‘தொடரி’யிலும் தொடரும் வெற்றி செண்டிமெண்ட்!

டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், பல வெற்றிப்படங்களை தயாரித்து, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்நிறுவனம் தயாரித்த ‘மூன்றாம் பிறை’, ‘கிழக்கு வாசல்’, ‘பகல் நிலவு’, ‘இதயம்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற வெற்றிப்படங்கள் ரசிகர்களின் அமோக ஆதரவையும், விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றவை. மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை வாங்கிக் குவித்தவை. இன்றும் மக்களால் பேசப்படுபவை.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கும், ரயில் செண்டிமெண்டுக்கும் எப்போதுமே வெற்றித் தொடர்பு இருந்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த ‘மூன்றாம் பிறை’, ‘இதயம்’ ஆகிய படங்களின் கிளைமாக்‌ஸ் ரெயில் நிலையத்தில் தான் நடைபெறும். அவ்விரு படங்களும் அமோக வெற்றி பெற்றன.

கடந்த வாரம் இந்நிறுவனம் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ‘தொடரி’ திரைப்படம், ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, நல்ல வசூலை வாரிக் குவித்து வருகிறது. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த வெற்றிப்படமும் ரயிலோடு தொடர்பு கொண்டிருப்பது தான். “முதல் ரயில் திரைப்படம்” என பெயர் பெற்றிருக்கும் ‘தொடரி’, முதல் ஃபிரேமிலிருந்து கடைசி ஃபிரேம் வரை முழுக்க முழுக்க ரயிலிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.

“சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும், ரயிலும் இணைந்தால் வெற்றி நிச்சயம்” என்ற வெற்றி செண்டிமெண்ட், ‘தொடரி’ திரைப்படத்திலும் தொடருகிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது படக்குழு.

தற்போது அஜித் நடிக்கும் ‘அஜித் 57’ படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் ‘முடிசூடா மன்னன்’ படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படங்களிலும் செண்டிமெண்டாக ரயில் சம்பந்தப்பட்ட காட்சி இடம் பெறுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.