மின்னுவதெல்லாம் புரட்சி அல்ல!

சில நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாகக் கூறினார். அதற்குக் காரணமாக அவரின் அமைச்சர்கள் பலர் ராஜிநாமா செய்தது சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஆட்சிக்கவிழ்ப்பு. ஆனால் உள்ளிருந்தே.

என்ன காரணமாம்?

அதிகார துஷ்பிரயோகம் செய்து ஒருவரை பதவிக்கு அமர்த்தியிருக்கிறார். கோவிட் ஊரடங்கின்போது ‘பார்ட்டி’கள் நடத்தி விதி மீறியிருக்கிறார். நன்கொடைகளைக் கொண்டு தன் வீட்டை வசதியாக கட்டியிருக்குறார் என முறைகேடுகள் அடுக்கப்படுகின்றன. 2019-ல் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் ‘சே இப்படிப்பட்டவரா’ என முந்தா நாள் தூங்கி எழுந்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர்கள் பதவிகளை விட்டு விலகி இருக்கின்றனர். விளைவாக ஜான்சனும் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

போரிஸ் ஜான்சன் மீது அப்படி என்ன அமைச்சர்களுக்கு வெறுப்பு?

வெறுப்பெல்லாம் இல்லை. அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

பிரிட்டனின் பணவீக்கம் 9.1 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தை சரி செய்ய முன்னெடுக்கப்பட்ட Brexit நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை. கோவிட் மொத்தமாக தலையில் துண்டை போட்டு விட்டிருக்கிறது. பிரிட்டனின் இந்த நிலைக்குக் காரணம் போரிஸ் அல்ல; பொருளாதாரக் கொள்கை!

ஆனால் பொருளாதார முறையே பிரச்சினை என்பதை முதலாளித்துவம் எப்படி ஒப்புக் கொள்ளும்? எனவே காரணம் போரிஸ் ஜான்சனின் முறைகேடுகளாக சுருக்கப்பட்டு அவர் வெளியேற்றப்படுகிறார்.

இலங்கையில் கோத்தபயா தப்பி ஓடி இருக்கிறார். மக்கள் அரண்மனைக்குள் நுழைந்துவிட்டனர். அடுத்து?

கோத்தபய, ராஜபக்சே பிரச்சினையா அல்லது முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கை பிரச்சினையா? ராஜபக்சே குடும்பத்தினரின் முறைகேடுகளும் ஊழலும் பிரச்சினையா? அல்லது அவர்களை அதிகாரம் ஏற அனுமதித்த இனவாத முதலாளித்துவக் கூட்டுப் பிரச்சினையா?

லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் முதலாளித்துவம் செய்து பழகிய ஆட்சிக்கவிழ்ப்புகளை உலகெங்கும் நொறுங்கும் தன் பொருளாதார முறையை மறைக்க செய்யத் தொடங்கி இருக்கிறது. பொருளாதார மாற்றத்துக்காக நேரும் மக்கள் எழுச்சி ஆட்சியாளர் மாற்றமாக சுருக்கி முடித்து வைக்கப்படுகிறது.

இந்தியாவிலும் இலங்கை போன்ற எழுச்சி ஏற்படுவது சந்தேகம்தான். போரிஸ் ஜான்சன் போன்ற உள்ளிருந்து ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம். அதை ஆர்எஸ்எஸ்ஸே கூட செய்யலாம். மோடியைக் கை கழுவலாம். ஒருவேளை இலங்கையை ஒத்த எழுச்சியோ பிரிட்டன் ஆட்சிக்கவிழ்ப்பு போன்ற ஒன்றோ இங்கு நேர்ந்தால் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் இருத்தியிருக்க வேண்டும்.

இங்கு மோடி அல்ல பிரச்சினை, மோடியை குஜராத் மாடல் வழியாக வளர்த்தெடுத்து அவர் பாசிசம் சூடுவதை அழகு பார்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பன-பனியாக் கூட்டமும் முதலாளித்துவமும் பொருளாதார முறையும்தான் என்கிற புரிதல் இருத்தல் வேண்டும்.

இல்லையெனில் மோடியை அகற்றி விட்டு ஆர்எஸ்எஸ்ஸின் மிதமான இந்துத்துவர் ஒருவரை அரியணை ஏற்றி பாசிஸ்டாக்கி முதலாளித்துவம் தன் நோக்கத்தை நிறைவேற்றும்.

உலக மூலதனம் அடைந்திருக்கும் முட்டுச்சந்தில் இருந்து கொஞ்சமேனும் அது நகர முற்றுமுழுவதுமாய் சுரண்ட அனுமதிக்கும் பாசிசம் அதற்குத் தேவை. அத்தேவையை மக்கள் எழுச்சிகளையும் அவர்தம் கோபத்தையும் மட்டுப்படுத்தி ஆட்சியாளர்களை மாற்றி அது நிறைவேற்றிக் கொள்ளும்.

மின்னுவதெல்லாம் புரட்சி அல்ல!

உபரித் தகவல்:

போரிஸுக்கு அடுத்து வரக் கூடியவர்களுக்கானப் பட்டியலில் முதன்மையாக இருப்பவர் ரிஷி சுனுக். போரிஸின் அரசாங்கத்தில் இவர் கருவூலச் செயலாளராக இருந்தார். போரிஸ்தான் இவரை நியமனம் செய்தார். பிறகு பொருளாதாரக் கொள்கையில் போரிஸுடன் தனக்கு முரண்பாடு இருப்பதாக அறிவித்து ராஜிநாமா செய்துவிட்டார்.

இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கி பெரும் பணக்காரராக இருந்து மோடி ஆட்சியை ஆதரிக்கும் நாராயணமூர்த்தியின் மருமகன்தான் இந்த ரிஷி சுனுக்.

சூட்சுமக் கயிறு!

RAJASANGEETHAN