“என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, போய் வருகிறேன்”: பிரியாவிடை பெற்றார் கருணாநிதி

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல், தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நாசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தமிழ் திரையுலகத்தினரும் ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பெருந்திரளான பொதுமக்களும் அஞ்சலி செலுத்திய நிலையில், மாலை 4 மணிக்கு கருணாநிதியின் உடல் ராணுவத்தினரால் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, அண்ணா சதுக்கம் நோக்கி இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

ராஜாஜி ஹாலிலிருந்து அண்ணா சதுக்கம் வரை பல ல்ட்சம் தொண்டர்களும், பொதுமக்களும் வழி நெடுக நின்று அஞ்சலி செலுத்தினர். மக்கள் கூட்டத்தால் அண்ணாசாலை, வாலாஜா சலை, காமராஜர் சாலையெங்கும் மனிதத் தலைகளாக காட்சி அளித்தது. இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை மெல்ல ஊர்ந்து 2 மணி நேரமாகக் கடந்த அவரது இறுதி ஊர்வலம் 6 மணிக்கு மேல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது.

அங்கு அவரது உடலுக்கு ராகுல் காந்தி, ஆளுநர் பன்வாரிலால், முப்படை தளபதிகள், சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேவகவுடா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி ராணுவத்தினரால் அகற்றப்பட்டு, மகன் என்ற முறையில் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, செல்வி, மு.க.தமிழரசு உட்பட குடும்பத்தினர் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் நீண்டகால நண்பர் பேராசிரியர் அன்பழகனை ஸ்டாலின் கைத்தாங்கலாக அழைத்து வந்தார். அவர் கருணாநிதிக்கு தனது இறுதி அஞ்சலியை மலர் தூவி செலுத்தினார்.

பின்னர் கருணாநிதியின் உடல் சந்தனப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது. சந்தனப்பெட்டியில் வைக்கப்பட்ட அவரது உடலில் குடும்பத்தார் உப்பு தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பெட்டி மூடப்பட்டது.

பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இரவு 7.10 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின், செல்வி, அழகிரி உள்ளிட்ட குடும்பத்தார் கதறி அழுதனர். தொண்டர்கள் “தலைவர் கலைஞர் வாழ்க” என்று கண்ணீர் மல்க கோஷமிட்டபடி இருந்தனர்.