“மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சையில் 10,000 ஏக்கர் நிலம் தரிசாகிவிடும்!” எப்படி?

“மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாக போய்விடும்” எப்படி? இதென்ன கேயாஸ் தியரி?

அறியாதவர்கள் கவனமாகப் படித்து உயிர்ச் சங்கிலியின் சாராம்சத்தை மனசுலே ஏத்திக்கோங்க. அறிவாளிகள் ஒதுங்கிச் செல்க.

மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் பிற உயிரினங்களைப் போலவே அவனது நீர்த் தேவையும் குறைவாகவே இருந்தது. குடிக்க, சமைக்க..அரிதாக குளிக்க! அவன் வேளாண் சமூகமாக மாறிய பிறகுதான்,பிற உயிரினங்களுக்கான நீரையும் அபகரிக்கும் அளவு அவனது நீர்த்தேவை அதிகமாக உயர்ந்தது.

தமிழகத்துக்கான மொத்த நீர்த்தேவையில் 70% நீரைத் தருவது தென்மேற்குப் பருவக்காற்று கொண்டுவந்து சேர்க்கும் மழைமேகங்கள்தாம். அந்த மேகங்களைத் தடுத்து நிறுத்தி, குளிர்வித்து மழையாகப் பெற்று, அதை தன்னுள் சேமித்து ஊற்றாக மாற்றி ஆறாக நமக்கு அனுப்பி வைப்பது மேற்குத் தொடர்ச்சி மலையும், காடும்.

பிரபஞ்சவெடிப்பில் உருவான மலைத்தொடர்கள் உடல் எனில் அதிலுள்ள காடுகள் அதன் உயிர். நித்தமும் ஒவ்வொரு நொடியும் அவை தன்னை புதிதாக உருவாக்கி உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கின்றன. அது எப்படி?

முதன்முறை உருவான காடுகள் தேனீக்களாலும், பறவைகளாலும் பரந்து உருவாகியிருக்கும். சரியா?

அப்படி உருவான காடுகள் அடர்ந்து வளர்ந்தபிறகு, சூரியஒளி உட்புக வழியில்லாமல், புதிய செடிகள் முளைத்திருக்காதுதானே! எனில், முதன்முறை உருவான காடு மீண்டும் உருவாக எத்தனை நூறாண்டுகள் தேவைப்படும்? இதற்குத்தான் மான், பன்றி, முயல் போன்ற தாவரபட்சிணிகளை இயற்கை உருவாக்கிக் கொண்டது.

இவை மரங்களின் ஊடாகப் புகுந்து சிறு செடி, கொடி,கிழங்களைப் பிய்த்துத் தின்ன, அதனால் உருவாகும் இடைவெளியில் சூரியஒளி புகுந்து தக்க ஈரப்பதத்தை உருவாக்கி, பூஞ்சைக்காளான், சிறுசெடி, கொடிகளுக்கு உயிர் அளிக்க அந்த அடர்ந்த வனம் மீண்டுமொருமுறை உயிர்ப்பிக்கப்படுகிறது.

சரி! இப்போது காட்டுக்கு புலியின் தேவை எங்கிருந்து வந்தது? சைவ பட்சிணிகளின் வரம் / சாபம் எந்நேரமும் தின்று கொண்டேயிருப்பது.. எப்போதும் இனப்பெருக்கம் செய்து கொண்டே இருப்பது. அப்படி அளவுக்கு அதிகமான மான், பன்றி, முயல்கள் உருவானால் சிறுசெடியைக்கூட தப்பவிடாமல் மேய்ந்து விடுமே!

இவற்றை கட்டுப்படுத்தத்தான் காடு தனது காப்பாளனாக புலியை உருவாக்கிக்கொண்டது. கிரிக்கெட்டில் தோனி போல காட்டில் புலி! அப்படியொரு ஜெண்டில்மேன் அது. பசித்தால்தான் வேட்டையாடும். பசித்தாலும் சூல்கொண்ட மானைக் கொல்லாது. சில நேரங்களில் இளம் மான்குட்டிகளோடு விளையாடுமளவு பெருந்தன்மையானது.

காட்டிலுள்ள சிறுத்தை, நரி போன்ற இதர மாமிச பட்சிணிகளைக்கூட சிறுவிலங்கு வேட்டைக்காக உடன் வசிக்க பெருந்தன்மையாக புலி அனுமதித்திருக்கிறது. ஆனால், மனிதனோ வெறும் அரை பாட்டில் பிராந்திக்காக புலியையும் கொல்வான்… மானையும் கொல்வான். எனவேதான் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் ஆகிறான்.

ஒரு புலி உயிர்வாழ நூறு சதுர கிலோமீட்டர் காடு தேவை. அத்தனை பெரிய பரப்பளவை பராமரித்து, ஆண்டு, ஆட்சி செய்கிறது ஒற்றைப் புலி! ஒரு காட்டின் ஆரோக்கியம் அதில் எத்தனைப் புலிகள் வசிக்கின்றன எனும் எண்ணிக்கையில் தான் கணக்கிடப்படும். எனவேதான் ஒரு புலி இறந்தாலும் நாம் பதற வேண்டியிருக்கிறது.

ஆக, புலிகள் இல்லையெனில் மேற்கு மலைக்காடுகள் இல்லை! காவிரி இருந்திருக்காது. கரிகாலன் கல்லணை கட்டியிருக்க முடியாது. ராஜராஜன் பெரும் சாம்ராஜ்யம் அமைத்திருக்க முடியாது. ராஜேந்திரன் கடல்கடந்து வென்றிருக்க முடியாது. இயல்,இசை,நாடகம் இல்லை. எனவேதான், சோழர் கொடியில் புலி வீற்றிருந்தது.

எனவேதான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்த தஞ்சை நெற்களஞ்சியத்தின் தொல்குடி மக்கள் தமது கடவுளாகப் புலிகளை வணங்கினர். கோவில்களில் முதல் சிற்பம் புலி. திருவிழாக்களில் முதல் ஆட்டம் புலியாட்டம். காட்டுக்கே போகாமல், புலியையே காணாமல் புலியின் அருமையை அறிந்திருந்தனர்.

புலிகள் இல்லாவிடின் காவிரி, தென்பெண்ணை, வைகை நமக்கு இல்லை. இவை இல்லாமல் தமிழகம் வெறும் பாலைவனம். ஓடங்களில் சென்றிருக்க முடியாது. ஒட்டகங்களில்தான் பயணித்திருக்கணும். அப்பாடி! சொல்ல ஆரம்பித்த விஷயத்துக்கு வந்துட்டேன்.

நண்பர்களே! மனித வாழ்வின் ஆதாரம் நீர். அந்த உயிர்நீரை அளிப்பது காடுகள். அந்தக் காடுகள் நமக்குக் கோவில் எனில் அதில் வாழும் கடவுள் புலிகள். காடுகளுக்குச் செல்லும்போது ஜாலியாக பியர்பாட்டிலை உடைத்து வீசும்போது, அவை நமக்களித்த உணவை,மொழியை,பண்பாட்டை இழிவு செய்கிறோம் என்பதை உணருங்கள்.

எழுதியது.. SKP KARUNA

(Shared from Ismath Jahith)

(சர்வதேச புலிகள் தினம் இன்று)

Read previous post:
0a1b
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம்: புதுச்சேரி முதல்வருக்கு நேரில் நன்றி

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களான பச்சைத் தமிழகம் தலைவர் முனைவர் சுப.உதயகுமாரன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணை்ப்பாளர் பேராசிரியர்  த.செயராமன், பூவுலகின்

Close