொல். தன்னாட்சி என்ற சொல் பொருந்தும்.

அமெரிக்கன் கல்லூரி தன்னாட்சி கேட்கிறது. பல்கலைக் கழகத்தின் கண்காணிப்பிலிருந்து விலகி விடாத தன்னாட்சி கேட்கிறது. புதிய பாட முறைகள், சிறந்த போதனா முறைகள் போன்றவற்றைப் புகுத்த தன்னாட்சி கேட்கிறீர்கள். மாணவர்கள் கேட்கிற எதையும் நான் மறுத்ததில்லை. மாணவர்களுக்காக, கல்லூரிக்காக இதை நிச்சயமாக மறுக்க மாட்டேன். இந்தியாவில் கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்கப்படும் சரித்திரம் எழுதப்படுமானால் அந்தப் பெருமை அமெரிக்கன் கல்லூரிக்குக் கிடைக்கும்; அது முதலிலே கிடைக்கும்” என்றார் கருணாநிதி.

இறுதியாக, ‘படிப்பைப் பொறுத்தவரை நானொரு விதிவிலக்கு; இந்த விஷயத்தில் மாணவர்கள் என்னை பின்பற்றக் கூடாது’ என்று அறிவுரை வழங்கினார் கருணாநிதி. அவர் பேசினார்: “மாணவர்கள் கிளர்ச்சி செய்கின்ற உணர்ச்சிக்கு இடம் கொடுத்துவிட்டனர். நானே ஓர் அரசியல் கட்சி சார்பில் தான் வளர்ந்தேன், படிப்பைக் கெடுத்துக் கொண்டேன். என்னைப் பார்த்துவிட்டு, ‘ஒழுங்காகப் படிக்காமல் அரசியலில் ஈடுபட்டால் முதலமைச்சர் ஆகிவிடலாம்’ என்றால் அது முடியாது. விதிவிலக்குகள் வழிகாட்டிகள் ஆக மாட்டா.

சிறுவனாக இருந்தபோது பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த ஹிட்லர் தான் பின்னால் தேசத் தலைவன் ஆனான். செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தொழிலாளியின் மகன் தான் ஸ்டாலின். அவன் உலகமே புகழும் சோவியத் நாட்டின் அதிபர் ஆனான். இவர்களெல்லாம் விதிவிலக்குகள். இங்கே முறையாக கல்வி பயின்றவர் (அமைச்சர்) ஓ.பி.ராமன் அவர்கள். விதிவிலக்கையும் பாருங்கள். வழிகாட்டியையும் பாருங்கள்.

பெற்றோர் நிலை என்ன? அவர்களின் துன்பங்களுக்கு கைம்மாறு என்ன? கிராமத்து மொழியில் சொன்னால், வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி பாடுபட்டு, உங்களைப் படிக்க வைக்கும் அவர்களின் ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது? நன்கு படித்து பயனுள்ளவர்களாக வெளிவாருங்கள்” என்று தன் பேச்சை நிறைவு செய்தார் கருணாநிதி.

# # #

0a1n

சுமார் 43 ஆண்டுகளுக்குமுன் நான் அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவனாகவும், மாணவர்களுக்காக கல்லூரி நிர்வாகம் நடத்திய ‘THE VOICE’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தபோது நிகழ்ந்த நிகழ்வு இது. என் எழுத்துலக வாழ்க்கையில் நான் முதன்முதலாக ஒரு தலைவரின் பேச்சை குறிப்பெடுத்து எழுதி பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டது – கருணாநிதியின் இந்த பேச்சைத் தான்.

பார்ப்பனியக் கழுகுகள் தமிழரின் இறைச்சி தின்ன வெறியோடு காத்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், கருணாநிதி என்ற தாய்க்கோழி இல்லாமல் மறைந்துவிட்டதே என்ற துயரத்துடன், ‘THE VOICE’ பத்திரிகையின் பழைய பேப்பர் கட்டிங்கை தேடி எடுத்து மீண்டும் படித்துப் பார்க்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் முதல் மாடியிலிருக்கும் மெயின் ஹால், அங்கு இடம் போதாமல் நிரம்பி வழியும் மாணவர்கள் கூட்டம், மேடையில் – தோளில் கிடக்கும் துண்டை சரி செய்தபடி உரை நிகழ்த்தும் கருணாநிதி, அவரது பேச்சின் ஒவ்வொரு வாக்கியத்தையும் புரிந்துகொண்டு ரசித்து கரவொலி எழுப்பும் மாணவர்கள்… என எல்லாம் என் மனக்கண் முன் வந்து போகின்றன. அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம், மாநில சுயாட்சி கோரிக்கை, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமானது என்றெல்லாம் – இன்றைக்கும் பொருந்தும் விதமாய் – அன்று அவர் பேசிய பேச்சு இப்போதும் என் மனச்செவிகளுக்குள் கரகரக்கிறது.

போய் வா, திராவிடச் சூரியனே! உன் இலட்சியச் சுடரை அணையாமல் காப்பதோடு, அதை இன்னும் பிரகாசமாய் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுப்போம்… போய் வா!

ராஜய்யா

ஆசிரியர், ஹீரோநியூஸ் ஆன்லைன் டாட்காம்