இறந்த பிறகும் போராடி வெற்றி பெற்றார் கருணாநிதி; ஜெயலலிதாவும் பலன் அடைந்தார்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்ய தி.மு.க சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, பாமக வழக்கறிஞர் கே.பாலு மற்றும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் 5 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன. அந்த வழக்குகளை காரணம் காட்டித் தான் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்   நேற்று இரவே விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘‘நாங்கள் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் மெரினாவில் நினைவிடம் கட்டக் கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்தோம். எங்களது வழக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குவதற்கு இடையூறாக உள்ளது என அரசு தரப்பில் காரணம் கூறினால், நாங்கள் போட்ட வழக்கையே வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’’ என வழக்கறிஞர்கள் துரைசாமியும், கே.பாலுவும் அறிவித்து அப்படியே செய்தனர்.

அதேசமயம், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சார்பில் நள்ளிரவில் நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷின் வீட்டில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், “எங்களது தரப்பில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது என்ற வழக்கை நாங்கள் வாபஸ் பெறப் போவதில்லை. இதை டிராஃபிக் ராமசாமி சார்பில் முறையிடுவதற்காகத் தான் இங்கே வந்துள்ளேன்’’ என்றார். அப்போது அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு அவரை அடிக்கப் பாய்ந்ததால் நீதிபதியின் வீட்டுக்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டிராஃபிக் ராமசாமிக்காக ஆஜரான வழக்கறிஞரும் பின்வாங்க, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தடையாக இருப்பதாக தமிழக அரசு சுட்டிக்காட்டிய ப்ழைய வழக்குகள் அனைத்தும் விலகிப்போகும் நிலை ஏற்பட்டது.

இதை சற்றும் எதிர்பாராத  அரசு தரப்பு, பதில்மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கேட்டதால் வழக்கு இன்று காலை 8 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது. அரசு தரப்பில் வலிமையான வாதங்கள் வைக்கப்படுவதற்கு பதிலாக மொண்ணையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு பதிலடியாக திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர். இட ஒதுக்கீட்டுக்காக வாழ்நாளெல்லாம் போராடிய கருணாநிதி, இறந்த பிறகும் மெரினா இட ஒதுக்கீட்டுக்காக போராடி வெற்றி பெற்றுள்ளார் என்பதாக தி.மு.க.வினர் இதை கொண்டாடி வருகிறார்கள்.

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் தான் இந்த தீர்ப்பு சாத்தியமானது என்பதால், இனி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க சட்டத் தடங்கல் ஏதும் இல்லை என்ற வகையில், கருணாநிதிக்காக நடத்தப்பட்ட இந்த வழக்கில் அவரது அரசியல் எதிரியான ஜெயலலிதாவும் பலன் அடைந்திருக்கிறார்.