திருநாள் – விமர்சனம்

மதுரை என்றாலே ரவுடியிசம் என்ற தமிழ் திரையுலக இலக்கணத்தை சற்று மாற்றும் முயற்சியாக, தஞ்சை மற்றும் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் ரவுடியிசம் இருக்கிறது என்று சொல்வதற்காக வந்திருக்கிறது ‘திருநாள்’.

கும்பகோணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகித்சவா. அவரிடம் அடியாளாக வேலை பார்த்து வருகிறார் நாயகன் ஜீவா. சரத் லோகித்சவாவும், நாயகி நயன்தாராவின் அப்பா ஜோ மல்லூரியும் கூட்டு சேர்ந்து சாக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் கனவில் ஜீவா வந்து அவருக்கு தாலி கட்டுவது போன்று அடிக்கடி கனவு வருகிறது. அதனால், ஜீவாவை பார்த்தாலே கொஞ்சம் பயத்துடனே இருக்கிறார் நயன்தாரா.

நயன்தாராவின் பக்கத்து வீட்டுக்காரன், வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், அந்த வீட்டுக்கு தற்செயலாக செல்லும் நயன்தாராவை ரவுடி கும்பல் ஒன்று கடத்தி சென்றுவிடுகிறது. அப்போது, ஜீவா தனியொரு ஆளாக சென்று அந்த ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்து நயன்தாரா காப்பாற்றுகிறார்.

அப்போது, நயன்தாராவிடம் தான் அவரை நீண்ட நாட்களாக காதலிப்பதாக கூறுகிறார் ஜீவா. நயன்தாராவும் ஜீவா மீதுள்ள பயம் நீங்கி, அவரை காதலிக்க தொடங்குகிறார். இதெல்லாம் தெரியாத ஜோ மல்லூரி தனது மகளான நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது, ஜீவா-நயன்தாரா காதல் விவகாரம் வெளியே தெரியவர, நயன்தாராவின் நிச்சயதார்த்தம் நின்றுபோகிறது.

இதனால் மனமுடைந்த ஜோ மல்லூரி, சரத் லோகித்சாவாவுடன் சேர்ந்து செய்யும் தொழிலை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார். சரத் லோகித்சவாவிடம் சென்று, தான் முதலீடு செய்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்கிறார் ஜோ மல்லூரி. ஆனால், சரத்தோ, பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று ஜோ மல்லூரியை  திருப்பி அனுப்புகிறார். இப்படி அவர் ஜோ மல்லூரியை ஏமாற்றியது ஜீவாவுக்கும் பிடிக்கவில்லை.

இதனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரத்துக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து ஜோ மல்லூரிக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொடுக்கிறார் ஜீவா. இன்னொருபுறம்,  சரத் லோகித்சாவாவை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளும் திட்டத்துடன், போலீஸ் அதிகாரியான ‘நீயா நானா’ கோபிநாத் சாட்சியம் தேடி அலைகிறார்.

இந்நிலையில், தனக்கு எதிராக போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாலும், தன்னை காட்டிக் கொடுக்க போலீசில் சாட்சியாக மாறிவிடுவார் என்ற பயத்தினாலும், ஜீவாவை கொலை செய்ய சரத் முடிவு செய்கிறார். இதிலிருந்து ஜீவா எப்படி தப்பித்தார்? ஜீவா-நயன்தாரா காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

பிளேடு என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா, பிளேடை தனது வாயில் போட்டுக்கொண்டு ரவுடிகளை பந்தாடும் காட்சிகளில் எல்லாம் அழகாக நடித்திருக்கிறார். பிளேடை லாவகமாக தனது வாயில் போட்டு எடுக்கும் காட்சிகள் எல்லாம் சூப்பர். ஆக்ஷன் மட்டுமில்லாமல் ரொமான்ஸ், சென்டிமெண்ட் காட்சிகளிலும் அழகான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மற்ற படங்களைவிட இந்த படத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாகவும் இருக்கிறார்.

நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பெண்ணாக பார்த்ததில் அனைவருக்கும் சந்தோஷம். படம் முழுக்க பாவாடை, தாவணியில் பார்க்கும்போது ரொம்பவும் அழகாக இருக்கிறது. அதேபோல் துறுதுறு நடிப்பிலும் கவர்கிறார்.

தாதாவாக வரும் சரத் லோகித்சவா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஜோ மல்லூரி பொறுப்பான தந்தையாக மனதில் பதிகிறார்.

கோபிநாத் உப்புச்சப்பு இல்லாமல் ஓரிரு காட்சிகளே வந்து மறைந்து போகிறார். அவர் இனியும் நடிப்பைத் தொடர்ந்தால், தமிழ் சினிமாவுக்கு மூடுவிழா தான்.

தாய்மாமாவாக வரும் முனீஸ்காந்த் செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது. கருணாசின் கதாபாத்திரமும், நடிப்பும் மொக்கை. சகிக்க முடியவில்லை.

ஆக்ஷன், ரொமாண்டிக் கலந்த ஒரு கிராமத்து கதையாக படத்தை உருவாக்கியிருக்கிறார் பி.எஸ்.ராம்நாத். தனது முந்தைய படமான ‘அம்பா சமுத்திரத்தில் அம்பானி’ படத்திற்கு நேர் எதிராக இப்படத்தை கொடுத்திருக்கிறார். காதலுக்காக ரவுடி திருந்துவது என்ற பழங்கற்கால கதையை தேர்ந்தெடுத்தாலும், ஜீவா -நயன்தாராவை இப்படத்திற்காக சரியாக தேர்ந்தெடுத்து படத்தை ஓரளவுக்கு சரிக்கட்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக செண்டிமென்ட் காட்சிகளும் நிரம்பியிருக்கிறது.

ஸ்ரீ இசையில் ஒருசில பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கிறது. மெலோடியிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுக்கும் என நம்பலாம். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

‘திருநாள்’ – திருவிழா!